தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை முந்தைய அ.தி.மு.க அரசு நியமித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சூழ்நிலை, அதைத்தொடர்ந்து தூத்துக்குடி, அதன் சுற்றுப்புறத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 27 கட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கடந்த மே 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார் ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன். அந்த அறிக்கையில், இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டது.

விசாரணை ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன்

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்குக் காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.1 லட்சமும், இது தவிர ஒரு நபர் வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டதால் வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரின் 72 வயது தாய்க்கு ரூ.2 லட்சமும் நிவாரணத்தொகையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதையடுத்து, 2018, மே 22-ம் தேதிக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட (புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர) 38 வழக்குகளையும், அதுதொடர்புடைய 13 அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஒருநபர் ஆணையத்தின் 28-வது கட்ட விசாரணை கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி நிறைவுபெற்றது. ”இதுவரை நடைபெற்ற 28 கட்ட விசாரணைகளில் இதுவரை 1,153 பேருக்கு ஆணையம் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதில், 813 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணை

இதில், 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலிருந்தும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியிருந்தார். இந்த ஆணையத்தின் கால அவகாசத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியில் இருந்து இம்மாதம் 22-ம் தேதி (நேற்று) வரை நீட்டித்து ஏற்கெனவே ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஒரே நாளில் கோரிக்கையை ஏற்று பணிநியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி ஆட்சியர்

இந்த நிலையில், ’கொரோனா ஊரடங்கினால் விசாரணை தடை பட்டதாலும், இன்னும் 300 பேர் வரை விசாரிக்கப்பட உள்ளதாலும், ஆணையத்தின் கால அளவை நீட்டிக்க வேண்டும்’ என ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், (இன்று) 23-ம் தேதியில் இருந்தது அடுத்த ஆண்டு 2022, பிப்ரவரி 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ‘அடுத்த 6 மாதத்திற்குள் முழு விசாரணையை முடித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்’ என பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருநபர் விசாரணை ஆணைய முகாம் அலுவலகம்

இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று (23-ம் தேதி) தொடங்கியது. வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள், காயம்பட்ட காவலர்கள், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என 58 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `1,153 பேருக்கு சம்மன்; 813 பேர் ஆஜர்!’ – விசாரணை ஆணையம் தகவல்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.