`தோ பார்ரா இது இன்னும் நிக்குது’ என்று கூறி சுற்றியிருப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். தனுஷ் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருப்பார். இந்த காட்சியை தனுஷின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கிக்கொண்ட கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்!

மழித்த மீசை; பென்சில் தேகம்; அப்பாவி முகம்; விட்டுப்போகாத விடலைப்பருவம்.. இப்படியான  உருவத்தோற்றம் கொண்ட ஒருவரை 19 வருடம் கழித்து உலக சினிமாவே கொண்டாடப்போகிறது என்று அப்போது யாராவது கூறியிருந்தால், `உளறாதீங்க சார்!’ என்று தான் பதில் வந்திருக்கும். ஆனால், விடலை வேய்ந்த அந்த இளைஞனிடத்தில்  ஒல்லியான தேகம் மட்டுமல்ல.  அடர்த்தியான ஒன்றும் இருந்தது. அது தான் அவருடைய உழைப்பு; சமரசமில்லாத உழைப்பு!

காதல்கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில்  `இவனெல்லாம் ஹீரோவா?’ எனக்கூறி சுற்றியிருக்கும் கூட்டமே சிரிக்கும்போது,  விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாத அந்த வயதில் என்னவெல்லாம் யோசித்திருப்பார் தனுஷ். `சினிமாவே வேண்டாம்’ என்று கூட யோசித்திருக்கலாம். ஆனால், காலம் அவரை கைபிடித்து அழைத்து வந்து, ஹாலிவுட் வரை  சேர்த்திருக்கிறது.

நாயக பிம்பங்களை உடைத்த கலைஞன் :

பதின்பருவ இளைஞர்களின் பாலியல் கிளர்ச்சி, எல்லை மீறல், கட்டுப்பாடற்ற மோகம் என தமிழ் சினிமா பேசாத விஷயங்களை பேசியது `துள்ளுவதோ இளமை’. விடலை பருவத்துக்கு ஏற்ற உடல்மொழி தனுஷூக்கு இயல்பாகவே கைகூடி வந்திருக்கும். அடல்ட் படம் என்று கூறி கலவையான விமர்சனங்கள் பெற்ற இந்த படத்தில் தனுஷ் அவரது தோற்றத்துக்காக கிண்டல் செய்யப்பட்டார்;  ராணுவ அதிகாரியாக வரும் காட்சிகள் அவருக்கு முற்றிலும் பொருந்தவில்லை என விமர்சிக்கப்பட்டார். இருந்தும் தளரவில்லை. அடுத்த ஆண்டே `காதல் கொண்டேன்’ வினோத்தாக வந்து மிரட்டினார். துள்ளுவதோ இளமை படத்தைபோல இருக்கும் என நினைத்து சென்றவர்களுக்கு  வேறுமாதிரியான அனுபவத்தை கொடுத்தது `காதல் கொண்டேன்’.

image

பழைய புட்டி கண்ணாடி, அதே மெலிந்த தேகம், எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட இளைஞனான தனுஷை பார்த்தவர்களுக்கு வினோத்தான் கண்ணுக்குத் தெரிந்தான். இருளரையில் வெளிப்பட்ட வெண்திரை முழுக்க பரவியிருந்தது அந்த ஒல்லி தேகம். `யாருயா இவன் இப்படி நடிக்கிறான்’ என்ற முணுமுணுப்புகள் திரையரங்கை ஆக்கிரமித்தன.

கிண்டல் செய்த வாய்கள் பாராட்டை பரிசாக்கின. உண்மையில் தனுஷூக்கு அது நல்ல தொடக்கமாக இருந்தது. இருப்பினும் செல்வராகவன் துணையில்லாமல் தனியொரு நடிகனாக தன்னை நிரூபித்துக்கொள்ள வேண்டிய தேவையும் தனுஷூக்கு அப்போது இருந்தது.

 அதை தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வழியே நிரூபிக்கவும் செய்தார். நடிப்பு வராது என்ற விமர்சனைத்தை உடைத்த கையொடு, நடனமும் அத்துப்படி என்பதை உறுதி செய்ய, திருடா திருடி படத்தில் `மன்மத ராசா’பாடலில் இறங்கி அடித்தார்.  `நம்மள மாதிரியே இருக்காறே’ என இளைஞர்கள் தங்களை தனுஷூடன் எளிதாக கனெக்ட் செய்ய ஆரம்பித்தனர். அது தனுஷூக்கு இன்னொரு ப்ளஸ்!

