BS Value ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மேதகு’ மெச்சத்தகுந்த பாராட்டுகளை குவித்து வருகிறது. முதல் படத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அழுத்தமாகச் சொல்லி ‘ஹிட்’ அடித்திருக்கிறார், இப்படத்தின் இயக்குநர் தி.கிட்டு. உலகத்தமிழர்களால்  கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் ‘மேதகு’ படம் குறித்து கிட்டுவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,

முதல் படமே சவாலான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

  “கமர்ஷியல் படங்களைவிட நம்முடைய வரலாற்றைப் பேசக்கூடிய படங்களை எடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம். 20 வருடங்களுக்கு முன்பு ’இரணியன்’ படம் எடுத்தார்கள். தமிழ் சமூகத்திற்கு சொல்லவேண்டிய வரலாறே இதுபோன்ற கதைகள்தான். ஆனால், எடுப்பதில்லை என்ற ஏக்கம் மனதில் இருந்து வந்தது. ’இதுதான் உண்மை வரலாறு, நம் தமிழர்களை அழித்தார்கள்’ என்பதை சொல்லிக்கொண்டே இருந்தால் சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கும் தமிழர்கள் நாம் தமிழராக இணைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், 2009 ஆம் ஆண்டு நடந்த போருக்குப்பிறகு சின்ன சின்ன குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். எனக்கு பெரிய அளவில் சினிமா நாலேஜ் தெரியாது. சினிமா சம்மந்தமான நிறைய புத்தகங்களைப் படித்தேன். 2016 ஆம் ஆண்டுக்குப்பிறகுதான் சினிமாவை எப்படி காண்டிபிக்க முடியும், எப்படி படமாக எடுக்கலாம் என்ற தெளிவு வந்தது. ’மேதகு’ உருவானது”.

இந்தளவிற்கு கொண்டாடப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?

“தமிழக மக்களுக்கு ஈழம் என்றாலே 2009 ஆம் ஆண்டில் நடந்த போர்ச்சூழல் சம்பவங்கள்தான் அதிகம் பதிந்திருக்கின்றன. ஆனால், தமிழர்கள் ஏன் ஆயுதம் நோக்கிச் சென்றார்கள் என்ற அரசியல் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். அதனால், இலங்கையில் நடந்த மத அரசியல் என்ன? தமிழர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டார்கள்? போன்ற காரணங்களே முதலில் மக்களிடம் போய் சேரவேண்டும் என்று நினைத்தேன். ’மேதகு’ மூலம் சேர்ந்துவிட்டதில் மகிழ்ச்சி. ஆனால், படம் இந்த அளவுக்கு ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை”.

பிரபாகரனின் இளமைப் பருவத்தை மட்டுமே பதிவு செய்ய என்னக் காரணம்?

   “பகத் சிங் மனதில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது ஜாலியன் வாலாபாக் படுகொலை. ரத்தம் ஓடிய அந்த மண்ணை எடுத்துக்கொண்டு ஆயுதப்போராட்டத்திற்குத் தயாரானார். சாதாரணமாக ஒருவர் ஆயுதப் போராட்டத்தை நோக்கி சென்றுவிட மாட்டார். தம் மக்கள் தன் கண்ணெதிரே தாக்கப்படுவதைப் பார்க்கும் இளைஞர் ஆயுதப்போராட்டத்தை நோக்கி செல்வது என்பது உலக எதார்த்தம். தலைவர் பிரபாகரனும் அப்படித்தான் சென்றார். அவர் மனதில் பதிந்த துயரத்தின் வடுக்களை பதிவு செய்யவே  இளமை காலத்தை தேர்ந்தெடுத்தேன். 2013 ஆம் ஆண்டு தலைவர் மகன் பாலச்சந்திரனை கொலை செய்து புகைப்படத்தை வெளியிடும் வன்மம் எப்படி வந்தது? இதற்கு, பின்னால் இருக்கும் அரசியலை உறுதியாக பேசவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருந்தது.  அதனால், எந்தெந்த சம்பவங்களால் தலைவர் பாதிக்கப்பட்டாரோ அந்தந்த சம்பவங்களை  மிகச்சரியாக இணைத்து சொன்னேன்”.

image

மறக்க முடியாத பாராட்டு எது?

