மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா”

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 2: “ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்”

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 3: விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்!

முதல் நாள் பயிற்சிக்குச் செல்கிறாள் மீரா. ஒருசிலர் அவளை மிகவும் புதிதாகப் பார்க்கிறார்கள். பயிற்சியாளர் அனைவரையும் அழைத்து இந்தியில் பேசுகிறார்.

கோச்: “நான் விக்ரம் ரத்தோர். உங்க ஹெட் கோச். எனக்கு பெர்ஃபக்‌ஷன் ரொம்ப முக்கியம். டிசிப்ளின் ரொம்பவே முக்கியம். அதனால, நான் சொல்றதை எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க. இனிமேல் ஸ்போர்ட்ஸ் மட்டும்தான் உங்க வாழ்க்கை. வெயிட் லிஃப்டிங்தான் எல்லாமே. அதுதான் உங்க மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கணும். வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணுங்க, வெயிட்டைத் தூக்கும்போது இன்னும் வெறித்தனமா இருக்கணும். இங்க வெயிட்டைத் தூக்கு, கிரவுண்ட்ல பேக்கைத் தூக்கு, ரூமுக்குள்ள இருக்கியா, உன் ரூம் மேட்டைத் தூக்கிட்டு நடங்க. எப்பவுமே 70-80 கிலோ அதிகமா சுமக்கிற மாதிரி உடம்பை ரெடி பண்ணணும் ஓகேவா?!”

வீரர்களின் கண்களில் ஒருவித பயம் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நொடி கேப் விட்டு தொடர்கிறார்: “நீங்க யாரும் இங்க கிரிக்கெட் விளையாடவோ, கோல்ஃப் விளையாடவோ வரல… புரியுதா”

எல்லோரும் புரிகிறது என்று தலையாட்டுகிறார்கள்.

கோச்: “உங்க குடும்பத்துல யாராவது கடன் இல்லாம இருக்கீங்களா”

இப்போது எல்லோரும் இல்லை என்பதுபோல் தலையசைக்கிறார்கள்.

கோச்: “அது ஞாபகம் இருக்கட்டும். உங்களுக்கு மெடல் ஜெயிக்கனும்ன்றதுதான் முக்கியம். ஆனா, ஒண்ணை ஞாபகம் வச்சிக்கோங்க. ஒரு போடியத்துல 3 பேருதான் ஏற முடியும். அதுல நீங்க இருந்தே ஆகணும்னு முட்டாள்தானமா சொல்லமாட்டேன். ஆனா, ஒவ்வொருத்தராலையும் 100 % உழைப்பை கொடுக்க முடியும். கடைசி சொட்டு வியர்வை இருக்க வரைக்கும் போராட முடியும். எனக்குத் தேவை அதுதான்.”

எல்லோரும் ஒரு உத்வேகம் பிறந்ததபோல் நிற்கிறார்கள். மீரா மட்டும் மற்றவர்களின் முகத்தை மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்

கோச்: “போங்க போங்க ஸ்டார்ட் பண்ணுங்க. 100% கொடுக்கணும் புரியுதா”

எல்லோரும் பயிற்சி செய்ய நகர்ந்து போகிறார்கள்.

கோச்: “மீராபாய் சானு”

அவர் குரல் கேட்டு நிற்கிறாள் மீரா. திரும்பிப் பார்த்தால், தன்னை நோக்கி கோச் வந்துகொண்டிருக்கிறார்.

கோச்: “மணிப்பூர் ரைட்”

மீரா ஆம் என்பதுபோல் தலையாட்டுகிறாள்.

கோச்: “நான் சொன்னது புரிஞ்சுதா”

அமைதியாக நிற்கிறாள் மீரா.

கோச்: “இந்தி புரியலையோ”

மீரா: “கொஞ்சமாதான் தெரியும்”

லேசாக புண்ணகைத்த கோச், மீதேய் (மணிப்பூரின் மொழி) மொழியில் பேசத் தொடங்குகிறார்.