வாகான உடல் தோற்றம், எடுப்பான நிறம் என்ற ஹீரோக்களுக்கே உண்டான அந்நியத்தன்மையை அடித்து உடைத்தது மட்டுமல்லாமல், பக்கத்துவீட்டு பையனைப்போல காட்சியளிக்கும் அவரது தோற்றம் மூலமாக திரையில் தங்களையே  பார்த்தாக உணர்ந்தனர் தமிழக இளைஞர்கள்.   சுள்ளான், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள்  தனுஷின் இளைஞர் ரசிகர் பட்டாளத்தை பெருக்கியது.

செல்வராகவேனே நினைத்தாலும் மீண்டும் இப்படியொரு படத்தை இயக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு தரமான படமாக வெளியானது புதுப்பேட்டை. `கொக்கி குமாரு’ கதாபாத்திரம் அதுவரை பார்த்திராத வேறுபட்ட தனுஷை கண்முன்னே நிறுத்தியது. படத்தை பார்க்காமல் ஒன்லைனை மட்டும் கேட்டு, `தனுஷை வைத்து கேங்க்ஸ்டர்’ படமா? என்று நினைக்க தோன்றலாம். ஆனால், படத்துக்கு கச்சிதமாக பொருந்திருப்பார் தனுஷ்.

எளிய மக்களுக்கான கலைஞன்

அடுத்து வந்த பொல்லாதவன், வெற்றிமாறன் – தனுஷ் வெற்றி காம்போவின் தொடக்க புள்ளி. பல்சர் பிரபலமான காலகட்டம் அது. விளிம்பு நிலை இளைஞர்களின் ஆசை, தேவையையொட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே அடித்தட்டு விளிம்பு நிலை மக்களை பிரதிபலிக்கும் கலைஞனாகத்தான் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பார் தனுஷ்.

பணக்கார, ஃபாரின் எக்ஸ்பர்ட் போன்ற எந்த ஆடம்பர கதாபாத்திரத்தையும் அவரது படங்களில் பார்க்க முடியாது. சுள்ளான், திருவிளையாடல் ஆரம்பம், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி,  மரியான், தேவதையை கண்டேன்,  ஆடுகளம், வடசென்னை, அசுரன், கரணன் வரை நாம் பார்த்து, பழகிய ஒருவரைப்போன்ற கதாபாத்திரத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

பொல்லாதவனைத்தொடர்ந்து `யாரடி நீ மோகினி’ `படிக்காதவன்’ `குட்டி’ `உத்தம்புத்திரன்’ என கமர்ஷியலில் வலம்வந்தவர், மீண்டும் ஆடுகளத்துக்குள் புகுந்து தேசிய விருதை அள்ளினார். அங்கீகாரம் கிடைக்காத கலைஞனின் வலிகளை பதிவு செய்த `மயக்கம் என்ன’ படம் நல்ல விமர்சனத்தை பெற, அடுத்து 3 படத்தின் `கொலவெறி’ பாடலின் வழியே ட்ரெண்டானார். உலகம் அவரை உற்று நோக்கத் தொடங்கியது. அன்றைக்கு யூடியூப் ட்ரெண்டிங்கை தொடங்கியவர் தான் இன்றைக்கும் `ரௌடி பேபி’ பாடல் மூலமாக ட்ரெண்டிங்கில் நீடித்திருக்கிறார்..

ராஞ்சனா, ஷமிதாப் என பாலிவுட்டுக்கும் `தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபக்கிர்’  படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். `பவர் பாண்டி’ மூலமாக தன்னை ஒரு தேர்ந்த இயக்குநராகவும் அடையாளப்படுத்திக்கொண்ட தனுஷ், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் தன்னை பரிணமித்துக்கொண்டார்.

37 வயதில் 40க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள், 28 வயதில் தேசிய விருது என 20 ஆண்டுகளில் தனுஷ் சாத்தியப்படுத்தியது ஏராளம். இரண்டு தசாப்தங்களில் தமிழ்சினிமாவை திருப்பி போட்ட நடிப்பு அசுரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.