‘நாரப்பா’, ‘வக்கீல் சாப்’ என தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான ரீமேக் படங்கள் ரசிகர்களை தாண்டி சில விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பாக சற்றே விரிவாக அலசுவோம்!

ரீமேக் என்பது எப்போதும் சவாலான விஷயம்தான். காரணம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்காக, அவர்களின் ரசனைகளுக்கு ஒப்ப எடுக்கப்பட்ட திரைப்படங்களை, அப்படியே அதன் சாரம் குறையாமல் சம்பந்தபட்ட வேறொரு மொழி மக்களுக்கு திரைவிருந்து படைப்பதற்கு கூடுதல் சிரமமும் கவனமும் தேவை. அப்படியான கவனங்கள் குறையும்போது ரீமேக் செய்யப்பட்டும் திரைப்படங்கள் படுதோல்வியையும் விமர்சனங்களையும் சந்திக்கின்றன.

image

அந்த வகையில், பாலிவுட்டில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே படம், ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியானது. அதேபோல, தமிழில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் அண்மையில் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இரண்டு திரைப்படங்களும் அதீத எதிர்பார்ப்புகளுடன் வெளியாகின. முதலில் பவன் கல்யாணின் ‘வக்கீல் சாப்’ படத்தை எடுத்துக்கொள்வோம். ஒரிஜினல் கன்டென்டை அப்படியே எடுத்து, அதன் அடர்த்தி குறையாமல் படமாக்குவதென்பது டோலிவுட் இயக்குநர்களுக்கு சிரமமான ஒன்றுதான். கடந்த காலங்களில் பல்வேறு இயக்குநர்கள் இதில் தோல்வியை தழுவியுள்ளனர். பவன் கல்யாணின் ரசிகர் கூட்டம் ‘வக்கீல் சாப்’ படத்தை பாக்ஸ் ஆபிஸ் வின்னராக மாற்றியது.

image

அதேநேரத்தில், அந்தப் படம் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. சொல்லப்போனால் பவன் ரசிகர்கள் பலருக்குமே படம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகள். தெலுங்கில் மட்டும் கூடுதலாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டன. இதுபோன்ற சில கூடுதல் காட்சிகள், படத்தை அதன் போக்கிலிருந்து மடைமாற்றிவிடுகின்றன. இது ‘பிங்க்’ படத்தின் அடர்த்தியை முற்றிலும் குலைத்துவிட்டதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.

அதேபோல ‘அசுரன்’ ரீமேக்கான ‘நாரப்பா’வில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. காட்சிக்கு காட்சி ‘அசுரன்’ படத்தை அப்படியே பிரதியெடுத்து வைத்திருந்தார் இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா. இருந்தாலும் இந்தப் படமும் விமர்சனத்திற்குள்ளானது. காரணம், வெங்கடேஷ் மற்றும் பிற நடிகர்கள் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தாலும், ரீமேக்கில் படத்தில் ஆன்மா இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

image

தெலுங்கு பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படம் சரியாகத் தழுவப்படவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அசல் ‘அசுரன்’ ஏற்கெனவே பலரால் பார்க்கப்பட்டது. அதேபோல ஃபிரேம்-டு-ஃபிரேம் இருந்த காட்சிகள் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்திவிட்டது.

எனவே, ‘வக்கீல் சாப்’ திரைப்படம் அதன் மாற்றங்களுக்காக விமர்சிக்கப்பட்டது. அதேபோல ‘நாரப்பா’ அதன் ஃபிரேம்-டு-ஃபிரேம் ரீமேக்குக்காக விமர்சனத்துக்கு உள்ளானது. இது டோலிவுட் தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கே தவறு நடந்தது என்று அவர்கள் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ரீமேக்கின்போது மாற்றங்கள் செய்ய வேண்டுமா, செய்யக்கூடாதா என்பதல்ல விஷயம். படத்தின் ஆன்மாவை அதற்கே உண்டான உணர்ச்சிகளுடன் ரசிகர்களுக்கு கடத்துவது, சம்பந்தபட்ட மாநில ரசிகர்களுக்கு ஏற்றவாறு படத்தை கொண்டுசேர்ப்பதுதான் இங்கிருக்கும் முக்கியமான சவால். அப்படியான படங்கள்தான் ரீமேக்கை மறக்கடித்து வெற்றியை சாத்தியப்படுத்துகின்றன. அது தவறும் பட்சத்தில் மேற்கண்ட விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றன.

– மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.