மும்பையைச் சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. “இனி நான்காவது முறையாக பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி. மும்பையின் முலுன்ட் பகுதியில் உள்ள வீர் சாவர்க்கர் என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பே இவர் செய்திகளில் இடம்பிடித்து இருந்தார். கொரோனா வார்டில் மருத்துவராக பணியாற்றி வந்த ஸ்ருஷ்டி ஹலாரிக்கு, கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வந்தவர், சில நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8 -ம் தேதி, இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ம் தேதி என குடும்பத்துடன் செலுத்தியிருந்தார் ஹலாரி.

image

தடுப்பூசி செலுத்திய நம்பிக்கையில் இருந்தவர், மீண்டும் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திய அடுத்த ஒரு மாதத்தில் இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். முதல் முறை பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வந்த கொரோனா பாதிப்பு, இரண்டாம் முறை லேசான அறிகுறிகளுடன் வந்தது. இதையடுத்து தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் ஹலாரி. ஒரு சில நாளில் குணமடைந்தவர், வீட்டில் ஓய்வு எடுத்த நிலையில் மூன்றாம் முறையாக ஜூலை 11-ம் தேதி மீண்டும் கொரோனா பாதிப்புக்குள்ளானார்.

முதல் இரண்டு முறைபோல் இல்லாமல் மூன்றாம் முறை ஹலாரி கொரோனா பாதிப்புக்குள்ளானபோது அவருடன் சேர்த்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

image

குஜராத்தின் தோலேராவை பூர்விகமாக கொண்ட இவரின் குடும்பமே டாக்டர் குடும்பம். இவரின் பெற்றோர்கள் மருத்துவர்களாக இருந்து வரும் நிலையில் அவரது தம்பி தவால் தற்போது எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். ஹலாரி மும்பை மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக வேலையை விட்டு வந்தபோதுதான் இத்தனை முறை அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ஹலாரி, “ மூன்றாம் முறை பாதிப்பு ஏற்பட்டபோதுதான் நான் மிகுந்த கடினமான நிலையை எதிர்கொண்டேன். ஏனென்றால் என்னுடன் சேர்ந்து எனது குடும்பத்தில் மற்றவர்களுக்கும் பாதிப்பு வந்தது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து எடுக்கும் நிலைக்கு ஆளானோம். எனது சகோதரருக்கு சுவாச பிரச்சனைகள் இருந்ததால் இரண்டு நாள் செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை எடுத்துக்கொண்டார். பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளோம். இனி நான்காம் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட விடமாட்டேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

image

ஹலாரிக்கு மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த பிரஹன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பிற வல்லுநர்கள், இந்த சம்பவம் அரிய சம்பவமாக கருதி, சிறப்பு சிகிச்சை அளிக்க உதவினர். மேலும், ஹலாரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மும்பை மருத்துவ நிபுணர்கள் சிலர், “ தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு பாதிப்பு ஏற்படாது என்பதில்லை. தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். மோசமான பாதிப்புகளில் இருந்து தடுப்பூசி பாதுகாக்கும்” என்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.