மத்திய அரசின் 6 இலட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை பணமாக்கும் திட்டம் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சாலைகள், ரயில்வே, தொலைதொடர்புத்துறை, சுரங்கங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல துறை நிறுவனங்கள் மூலமாக இந்த பணமாக்கும் திட்டம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை 7 ஆண்டுகளில் பாஜக அரசு விற்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இத்திட்டத்தை விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசின் தரப்பில் வெளியான பதிலில், நாங்கள் முழுமையாக அரசின் சொத்துக்களை விற்பனை செய்யவில்லை, குத்தகைக்கு மட்டுமே விடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர், “ சொத்துக்களை விற்பதன் மூலம் அரசுக்கு உள்ள உரிமையை முழுமையாக விட்டுக்கொடுப்பது என்பது செய்ய இயலாத காரியம். நமது தேவை இப்போது என்னவெனில், நிறைய புதிய சொத்துக்களை நாட்டுக்காகவும், நாட்டின் உள்கட்டமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும், வருங்காலத்துக்காகவும் உருவாக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த சொத்துக்களை உருவாக்க அனைத்துக்கட்சிகளுமே கடந்த காலங்களில் அரும்பாடுபட்டுள்ளனர். ஏற்கனவே இந்த சொத்துக்கள் சிறுசேமிப்பு, பிஎஃப் உள்ளிட்ட மக்கள் பணத்திலிருந்தே உருவாக்கப்பட்டன. இந்த சொத்துக்களில் இருந்து தற்போது வருமானம் கிடைக்கிறது. அதனை இன்னும் அதிகப்படுத்தவே இந்த திட்டம். அதற்காகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசின் சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுத்து, அதன் மூலமான பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சாலைகள், கேஸ் பைப்லைன், ஆயில் பைப்லைன், சோலார், காற்றாலை உள்ளிட்ட சொத்துக்கள் ‘இன்விட்’ மூலமாகவே குத்தகைக்கு விடப்படும். அதில் சாமானியர்கள் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். விமானத்துறை சொத்துக்களை அதானி வாங்குவார் என்பதால் சர்ச்சை எழுகிறது. அதுபோல சுரங்கங்கள் மூலமாகவும் பணத்தை உருவாக்கும் முயற்சியும் நடைபெறும். 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விமானத்துறை மட்டுமே அதானி வாங்குவார் என்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. மற்ற சொத்துக்களை வாங்குவதில் அனைத்து மக்களுமே பங்கேற்கலாம், இதில் சர்ச்சை இல்லை. இந்த இன்விட் மாடல் பொதுமக்களின் ஆதரவுடன் வளரும். பொதுமக்களுக்கு பலனளிக்கும் இத்திட்டம் ஜனநாயகத்தின் அடுத்தகட்டம் ஆகும்” என தெரிவித்தார்

image

இது தொடர்பாக பேசும் பொருளாதார விமர்சகர் பி.ஆர்.ஸ்ரீனிவாசன், “ இந்த திட்டம் மூலமாக மின்துறை, சாலைகள், ரயில்வே, விமானத்துறை உள்ளிட்ட சேவைத்துறைதான் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த சேவையின் குத்தகையை அதானி, அம்பானி வாங்குவார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல திட்டங்கள் அதானியிடம் கொடுக்கப்படுகிறது, இவர்களுக்கு தேவையானால் அதானியுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். ஆனால், இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகிறது. இந்த பணமாக்கும் திட்டம் மூலமாக பொதுசொத்தை விற்கக்கூடாது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்கின்றன. ஆனால் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் காங்கிரஸ் மத்திய அரசாக இருந்தபோது அரசு சொத்துகள் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்பட்டன. தற்போது நிர்மலா சீதாராமன் அரசின் சொத்துக்களை விற்கவில்லை, உரிமை மத்திய அரசிடம்தான் இருக்கும் என கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கேல்கேர் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படிதான் தற்போது இந்த சொத்துக்கள் குத்தகைக்கு விற்கப்படுகிறது, தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் இதனை எதிர்க்கிறது. ‘பிரவுன் ஃபீல்டு சொத்துகள்” எனப்படும் ஏற்கனவே உருவாக்கப்பட்டு குறைவான லாபம் தரும் சொத்துக்கள் மூலமாக அதிக வருமானம் ஈட்டவே இந்த திட்டம்” என தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.