தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) நடத்திய AI கேம்சேஞ்சர்ஸ் (AI Gamechangers) உச்சிமாநாட்டில் தமிழ்நாட்டின் இ-பார்வை செயலி சிறப்பு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கல்வி, வேளாண்மை, மருத்துவம் போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மத்தியில் இ-பார்வை செயலி இந்தியாவின் சிறந்த 3 முன்மாதிரிகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு கோடி பேருக்கும் அதிகமான மக்கள் பார்வை இழந்து அல்லது பார்வைக் குறைபாட்டுடன் வாழ்கிறார்கள். தேசிய பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைபாடு தடுப்புத் திட்டம் (National Programme for Control of Blindness & Visual Impairment (NPCBVI)) நடத்திய கணக்கெடுப்பில் கண்புரை, கிளைக்கோமா, நீரிழிவால் ஏற்படும் ரெட்டினோபதி, ஓரக்கண் பார்வை போன்ற பல்வேறு பார்வை குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளன.

கண்புரையை கண்டறியும் இ-பார்வை செயலி

அதில் கிட்டத்தட்ட 70% மக்களின் கண் பார்வை சார்ந்த பிரச்னைக்கு கண்புரை முக்கிய காரணமாக இருக்கிறது. கண்புரை இருந்தால் முதலில் பார்வையில் மேகமூட்டமாக இருப்பதுபோல் தோன்றும். பின் மங்கலான பார்வையை ஏற்படுத்தி, காலப்போக்கில் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2011 தொடங்கி இதுவரை 1,05,60,681மக்கள் கண்புரை சிகிச்சையால் பயன்பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் 2021-2022-ல் மட்டும் இதுவரை சுமார் 3,25,546 பேர் கண்புரை சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் 12,000 கண் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். கிராமப்புறங்களில் 2,50,000 மக்களுக்கு ஒரே ஒரு கண் மருத்துவர் மட்டுமே இருக்கிறார்.

இத்தகைய சூழலில், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மருத்துவர்களை அணுகி கண்புரைக்கான சிகிச்சையை மேற்கொள்வதில் அதிக சவால்கள் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, பல மக்களுக்கு இருக்கும் கண்புரை பிரச்னை கண்டறியப்படாமல் போகின்றன. இதனால் மருத்துவ வசதிகளற்ற கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தவிர்க்க முடியாத பார்வை இழப்புக்கும் பார்வை குறைபாட்டுக்கும் ஆளாகின்றனர்.

கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பார்வையின்மை ஏற்பட 66.2% வாய்ப்புகளும், கடுமையான பார்வைக் குறைபாடு ஏற்பட 80.7% வாய்ப்புகளும் மற்றும் மிதமான பார்வைக் குறைபாடு ஏற்பட 70.2% வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்புரை

எனவே, தமிழ்நாடு பார்வை இழப்பு கட்டுப்பாட்டு சங்கம் (Tamil Nadu State Blindness Control Society) தங்கள் மருத்துவ ஊழியர் பற்றாக்குறையை முன்னிறுத்தி தமிழ்நாடு மின்னாளுமை முகமையை (TNeGA) அணுகியதால் இ-பார்வை செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி செயற்கை நுண்ணறிவு கொண்டு கண்புரை இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதையும் தாண்டி அதன் வீரியத்தையும் கணிக்கிறது.

களப்பணியாளர்கள் அல்லது மருத்துவர்கள் ஒரு நோயாளியின் கண்களை புகைப்படம் எடுத்து பதிவேற்றினால், அவருக்கு முதிர்ந்த கண்புரை, முதிர்ச்சியற்ற கண்புரை, ஐஓஎல் அல்லது எந்தப் பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துவிடுகிறது. இ-பார்வை செயலி செயற்கை நுண்ணறிவால் இயங்குவதால், மருத்துவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுக்கான நேரமும், நோயாளியின் காத்திருப்பு நேரம், மன அழுத்தம் மற்றும் பரிசோதனைக்கான செலவுகள் தவிர்க்கப்படுகிறது.

இ-பார்வை செயலி தன் முடிவை தெரிவித்தவுடன் அது அந்தந்த மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு அறிக்கையாக வந்தடைகிறது. அதைத் தொடர்ந்து கண்காணிக்க தமிழ்நாடு பார்வை இழப்பு கட்டுப்பாட்டு சங்கம் (Tamil Nadu State Blindness Control Society) பொறுப்பேற்று, 30 நாள்களில் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

இந்தச் செயலியை வெற்றிகரமாகவும் ஆற்றல்மிக்கதாகவும் உருவாக்க தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தொழில்நுட்ப வல்லுநர்களாக சங்கர் நாகராஜன், ப்ரியஞ்சித் கோஷ், சொக்கலிங்கம் முத்தையன் மற்றும் தமிழ்நாடு பார்வை இழப்பு கட்டுப்பாடு சங்கத்தின் உறுப்பினரான மருத்துவர் சந்திரகுமார் ஆகியோர் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

இ- பார்வை செயலி மூலம் பரிசோதனை

Also Read: `20 லட்சம்பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை; தமிழக அரசின் `மக்களைத் தேடி மருத்துவம்’ செய்யப்போவது என்ன?

இதற்கான நோயாளிகளின் கண்புரை தரவுகளைப் பெற மதுரை அரவிந்த் மருத்துவமனை உதவியது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தச் செயலியை நாகப்பட்டினம், கடலூர் போன்ற 14 மாவட்டங்களில் சோதனை செய்து வெற்றிகண்டுள்ளனர். பிப்ரவரி 2021-ல் இ-பார்வை செயலியின் பயன்பாடு தொடங்கியது. இதுவரை 1,400 நோயாளிகள் இதில் திரையிடப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.

இ-பார்வை செயலி தமிழ்நாட்டில் வசிக்கும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கண்புரைக்கான சிகிச்சையை எளிமையாக்குவதுடன் மூத்தகுடிமக்களின் சிரமங்களை தவிர்த்துவிடும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

இ-பார்வை செயலி வரும் ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் `தமிழக அரசின் 100 நாள்கள்’ விழாவின்போது அதிகாரபூர்வமாக மக்கள் சேவையில் இணைக்கப்படும். மேலும், தமிழக முதல் அமைச்சர் அறிவித்த `மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இ-பார்வை செயலி மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.