திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் பகுதியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மீஞ்சூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த மேகநாதன் (47) என்பவர் கடந்த 10 வருடகாலமாக நகை மதிப்பீட்டாளராகப் பணி புரிந்து வருகிறார். மேகநாதன் மீஞ்சூர் பகுதியில் கவரிங் நகைக் கடையும் நடத்தி வருகிறார்.

10 வருடகாலமாக அதே வங்கியில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் வங்கி ஊழியர்கள் அனைவருடனும் மேகநாதன் மிகவும் இணக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும், அந்த வங்கியில் மேலாளர்கள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்பட்டு விடுவதால் மேகநாதனின் கையே ஓங்கியிருந்திருக்கிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் கடந்த சில வருடங்களாகத் தான் நடத்தி வரும் கவரிங் தங்க நகைக் கடையிலிருந்து போலி நகைகளை ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரிடம் கொடுத்து, அவர்களை வங்கியில் புதிதாகக் கணக்கு தொடங்கச் செய்து, பின்னர் போலி நகைகளுக்கு உண்மை நகைகள் என்று சான்றளித்துப் பல கோடி ரூபாய் பண மோசடி செய்து வந்துள்ளார்.

மேகநாதன்

நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்து சான்றளிக்கும் நகைகளுக்குத் தங்க நகைக் கடன் வழங்கப்பட்டு விடும் என்பதால் மேகநாதன் கடந்த 2 வருடங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலி வாடிக்கையாளர்களின் போலி நகைகளுக்குத் தங்க நகைக் கடன் வழங்கி சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கியில் மோசடி செய்துள்ளார். ஆனால், அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் வங்கி மேலாளர்கள் நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களும் தங்க நகைக் கடன் விவகாரத்தில் அலட்சியமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், யூனியன் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் மீஞ்சூர் கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் கணக்குகளைச் சரிபார்த்து, நகைகளை மதிப்பீடு செய்திருக்கின்றனர். அப்போது, வங்கி லாக்கர்களில் ஏராளமான போலி தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து, வங்கியின் தங்க நகைக் கடன் விவரங்களை ஆராய்ந்திருக்கின்றனர். அதில், போலி வாடிக்கையாளர்கள் மூலம் மேகநாதன் நூதன முறையில் 4 கோடியே 52 லட்சம் ரூபாயினை கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் மற்றும் கிளை மேலாளர் பிர்லா பிரசாத் தாஸ் ஆகியோரிடம் வங்கி உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அதில், இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் தணிக்கை அதிகாரிகள் நகை மோசடி குறித்து திருவள்ளூர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் தக்க ஆவணங்களுடன் புகார் அளித்தனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் புகாரைப் பெற்றுக் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், புகாரை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

அதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், காவல் ஆய்வாளர் லில்லி மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் சூரியகுமார் மற்றும் வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேகநாதனைக் கைது செய்து பொன்னேரி கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி விட்டதால் நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, மேகநாதனை போலீஸார் புழல் மத்தியச் சிறையில் அடைத்தனர். நகை மதிப்பீட்டாளர் மேகநாதனை போலீஸார் கைது செய்து விட்ட நிலையில், வங்கி கிளை மேலாளர் பிர்லா பிரசாத் தாஸுக்கு யூனியன் வங்கி தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் யூனியன் வங்கி கிளையில் அடமானத்திற்கு வைத்த நகைகளைத் திருடி விட்டதாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சண்முகம் என்பவர் மீது ஏராளமான வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், யூனியன் வங்கியின் மற்றொரு கிளையில் அரங்கேறியுள்ள இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ‘தங்கப்பரிசு தருகிறேன்’ – கோவையை அதிரவைத்த முகநூல் மோசடி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.