கோச்: “மெடலை விட 100% உழைப்புதான் முக்கியம்னு சொன்னது அவங்களுக்கு மட்டும்தான் உனக்கு இல்ல. நீ ஜெயிச்சே ஆகணும். ஜூனியர் ஆசியா டிரயல்ஸ்ல உன்னைப் பார்த்தேன். நீ 100% கொடுத்தா மட்டும் பத்தாது. 200% கொடுக்கணும். மெடலும் ஜெயிக்கணும். என்ன! நீ மெடல் ஜெயிச்சே ஆகணும்”

தன் தாய்மொழியில் பேசியதும் மீரா சந்தோஷம் கொள்கிறாள்.

மீரா: “மெடல் ஜெயிக்க 300% கூட கொடுப்பேன் சார்”

கோச்: “எல்லாத்தைவிட முக்கியமா நீ இந்தி கத்துக்கணும். இவங்களுக்கு மத்தியில், ஜெயிக்கிற வரைக்கும் நீ அனுசரிச்சுத்தான் போகணும். சீக்கிரம் இந்தி கத்துக்கோ”

தலையாட்டி நகர்கிறாள் மீரா.

CUT

ஓராண்டு முன்பு பட்டியாலா நேஷனல் கேம்ப்பில் சேர்ந்திருந்த சர்ஜுபாலா தேவியோடு நன்றாக நட்பாகிவிடுகிறாள் மீரா. குத்துச்சண்டை வீராங்கனையான அவர் ‘அடுத்த மேரி கோம்’ என்று பாராட்டப்பட்டார். யூத் உலக சாம்பியன்ஷிப் வென்றிருந்ததால், Olympic Gold Quest ஸ்கீமின் ஸ்பான்சர்ஷிப் அவருக்குக் கிடைத்திருந்தது. அவரின் நட்பு மீராவுக்கு பெரிய துணையாக இருந்தது. அவரிடமிருந்து இந்தி கற்றுக்கொள்ளத் தொடங்கினாள் மீரா.

சர்ஜுபாலா தேவி: “எனக்கும் வந்த புதுசுல இப்டித்தான் இருந்துச்சு மீரா. நீ தோத்தா கேலி பண்ணி அழவைப்பாங்க. ஜெயிச்சிட்டா பொறாமைப்பட்டு அடிக்கவே வருவாங்க. அவங்க அப்படித்தான். அவங்களுக்கு நாம வேறதான்”

மீரா: “அப்றம் எப்டிக்கா சமாளிச்ச”

சர்ஜுபாலா தேவி: “கிளவுஸ் போட்டுட்டு பௌட்டுக்குப் போனா நான் சரமாரியா அடிக்கணும்னு நினைப்பேன். அதேசமயம், நமக்கும் சரமாரியா அடி விழும். ரிங்குக்குள்ள அது சகஜம். அப்படி விழுற அடி மாதிரி இதையும் நினைச்சுக்க ஆரம்பிச்சேன். இங்க விழுற அடிக்கு ரிங்குல பதிலடி கொடுத்தேன். அதுதான் என்னை பெட்டரா மாத்தியிருக்கு”

மீரா: “ஆனா, என்னால அப்டி நினைக்க முடியுமா தெரியலையே. ஒவ்வொரு முறையும் மத்தவங்க பண்றதெல்லாம் யோசிக்கும்போது, வெயிட்டை என் கழுத்துல வச்சு அழுத்துற மாதிரில இருக்கு. என்னால யாரையும் குத்தவும் முடியாதே!”

சர்ஜுபாலா தேவி: “வேணா என்னைக் குத்தேன்”

இருவரும் லேசாகச் சிரிக்கிறார்கள். இந்தி டியூஷன் தொடர்கிறது.

CUT

இப்போது ஓரளவு இந்தி புரிந்துகொள்கிறாள் மீரா. இருந்தாலும், மற்றவர்கள் இவளைப் பார்ப்பதும், நடத்தும் முறையும் மாறவில்லை. மற்ற வட இந்திய வீராங்கனைகள் மீராவை தனித்தே வைத்திருந்தனர். அவர்கள் பார்வையிலேயே வித்யாசத்தை உணர்ந்தாள் மீரா. மீரா தூங்கும்போது அவள் ரூம் மேட்கள் நக்கலாக சிரிப்பது காதில் விழுந்தது. கிரவுண்டில் ஓடும்போது சில சீனியர் வீரர்கள் கேலி செய்தனர். மெஸ்ஸிலும் அவ்வப்போது அவள் அருகில் உட்கார்ந்து தொந்தரவு செய்கிறார்கள். இதை மீராவால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அதனால், நினைத்ததுபோல் மீராவால் தன் முழு உழைப்பையும் கொடுக்க முடியவில்லை. பயிற்சியில் முழு கவனமும் செலுத்த முடியவில்லை.

