‘பூஸ்டர் டோஸ்’ என்ற வாசகம் இப்போது அதிகம் பிரபலமாகி வருகிறது. ‘கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் போட்டுக்கொண்ட பிறகு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது பாதுகாப்பு’ என பல நாடுகள் பேசிவருகின்றன.

கொரோனாவின் தீவிர பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையா? மருத்துவ அறிவியல்பூர்வமாக இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு என்ன?

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி

நம் தேசம் தற்போது கொரோனா இரண்டாம் அலைக்கும் மூன்றாம் அலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இருக்கிறது. இது, இரு பரபரப்பான காலங்களுக்கு இடையே நிலவும் அமைதியான காலம். இந்த நேரத்தில் தடுப்பூசியை விரைவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நம் கவனம் இருக்க வேண்டும்.

இந்தியாவில் இதுவரை 50 கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். என்றாலும், நமது மக்கள்தொகையில் இரண்டு தவணைத் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்கள் 11 கோடிப் பேர் மட்டுமே. இன்னும் பெரும்பான்மை மக்களைத் தடுப்பூசி சென்று சேர வேண்டியுள்ளது என்பது நம் முன்னே இருக்கும் பெரும் சவால்.

இந்நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய தேசங்களும் அமெரிக்காவும் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் பற்றிப் பேசுகின்றன. மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யாவில் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்கெனவே பூஸ்டர் டோஸ் போடத் தொடங்கிவிட்டார்கள். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் விரைவில் தர உள்ளன.

Also Read: மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவையா?

‘பணக்கார நாடுகள் மூன்றாவது ஊக்கத் தவணை குறித்து இப்போதே முடிவுசெய்வது தவறு. இன்னும் ஏழை நாடுகளில் முதல் தவணை பெறாத மக்களே பெரும்பான்மை இருக்கிறார்கள். இந்நிலையில் வளர்ந்த நாடுகள் தடுப்பூசியை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல், அதிகம் கொள்முதல் செய்து தங்களின் பக்கம் திருப்பிக்கொள்வது சுயநலன் மிக்க செயல்’ என உலக சுகாதார நிறுவனம் கண்டித்திருக்கிறது. வளர்ந்த உலக நாடுகள் வரும் செப்டம்பர் 2021 இறுதி வரையாவது இந்த பூஸ்டர் டோஸ் வழங்கும் முடிவைத் தள்ளிப்போட வேண்டும் எனக் கோரியிருக்கிறது. ஆயினும் வளர்ந்த நாடுகள் இதைக் கேட்பதாக இல்லை.

கொரோனா தடுப்பூசி

‘மூன்றாவது பூஸ்டர் டோஸின் தேவை நிச்சயம் இருக்கிறது’ என்று சொல்லும் ஆய்வுகளால், ‘அது எப்போது தேவை’ என்பது குறித்த ஒருமித்த கருத்தை வழங்க இயலவில்லை.

உலகின் பெரும்பான்மை நாடுகளில் உபயோகிக்கப்படும் ஆஸ்ட்ரா செனிகா / கோவிஷீல்டு தடுப்பூசியைக் கண்டறிந்த நிறுவனம், மூன்றாவது டோஸ் ஊக்கத் தவணையை வழங்கி ஆய்வு செய்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது. அதில், ‘மூன்றாவது ஊக்கத்தவணையும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது’ என்று கூறியிருக்கிறது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து முப்பது வாரங்கள் கழித்து மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பீட்டா வேரியன்ட் என்று கூறப்படும் தென் ஆப்ரிக்காவில் உதயமான உருமாறிய கொரோனா வைரஸின் அடிப்படையில் உற்பத்தி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்று

கோவேக்சின் தடுப்பூசியைக் கண்டறிந்துள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டோருக்கு ஆறு மாதம் கழித்து மூன்றாம் தவணை வழங்கி ஆய்வு நடத்திவருகிறது.

ஏனைய நிறுவனங்களான ஃபைசர், மாடெர்னா ஆகியவையும் பூஸ்டர் டோஸ் ஆய்வில் இறங்கியுள்ளன. ‘மூன்றாவது தவணைத் தடுப்பூசி தேவை’ என்றே தடுப்பூசியை உற்பத்தி செய்துவரும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்ற மக்களிடையே தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அவர்களுக்கு ஏற்படும் கொரோனா நோய்த் தொற்றுகள், அதன் வீரியம், புதிதாகத் தோன்றும் வேரியன்ட்டுகள் ஆகியவற்றை வைத்து மூன்றாவது டோஸ் வழங்கும் முடிவை உலக நாடுகள் எடுக்கக்கூடும்.

தற்போது வரை வெளிவந்துள்ள ஆய்வுகளின்படி, இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு தீவிர கொரோனாத் தொற்றிலிருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கிறது. இது குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிலைக்கிறது என்பது தெரிகிறது.

இன்னும் 75% மக்களுக்கு மேல் முதல் தவணைத் தடுப்பூசியைப் பெறாத நமது நாட்டில், மூன்றாவது தவணை குறித்த முடிவை மிகக் கவனமாக மட்டுமே எடுக்க முடியும். காரணம், மூன்றாம் அலை ஏற்படுவதற்குள் முடிந்த அளவு அதிகமான மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி கிடைக்கச் செய்வதே நமது முக்கிய யுக்தியாக இருக்கிறது. இரண்டு தவணைத் தடுப்பூசியும் பெற்று முழுமையான பாதுகாப்புடன் இருக்கும் மக்கள்தொகை 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இந்தியாவில் உள்ளது.

கொரோனா

குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட பணக்கார நாடுகள் எடுக்கும் முடிவுகளை, நம்மைப் போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட வளரும் நாடுகளால் எடுக்க இயலாது. என்றாலும், நம் அரசு தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் கொள்முதல், இறக்குமதியைப் பல நிலைகளிலும் மேம்படுத்த வேண்டும். இந்திய மக்கள்தொகையிடையே மூன்றாவது பூஸ்டர் டோஸின் தேவை குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும். அப்படி ஒரு தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், முதியோர்கள், 45 வயதுக்கு மேற்பட்டு இதய நோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு ஆகிய நோய்களினால் அவதியுறுவோர்க்கு மூன்றாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.