டோக்கியோ ஒலிம்பிக்கில் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த பஜ்ரங்கின் மல்யுத்த வாழ்க்கையின் பயணங்கள் மலைக்கத்தக்கது.

65 கிலோ எடைப் பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பெக்கோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. முதல் 3 நிமிடங்களில் இரு வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இதையடுத்து, தனது அபார திறமையை வெளிப்படுத்திய பஜ்ரங் புனியா புள்ளிகள் மேல் புள்ளிகள் குவித்தார். இறுதியில் 8-0 என்ற புள்ளி கணக்கில் வென்று நடப்பு ஒலிம்பிக் தொடரில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு 3-வது பதக்கத்தை வென்று தந்தார். பஜ்ரங் புனியாவின் வெற்றியை, ஹரியானாவில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

65 கிலோ எடைப்பிரிவில் அசத்திய பஜ்ரங் 27 வயது. இறுக்கி முறுக்கேற்றப்பட்ட தேக அமைப்பு. ஹரியானாவைச் சேர்ந்த பஜ்ரங்கின் புஜபலம் எதிராளியை சாய்க்க வல்லது. கடந்த 3 ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று, சர்வதேச அளவில் ஸ்திரமான வெளிப்பாட்டைக் காண்பித்து வ‌‌‌‌‌ந்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 பதக்கங்கனை வென்றுள்ள இந்தியாவை சேர்ந்த ஓரே வீரர் பஜ்ரங் தான்.

image

ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் கூட தமது புஜபலத்தை நிரூபித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 61 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், 2018ஆம் ஆண்டு 65 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றிருக்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என பதக்கங்களை அடுக்கியிருக்கிறார்.

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள குடான் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையும் மல்யுத்த வீரரே. சிறுவயதில் பிற விளையாட்டுகளில் பங்கேற்க உபகரணங்கள் வாங்க பணம் இல்லாததால் கபடி, மல்யுத்தம் போன்ற பொருட்செலவு இல்லாத விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார். மல்யுத்த களத்தில் சாதிக்கத் தொடங்கி இன்று ஒலிம்பிக் நாயகனாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். கீதா போகத், பபிதா, வினேஷ் போகத் சகோதரிகளில் ஒருவரும் சக மல்யுத்த வீராங்கனையுமான சங்கீதா போகத்தையே மணந்திருக்கிறார் பஜ்ரங்

சர்வதேச தரநிலையில் 2 ஆவது இடத்தில் உள்ள பஜ்ரங்கின் புஜபலம், எந்த நாட்டு வீரரையும் சாய்க்கும் ஆற்றல் படைத்தது. 6 நிமிடங்கள் வரை இழுக்காது தமது இரும்புக் கரங்களைக் கொண்டு எதிராளியை இறுக்கிப் பிடிக்கும் ஆற்றல் பஜ்ரங்-கிடம் இருந்தது. ஆனால் ஒலிம்பிக் களம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை.

கிர்கிஸ்தான் வீரர் அல்நாசருக்கு எதிரான முதல் சுற்றே பஜ்ரங்கிற்கு சவால் நிறைந்ததாக இருந்தது. அந்தப்போட்டியில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார் பஜ்ரங். காலிறுதியில் ஈரான் வீரர் மொர்டாசா கியாஸி-யை எதிர்த்து பஜ்ரங் வெற்றி பெற்றார். எதிராளியை சாய்த்து வெற்றி பெறும் ஃபால் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் பஜ்ரங்.

அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவ்-விடம் எளிதில் தோல்வியுற்றார். இதனால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் போட்டியில் தம் இரும்புக்கரங்களால் 8-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றுமொரு பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் மாவீரன் பஜ்ரங்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.