இன்றைய நாள்களில் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டி சென்று கொண்டுள்ளது. அரசியல் கட்சியினரும் போர்க்கொடி தூக்கத் தொடங்கிவிட்டனர். எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெட்ரோல் விலை உயர்வால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இக்கட்டான இந்தச் சமயத்தில், விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் (33) என்ற இளைஞர், 1 யூனிட் மின்சாரத்தின் மூலம் 50 கி.மீ செல்லக்கூடிய மிதிவண்டி ஒன்றை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

பாஸ்கரன்

இதுகுறித்து பாஸ்கரனிடம் பேசினோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். எனக்கு அம்மா மட்டும்தான். நான் குழந்தையா இருந்தப்பவே அப்பா தவறிட்டாரு. பெரியப்பா, சித்தப்பா, அக்காக்கள் வளர்ப்பில்தான் வளர்ந்தேன். நாங்க அண்ணன், தம்பி ரெண்டு பேரு. நான்தான் மூத்த பையன். அம்மா டைலரிங் பண்ணுவாங்க. அதுல வரும் வருமானத்தை வைத்துதான் எங்களை படிக்க வச்சாங்க. 2010ல நான் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடிச்சேன். அப்புறமா சில தனியார் கம்பெனிகளில் வேலை செய்தேன். ஒரு வருஷம் முடிச்சதுமே வேலையை விட்டு அனுப்பிடுவாங்க. அப்படி வேலை செய்யும் நேரத்துலயும், கம்பெனிக்குச் சின்ன சின்னதா ப்ராஜெக்ட் செய்து கொடுத்திருக்கேன். எனக்கு ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்னு தோணும்.

வேலை இல்லாமல் இப்ப வீட்லதான் இருக்கேன். அதிகமாக மைலேஜ் தர மாதிரி ‘பேட்டரி சைக்கிள்’ செய்யணும் அப்படின்னு ரொம்ப நாள் ஆசை. கடந்த 10 வருஷமா ட்ரை பண்ணி பல முறை தோல்வி அடைந்திருக்கிறேன். நான் படிக்கும்போது ப்ராஜெக்ட் பண்ணுறப்போ இந்த ஐடியாவை ஆசிரியர்கிட்ட சொன்னேன். ‘உன்னால எதுவுமே முடியாது. நீ எதுக்கும் லாயக்கு இல்லாதவன்’னு சொன்னாரு. ஆனால் அக்காவும், நண்பர்களும் ஊக்கம் கொடுப்பாங்க. அதுல இருந்து ஏதாவது சாதிக்கணும்னு தோணுச்சு. ஆரம்பத்துல பேட்டரி சைக்கிள் செய்யும்போது, லெட் ஆசிட் பேட்டரி மற்றும் ஃபேன் (fan) மோட்டாரை சைக்கிளில் பொருத்தி இயக்கி பார்த்தேன். அடிக்கடி மோட்டாரில் காயில் தீய்ந்து போய்டும். என்ன பிரச்னை அப்படின்னு பார்த்தபோது சின்ன சின்ன மாறுதல்கள் தேவைப்பட்டன. அதை எல்லாம் ஒவ்வொண்ணா சரி பண்ண ஆரம்பிச்சேன். கடந்த மூன்று வருடமாகத்தான் அதிக அளவில் ஈடுபாட்டை வெளிப்படுத்தினேன் ஒரு வழியா… 1 யூனிட் சார்ஜ் பண்ணினால் 50 கி.மீ போகிற மாதிரி பேட்டரி சைக்கிளை வடிவமைத்துட்டேன். லித்தியம் ஃபெரோ பாஸ்பஸ் எனும் பேட்டரியை நானே அசெம்பிள் பண்ணினேன். இந்த பேட்டரி 24 வோல்ட், 18 A/H திறன் கொண்டது.

Also Read: 1 ரூபாயில் பேட்டரி மெயின்டனன்ஸ் டிப்ஸ்! Do It Yourself #Episode2

பேட்டரியுடன் பாஸ்கரன்

250 வாட்ஸ் மற்றும் 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்தியுள்ளேன். இந்த பேட்டரி சைக்கிளை முழுமையாக செய்து முடிப்பதற்கு 20,000 ரூபாய் வரை செலவானது. இதில் அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். சார்ஜ் தீர்ந்துவிட்டால் பெடல் செய்து கொண்டுவர முடியும். மோட்டாரில் இயங்கும்போது அவ்வப்போது நாமும் பெடல் செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும். தற்போது, அது கியரில் இயங்கும்படி மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இது என்னுடைய நான்காவது சைக்கிள். இதற்கு முன்பாக மூன்று சைக்கிளில் சோதித்து பார்த்திருக்கிறேன்.

இந்த பேட்டரியை 2,000 முறை சார்ஜ் பண்ண முடியும். ஒரு நாளைக்கு ஒருமுறை என்று பார்த்தால் கூட 5 வருடம் பயன்படுத்த முடியும். யாராவது செய்துத்தரும்படி கேட்கும் பட்சத்தில், சீல்டு அனைத்தும் பொருத்தி 25,000 ரூபாய்க்கு தரமுடியும். இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. சீக்கிரம் நல்ல வேலைக்குப் போய்விடுவேன். அப்போது குறைந்தபட்சம் வருடத்திற்கு 5 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற பேட்டரி சைக்கிளை செய்து இலவசமாக கொடுக்கணும் என்பதுதான் என்னுடைய கனவு.

Also Read: வந்தாச்சு ‘ரீசார்ஜ் ஸ்பிரேயர்’…போயாச்சு பெட்ரோல் செலவு !

மறைந்த, சேலத்தைச் சேர்ந்த ஹேமலதா அண்ணாமலை பேச்சுக்கள்தான் எனக்கு மோட்டிவேஷன். ‘எவ்வளவு தோல்வி வந்தாலும் பயப்படாத. தொடர்ந்து போராடு. கண்டிப்பா ஒரு நாள் வெற்றி வரும்’ என்று எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. இது போன்ற வார்த்தைகள்தான் என்னை வழிநடத்தி வந்தன” என்றார்.

தொடரட்டும் முயற்சி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.