பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் மீது 19 வயது மாணவி ஒருவர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 30-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிபிசிஐடிக்கு இந்த வழக்கை மாற்றியதை அடுத்து சிபிசிஐடி போலீசார் கெபிராஜை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். atccbcid@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது வாட்ஸ்அப் எண் 9498143691 வாயிலாகவோ புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிப்பவரின் பெயர் மற்றும் புகார் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்கை கடந்த 22-ம்தேதி சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கெபிராஜிடம் ஜூடோ பயிற்சி பெற்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் கெபிராஜ் மீது 363 கடத்தல், 365 கடத்தி வைத்து மிரட்டல், 366 பலவந்தமாக ஒரு பெண்ணை திருமணத்திற்காக கடத்தி செல்லுதல், 354 வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல், 354 (யு) (2)(3) பெண்ணுக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டப்பிரிவுகள் 8, 10, 126 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார் கொடுத்த பெண் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் வீடியோ மூலமாக வாக்குமூலம் பதிவு செய்து நடவடிக்கை எடுத்ததாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கெபிராஜ் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த போக்சோ சட்டத்தில் தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.