கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியாக வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் கருதப்படும் நிலையில், அவரின் சகோதரர் தனபாலிடம் ஊட்டியில் காவல்துறையினர் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கனகராஜ்

Also Read: கொடநாடு விவகாரம்; கையில் எடுக்கும் சசிகலா? சட்ட ஆலோசனையில் யாருக்குக் குறி?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரின் தோழி சசிகலாவுக்கும் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளையில் 11 பேர் நேரடிக் குற்றவாளிகளாக காவல்துறையால் அடையாளம் கண்டறியப்பட்டாலும், சேலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜ், பாலக்காட்டில் நடந்த வாகன விபத்தில் உயிர் தப்பிய சயான் இருவரையும்தான் முதன்மைக் குற்றவாளிகளாக காவல்துறையினர் கருதுகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில் தொடர்ந்து பல பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டுவருகின்றன. தற்போது உச்சகட்ட திருப்பமாக, கடந்த வாரம் சயான் அளித்த மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது. வரும் 27-ம் தேதி சயானின் ரகசிய வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவிருக்கிறது. என்றாலும், தற்போதே நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது இந்த வழக்கு. இதன் அடுத்தகட்டத் திருப்பமாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் ஊட்டியில் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் நீலகிரி காவல்துறையினர்.

கனகராஜ் சகோதரரிடம் விசாரணை

இந்த விசாரணை குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக மறைந்த முன்னாள் முதல்வர் கார் டிரைவர் கனகராஜைக் கண்டறிந்தோம். விசராணை நடந்தபோதே வாகன விபத்தில் கனகராஜ் உயிரழிந்தார். தற்போது இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியிருந்தோம். இன்று ஊட்டிக்கு வரவழைத்து ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டோம். தேவைப்பட்டால் மீண்டும் இவரிடம் விசாரணை நடத்துவோம்” என்றார்.

இந்த விசாரணை தொடர்பாக தனபாலிடம் பேசினோம். “ஊட்டியிலுள்ள பழைய எஸ்.பி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானேன். என் சகோதரர் கனகராஜின் இறப்புக்கு எதிர்பாராத விபத்து காரணமல்ல. திட்டமிட்டே எனது சகோதரரைக் கொலைசெய்துள்ளனர்.

கனகராஜின் சகோதரர் தனபால்

என் சகோதரர் கனகராஜ் கொலைக்கும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. எனவே, இதை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறேன். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.