மெஸ்ஸில் ஒரு நாள். மீரா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். கொஞ்சம் தாமதமாக வந்த சில வீரர்கள் பிரச்னை செய்துகொண்டிருக்கிறார்கள்.

மெஸ் ஊழியர்: “நீங்க லேட்டா வந்தா நான் என்ன பண்றது. டைமும் முடிஞ்சிடுச்சு. சாப்பாடும் காலி!”

பிரச்னை செய்யும் வீரர் ஒருவர்: “யோவ் இதே உனக்கு வேலையாப் போச்சு. ரெண்டு நாள் முன்னாடியும் இப்டித்தான் பண்ணீங்க”

சரியாக அந்த நேரம் பார்த்து கிரேவி எடுத்துக்கொள்ள வருகிறாள் மீரா. அதைப் பார்த்த ஒருவர் சட்டென்று அவள் பிளேட்டைப் பிடிங்குகிறார்.

அந்த வீரர்: “சீனாவுக்கு ஆடப் போறளவுக்கெல்லாம் சாப்பாடு இருக்கு. இந்தியாவுக்கு ஆடப் போற எங்களுக்கு இருக்காதோ”

சொல்லிக்கொண்டே மீராவின் தட்டை டேபிள் மீது வேகமாக வைத்துவிட்டு மீண்டும் மெஸ் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மீராவுக்கு அதைக் கேட்டதும் கண்களில் நீர் தேங்கிவிடுகிறது. தன் பிளேட்டை எடுக்காமலேயே மெஸ்ஸில் இருந்து வெளியேறுகிறாள்.

CUT

வாத்தியார் வீடு. ஹாலில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சரியாக சிக்னல் எடுக்காத டி.வி-யின் முன் அமர்ந்துகொண்டிருக்கிறாள். தன் ரூமில் எக்ஸாம் பேப்பர்களைத் திருத்திக்கொண்டிருக்கிறார் வாத்தியார். காபி கொண்டுவந்து டேபிளில் வைக்கிறார் அவர் மனைவி.

வாத்தியார் மனைவி: “இன்னைக்கு சண்டேனு ஞாபகம் இருக்கா”

வாத்தியார்: “ஞாபகம் இல்லைனா இந்நேரம் கிளம்பி ஸ்கூலுக்குப் போயிருக்கமாடேனா”

வாத்தியார் மனைவி: “அதான”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது போன் அடிக்கும் சத்தம் கேட்கிறது. வாத்தியார் மனைவி உடனே ஹாலுக்குச் செல்கிறார்.

வாத்தியார் பேப்பரைத் காபியை எடுக்கையில், “ஹே மீரா எப்டி இருக்க” என்ற தன் மனைவியின் சத்தம் கேட்கிறது. காபியைக் கீழே வைத்துவிட்டு ஹாலுக்குச் செல்கிறார்.

வாத்தியார் மனைவி: “என்னடி சத்தமே வர மாட்டேங்குது”

மீரா: ”அம்மாவை கூட்டிட்டு வர்றீங்களா”

வாத்தியார் மனைவி: “என்ன ஆச்சு மீரா”

வாத்தியார்: “என்ன ஆச்சு. என்கிட்ட கொடு”

வாத்தியார் போனை வாங்குகிறார். “நான் போய் தாம்பியைக் கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வெளியே செல்கிறார்.

வாத்தியார்: “என்ன ஆச்சு மீரா?”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அங்கு நடப்பவற்றைக் கூறுகிறாள் மீரா.

வெளியே சென்ற வாத்தியாரின் மனைவி மீண்டும் வீட்டுக்குள் வருகிறார். நனைந்திருக்கிறார்.