”1965 ஆம் ஆண்டிலிருந்து, இந்த வலியில் சம்மந்தப்பட்ட நேரடியாக பாதிக்கப்பட்ட, உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அடிவாங்கிய மக்களில் பலர் எனக்கு தொடர்ந்து போன் செய்து பாராட்டுகிறார்கள். வயதான புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் போனில் அழைத்து “தம்பி நீங்கள் காட்டியது அனைத்தும் உண்மை. இந்த சம்பவங்களை, நாங்கள் பட்டத் துயரங்களை யாரும்  வெளியில் சொல்லிடமாட்டாங்களா என்று ஏங்கிக்கொண்டே இருந்தோம்” என்றுக்கூறி விடாமல் ஒன்னரை நிமிடம் அழுதுகொண்டே இருந்தார். எனக்கு வார்த்தை வரவில்லை. எத்தனையோ பிரபலங்கள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட  மக்களின் பாராட்டுக்கு இணையான உலக மொழி பாராட்டு எதுவுமே கிடையாது. பொதுவாக இந்தப் படத்தை ஈழ உணர்வுள்ளவர்களுக்குத்தான் பிடிக்கும் என்றார்கள். தற்போது அனைத்து தமிழர்களுக்கும் பிடித்து விதிகளை உடைத்திருக்கிறது” வரலாற்றைச் சொல்வதில் முன்பை விட இப்போது பொறுப்பு வந்துள்ளது”..

சிறு வயதிலிருந்தே இயக்குநர் ஆக நினைத்தீர்களா? இல்லை… பிரபாகரன் பயோபிக்கை இயக்கவே இயக்குநர் ஆனீர்களா?

”சிறுவயதில் சினிமா ஆர்வமெல்லாம் இல்லை. மேடை நாடகம் ரொம்ப பிடிக்கும். அதற்காக, இயக்குநர் ஆகவேண்டும் என்று நினைக்கவில்லை. 2013 ஆம் ஆண்டுக்குப்பிறகுதான் தலைவர் வரலாறை சொல்லவேண்டும் என்ற ஆணித்தரமான எண்ணம் வந்தது. நம் வரலாற்றைச் சொல்ல நான் சினிமா தளத்தைப் பயன்படுத்திக் கொண்டேன் என்று சொல்லலாம். ’மேதகு’ படத்தின் க்ளைமேக்ஸைதான் முதலில் குறும்படமாக இயக்கினேன். வரவேற்பை பெற்றதால், ’உலகத் தமிழர்களிடம் நிதி திரட்டி படமாகவே எடுக்கலாம்’ என்று சுமேஷ் குமார், குமார் அண்ணன்கள் ஊக்குவித்தார்கள்”.

படத்திற்காக, இலங்கை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தீர்களா?

”இதுவரை ஈழத்திற்குச் சென்றதில்லை. இனிமேல் சென்றாலும் விடமாட்டார்கள். ஆனால், வரலாற்றை  படிக்கும்போது இந்த இடங்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். அதோடு, வரலாற்று ரீதியான தகவல்களைத் திரட்ட இரண்டு வருடங்கள் உழைத்தேன். அதையெல்லாம் வைத்துதான் உருவாக்கினேன்”.

image

இதே பட்ஜெட்டில்  ஸ்டார் நடிகர்களை வைத்து படம் எடுக்க முடியுமா?

”எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னுடைய கதைகளுக்கு ஸ்டார் வேல்யூ தேவையில்லை. ’மேதகு’ படத்தைப் பொறுத்தவரை தலைவர்தான் ஸ்டார். அவரதுக் கொள்கைகளே ஸ்டார் வேல்யூ. இதன்பிறகு எடுக்கப்போகும் படமாக இருந்தாலும், வரலாற்று பதிவுகளாக இருந்தாலும் ஸ்டார்  நடிகர்களை நடிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நடிக்க வைக்கும்போது நடிகரின் வேல்யூதான் அதிகமாக இருக்கும். அவரை வைத்து சொல்லப்படவேண்டிய கதை போய்விடும். ’அவர் நடிச்ச படத்தை பார்த்திருக்கீங்களா என்பதைவிட, இந்த சம்பவத்தை அந்தப் படத்தில் தெளிவா சொல்லிருக்காங்க’ என்பதுதான் முக்கியம்”.

உங்கள் அடுத்தப்படம் ’மேதகு’ படத்தின் தொடர்ச்சியா?

