ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டையின் கிழக்கு கோட்டைச் சிறையிலிருந்து தப்பித்த நிகழ்வை, டிஜிட்டல் வழியாக மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது நெல்லை அரசு அருங்காட்சியகம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகமொன்று செயல்படுகிறது. இங்கு அரிய வகை பொருட்கள் என பழங்காலத்து போர்க்கருவிகள், பீரங்கி குண்டுகள், ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள், பழங்குடிகளின் இசைக்கருவிகள் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

image

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்களின் கிழக்கு கோட்டையாக இருந்தது. அப்போது கோட்டையின் ஒரு பகுதி, சிறைக்கூடமாக இருந்தது. அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தவர்தான், இன்று இந்த இடத்தின் பெருமதிப்பிற்கு காரணமாய் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை.

இதுநாள் வரை அந்த அறையில் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை படங்கள் மட்டுமே இருந்து வந்தன. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு முன்னெடுப்பால் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக ஊமைத்துரை சிறைக்கூடமானது டிஜிட்டல் உதவியுடன் மிகச் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை பகுதி, சுதந்திரத்திற்கு முன் பாளையக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. சுதந்திரப் போரில் பாளையக்காரர்களை ஒன்றிணைத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருக்கு துணையாக நின்று போர் உத்திகளை மிகவும் சிறப்பாகக் கையாண்டவர் ஊமைத்துரை என அழைக்கப்படும் குமாரசாமி.

image

சுதந்திரப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட ஊமைத்துரை, ஒரு வருடத்திற்கும் மேலாக இன்றைய அருங்காட்சியகம் உள்ள இந்த கிழக்கு கோட்டையில் வெள்ளையர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த ஊமைத்துரை சிவகங்கையில் வாழ்ந்த மருது சகோதரர்களுடன் யாரும் அறியா வண்ணம் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார்.ஆயிரத்து எண்ணூற்று ஒன்றாம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியன்று மாறுவேடத்தில் வந்த வீரர்களின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்று, பின் ஒரு வாரத்தில் இரண்டாவதாக மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கட்டினார் ஊமைத்துரை.

இந்தச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, அரசு அருங்காட்சியகத்தில் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருந்த அறையை டிஜிட்டல் திரைக்கூடமாக மாற்றியுள்ளனர் அரசு அதிகாரிகள். குறிப்பாக ஊமைத்துரை தன் ஆதரவாளர்கள் உதவியுடன், வெள்ளையர்களின் காவல் கடுமையாக இருந்த கோட்டைச்சிறையில் இருந்து எப்படித் தப்பிச் சென்றார் என்பதை காணொளியாக முப்பரிமாணத்தில் தயார் செய்துள்ளனர். ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும் இந்த காணொளி, காண்பவரை ஊமைத்துரையின் அருகிலிருந்து அன்று நடந்த நிகழ்வுகளை நாம் அருகில் பார்க்கும் உணர்வைத் தரும்.

image

டிஜிட்டல் மயமான சிறைக்கூடத்தை விட்டு நாம் வெளியே வந்தாலும், உள்ளே இன்னும் ஊமைத்துரை சிறையில் இருக்கிறார் என்ற உணர்வை தரும்படியாக உள்ளது இந்த டிஜிட்டல் முயற்சியின் வெற்றி. இதைக் காணும் மாணவர்கள், பொதுமக்கள் சுதந்திரத்திற்காக போரிட்டவர்களின் மதி நுட்பத்தை உணர்ந்துகொள்வதற்கு மிகப்பெரும் உதவியாக இந்த காட்சித் தொகுப்பு அமைந்திருக்கிறது.

விரைவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ள ஊமைத்துரையின் டிஜிட்டல் சிறைக்கூடம், மீண்டும் நம்மை சுதந்திரப் போராட்ட காலத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.