வாத்தியார் மனைவி: “ஏ பிரியா அந்த குடை எடுத்துட்டு வா”

குடை எடுத்துக்கொண்டு வாத்தியாரை கடக்கிறாள் பிரியா. அப்போது “நானும் மீராகிட்ட பேசணும்” என்று சொல்லி நகர்கிறாள்.

வாத்தியார்: “இந்திலாம் கத்துலாம் மீரா. அதான் சர்ஜுன்ற பொண்ணு ஹெல்ப் பண்றானு சொல்றாள்ல. அவ கத்துக்கிட்டால, நீயும் கத்துக்கலாம்”

மீரா: “ரொம்ப கிண்டல் பண்றாங்க சார்”

வாத்தியார்: “மீரா, இங்க மரக்கட்டையைத் தூக்கிகிட்டு, லாரி மேல ஏறி தனியா பிராக்டீஸ் போன ஆளு. வாழ்க்கைகூட போராடுறதும் மனுஷங்ககூட போராடுறதும் வித்யாசம்தான். கஷ்டம்தான். ஆனா, மனுஷங்களுக்கு உன்னால திருப்பிக் கொடுக்க முடியும். உன்னோட அமைதியால, தைரியத்தால, வெற்றியால, பதிலடி கொடுக்க முடியும். போராடித்தான் ஆகணும் மீரா”.

நனைந்திருந்த தாம்பி தலையைத் துடைத்துக்கொண்டே உள்ளே வருகிறார்.

வாத்தியார் (போனில்) : “இரு அம்மா வந்துட்டாங்க”

“அழவேண்டாம்னு சொல்லுமா” எனச் சொல்லி தாம்பியிடம் போனைக் கொடுக்கிறார் வாத்தியார்.

தாம்பி: “மீரா”

மீராவுக்கு பேச்சே வரவில்லை.

தாம்பி: “பேசுடி தங்கம்”

தன்னைத்தானே தேற்றிக்கொண்டு உடைந்து குரலில் பேசத் தொடங்குகிறாள்

மீரா: “இவங்க பேசுறது புரிஞ்சிக்க முடியலமா. இங்க இருக்கவங்களும் என்னை புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க”

தாம்பி: “அழுடா அழு. நல்லா அழு”

தாம்பி அப்படிச் சொன்னதும் வாத்தியார் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்க்கிறார். அந்தப் பக்கம் மீரா மொத்தமாக உடைந்து அழுகிறாள். அந்தப் பக்கம் செல்லும் ஒருசில பெண்கள் அவளைப் பார்த்துச் செல்கிறார்கள். அழுகை தொடர்கிறது. இரண்டு நிமிடம் அழுகை தொடர்கிறது.

தாம்பி: “அழுது முடிச்சிட்டியா. ‘நீங்க சொல்ற மாதிரிலாம் நான் இருக்க மாட்டேனு’ சின்ன வயசுல சொல்வியே. இப்ப என்னடி பண்ற. பொம்பளைங்க எப்படி இருக்கணும்னு இந்த உலகம் சொல்லுச்சோ அப்டித்தான இருக்க”

மீரா அமைதியாக இருக்கிறாள்.

தாம்பி: “அழுவறது தப்பே இல்லடி. ஆனா, கண்ணீரோட மதிப்பு காரணத்துலதான் இருக்கு. நீ இப்ப சிந்துற கண்ணீருக்குக் காரணம் இருக்காணு யோசி. இருந்துச்சுனா இன்னும் எவ்ளோ நேரம் வேணா அழு. நான் கேக்கறேன்”

மீராவின் அமைதி தொடர்கிறது.

தாம்பி: “இல்லைல இப்போ நீ என்ன பண்ணப் போற?”

இரண்டு நொடிகளில் போன் கீழே வைக்கப்படும் சத்தம் கேட்கிறது. தாம்பியும் போனை கீழே வைத்துவிட்டு வெளியே செல்கிறார். வெளியேறும் தாம்பியை பார்க்கிறார் வாத்தியார். தூரத்தில் மின்னல் வெட்டுகிறது.

CUT

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா”

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 2: “ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்”

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 3: விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.