” ’மேதகு’ படத்தை தயாரிக்க தமிழீழ திரைக்களத்தை சுமேஷ் குமார், குமார், நான் என மூன்று பேர் சேர்ந்துதான் ஆரம்பித்தோம். எங்களோடு,  உலகத்தமிழர்கள் பலரும் நிதியுதவி செய்துள்ளனர். அதனால், இப்படத்திற்கு தயாரிப்பாளர் என்று யாரும் கிடையாது. பணம் இல்லாமல் படம் பாதியிலேயே நின்றபோது ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த அண்ணன் ரமேஷ் 40 சதவீதம் அளவிற்கு நிதியுதவி அளித்து பேருதவி செய்தார். ”எல்லா படத்திலும் பட்ஜெட் எகிறித்தான் போகும். நீங்கள் தலைவர் படத்தை எடுப்பது மகிழ்ச்சி. என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்” என்று ஊக்கப்படுத்தினார். அவர், வருவதற்குமுன்பு வட்டிக்கு வாங்கியும் படத்தை எடுத்தோம். ஆனால், ரமேஷ் அண்ணன் ’நீங்கள் வட்டிக்கட்ட வேண்டாம். உங்களால் எப்போது முடியுமோ அப்போது கொடுங்கள்’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். கடைசி நேரத்தில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான ரமேஷ் அண்ணனின் நல்ல உள்ளத்தால் ‘மேதகு’ சாத்தியமானது. படத்திற்கு கிடைத்துள்ள பாராட்டுக்களால் எங்கள் குழுவினர் அனைவருக்கும் தற்போது பெரிய சந்தோஷம். தமிழீழ திரைக்களம் குழுவாக சேர்ந்து விவாதித்துவிட்டு விரைவில் இரண்டாம், மூன்றாம் பாகம் குறித்து அறிவிப்பார்கள். டென்மார்க்கில் இருக்கும் சுமேஷ் குமார் அண்ணன் கடைசிவரை எங்களை ஒற்றுமையாக அரவணைத்து வழிநடத்தினார். படத்தின் வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது”.

சென்சாருக்குச் சென்றால் தடை விழும் என்பதால் ஆரம்பத்திலேயே ஓடிடியை முடிவு செய்தீர்களா?

  “ஆரம்பத்திலேயே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றே முடிவு செய்து எடுத்தோம். இந்தியாவில் தலைவர் படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டார்கள். ஏகப்பட்ட சிக்கல் வரும். ஒன்லி பாஃர் ஓடிடி என்றே எடுத்தோம்”.

image

’தி ஃபேமிலி மேன் 2’, ‘ஜகமே தந்திரம்’ பார்த்தீர்களா?

“பார்த்தேன். தவறாகத்தான் சித்தரித்துள்ளார்கள். தலைவர் சொன்ன மாதிரிதான் ”எந்த ஆயுதத்தால் தாக்கினார்களோ, அதே ஆயுதத்தால் திருப்பி அடிப்போம். தமிழர் மேல் கைவைத்தால் திருப்பி அடிப்போம் என்ற அச்சத்தை உண்டு பண்ணவேண்டும். எங்கள் உண்மையான வரலாறை, அதே ஆயுத்தால் தாக்குவோம். கமர்ஷியலுக்காக எதையும் எடுக்கக்கூடாது. உறுதியாகச் சொல்கிறேன். இவர்களுக்கு, ’மேதகு’ அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். உலகிலேயே ஒழுக்கமான ராணுவம் விடுதலைப்புலிகள்தான். ஆனால், அவர்களையே தவறாக காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது”.

’மேதகு’ படத்திற்கு எதிராக ஈழத்தை வைத்து படம் எடுத்து சம்பாதிப்பதாக சீமானின் ஆடியோ வெளியானதே?

”அந்த ஆடியோ அண்ணன் எப்போது பேசினார் என்பது எனக்குத் தெரியாது. அதனால், அதுகுறித்து பேச விரும்பவில்லை. அண்ணன் தற்போது ஊரில் இல்லாததால் இன்னும் படம் பார்க்கவில்லை.  இனிமேல் பார்த்துவிட்டு பேசுவார்”.

இந்திய விடுதலை காந்தியை மையப்படுத்தியே இருந்தது. ஆனால், சுபாஷ் சந்திரபோஸால் ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று கூறுவது சரியானதா?

“இது தலைவர் சொன்னதுதான். அதனால், அவரின் பேச்சுவழக்கு கருத்துக்களை வைத்தே வசனம் அமைத்தேன்”.

ஏற்கனவே, ஈழத்தில் இருந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் குறித்து பதிவு செய்யவில்லை என்ற விமர்சனங்களும் வருகிறதே?

“நான் எடுத்தக் கதைக்களம் தலைவருடையது மட்டும்தான். அவரை பாதித்த சம்பவங்களையே முதலில் பதிவு செய்ய நினைத்தேன். இப்போது வரக்கூடிய தலைமுறையினர் எடுப்பார்கள். படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்”.

உங்களை ஈர்த்த பயோபிக் எது?

”வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை வரலாறான ‘இரணியன்’ படம் பிடிக்கும். தத்ரூபமாக எடுத்திருந்தார்கள். அதோடு, நேரடியாக பெயரைச் சொல்லாமல் எம்.ஜி.ஆர்-கலைஞரைப் பற்றி வெளியான  ’இருவர்’ படமும் பிடிக்கும்”.

வேறு யாருடைய பயோபிக் எடுக்க விருப்பம்?

“வேலு நாச்சியார், முத்துராமலிங்கம், பூலித்தேவன், மருது சகோதரர்கள் என பலரின் வாழ்க்கை வரலாற்றையும் எடுக்க மிகப்பெரிய ஆசை”.

image

(மனைவி பூங்குயிலுடன் இயக்குநர் கிட்டு)

உங்களைப்பற்றிய அறிமுகம்?

  “எனக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டத்திலிருக்கும் மஞ்சம்பட்டி கிராமம். தாத்தா அடைக்காலம் ஒரு கூத்துக்கலைஞர். ஆனால், அந்தச் சூழலிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து கால்நடை மருத்துவரானார் எனது அப்பா திருப்பதி. அப்பாவின் பணிச்சூழலால் குடும்பத்தோடு தஞ்சாவூரில் குடிபெயர்ந்துவிட்டோம். பி.டெக், எம்.டெக் பயோ டெக்னாலஜி படித்துவிட்டு தனியார் கல்லூரியில் ஐந்து வருடம் அமைப்பியல் துறையில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தேன். அதன்பிறகு,  பணியை ராஜினாமா செய்துவிட்டு சினிமா தளத்தில் இறங்கிவிட்டேன்.

 தலைவர் வரலாற்றை சொல்லவேண்டும் என்ற பெருங்கனவை என் மனைவி பூங்குயில்தான் ஊக்கம் கொடுத்து நிறைவேற்றினார். எம்.டெக் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி முடித்தள்ள மனைவி ‘நான் குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். நீங்க உங்கள் கனவை நிறைவேற்றுங்கள்’ என்று ஒத்துழைப்புக் கொடுத்து பெரிய சப்போர்ட் செய்தார். அவரின் ஊக்கம் இல்லையென்றால் என்னால் சாதித்திருக்க முடியாது. என் மகன் எவ்வியரசன் மராத்தானில் உலகளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறான்.  தினமும் பயிற்சிக்காக அழைத்துச் செல்வதிலிருந்து பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிர்வகித்து எல்லா செலவுகளையும் பார்த்துக்கொண்டது மனைவிதான். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார். அவ்ளோ உறுதியாக இருந்து ஊக்கப்படுத்தினார். இப்போ எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டும்போது மனைவி முகத்தில் ஏற்படுற சந்தோஷத்தை என்னால் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும். ‘ஏண்டா இவ்ளோ படிச்சிட்டு , எங்க போய் நிக்கிறடா” என்று பலரும் கேட்டார்கள். என் அம்மா அப்பாவுக்கும் அந்தக் கஷ்டங்கள் இருக்கச் செய்தது. ஆனால், மனைவி “நீங்க பண்ணுங்க. ஆனா, நல்லா பண்ணி காட்டிடுங்க” என்று நம்பிக்கையூட்டினார். அவரின், நம்பிக்கைக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே நினைக்கிறேன்.

நான் படித்ததெல்லாம் தனியார் பள்ளியில்தான். ஆனால், என் மகனை அரசுப்பள்ளியில் தமிழ் வழியில்தான் சேர்த்துள்ளேன். தமிழ்வழிக் கல்விதான் சிறந்தது. நம் மொழியைத்தாண்டி இந்த உலகத்தில் எதுவும் இல்லை”.

கிட்டு என்பது உங்கள் சொந்தப் பெயரா?

”நான் பிறந்தவுடன் அம்மா கிட்டு என்று வைத்தார். பள்ளி வருகைப் பதிவேட்டிற்காக அப்பா ‘கிருஷ்ணகுமார்’ என்று மாற்றினார். ஆனால், எல்லோருக்கும் என்னை கிட்டு என்று அழைத்தால்தான் தெரியும்”.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.