கொரோனா பேரிடர் காரணமாக 2020-ம் ஆண்டு முதல் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பல தனியார்ப் பள்ளிகளில் மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது என்றே சொல்லலாம். லாக்டவுன் காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்து, வருமானம் இல்லாமல் இருந்ததால் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவும் முடிவு செய்த பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளையே நாடினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி |  Chennai high court questions to TN government over school open |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

கடந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை, அதற்கு முந்தைய இரண்டு கல்வி ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்தது. அதாவது 2018-19ம் கல்வி ஆண்டில் 8,000 மாணவர்களும், 2019-20ம் கல்வி ஆண்டில் 10,000 மாணவர்களும் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். அதுவே 2020-21ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை வழக்கத்தைக் காட்டிலும் 1 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்தனர். வழக்கமாக 12 லட்சம் மாணவர்கள் சேரும் நிலையில், அது கடந்த கல்வியாண்டு 13 லட்சமாக அதிகரித்தது. அதுவே இந்த ஆண்டு கூடுதலாக 10 லட்சம் மாணவ, மாணவிகள் சேர வாய்ப்பு உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகள் Vs தனியார்ப் பள்ளிகள்!

தமிழகத்தைப் பொருத்தவரை 37,459 அரசுப் பள்ளிகளும், 8,386 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,918 தனியார்ப் பள்ளிகளும் உள்ளன. அரசுப் பள்ளியில், 2019-20ம் கல்வி ஆண்டில் 45,83,000 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும், தனியார்ப் பள்ளிகளில் 62,80,000 மாணவர்களும் உள்ளனர். இந்த எண்ணிக்கையில், கடந்த 2018-2019-ம் கல்வியாண்டைக் காட்டிலும், 2019-2020-ம் கல்வியாண்டில், தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தும் காணப்படுகிறது. கடந்த 2020-2021ம் கல்வியாண்டில் தனியார்ப் பள்ளியிலிருந்து சுமார் 2.80 லட்சம் பேருக்கும் அதிகமானோர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

தமிழகத்தில், 2018-2019-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 2.25 லட்சம் ஆசிரியர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 36,361 ஆசிரியர்களும், தனியார்ப் பள்ளிகளில் 2.62 லட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது என்னவெனில், “கொரோனா காலத்தில் தனியார்ப் பள்ளிக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு டியூஷனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்றே கூறுகின்றனர். மேலும் சிலர், “மருத்துவப் பிரிவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% சதவிகித இடஒதுக்கீடு போன்ற காரணங்கள் இருப்பதால் அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் தெரிவிக்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வந்தாலும், அதற்குத் தகுந்தார்போல், அரசுப் பள்ளிகளில் தேவையான, கட்டமைப்பு, போதிய அளவு ஆசிரியர்கள், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தயாரிப்பு எல்லாம் இருக்கிறதா என்பதைக் குறித்து, ‘புதிய தலைமுறை’யின் ‘நியூஸ் 360’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வியாளர் முருகையன் கூறியது:

“வாழ்வாதாரம் இழந்து, வருமானம் இழந்து, தனியார்ப் பள்ளியில் கட்டணம் கட்ட முடியவில்லை என்று நாங்கள் அரசுப் பள்ளிக்கு வருகிறோம் என சொல்வது மிகவும் வேதனைக்குறியது. இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தில் 5 கி.மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. தனியார்ப் பள்ளி கொடுக்கக் கூடிய கல்வியின் தரத்தை அரசுப் பள்ளி கொடுக்காது என்ற அவநம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. அந்த அவநம்பிக்கையைப் போக்க வேண்டும்.

வகுப்பறைகள், கரும்பலகை, ஆய்வகங்கள், நூலகங்கள், கழிவறைகள், குடிநீர் இதுதான் கட்டமைப்பு. இவை அனைத்தும் இருந்தும், அவநம்பிக்கையால் அரசுப் பள்ளியில் கட்டமைப்பு சரியில்லை என பொதுவாகச் சொல்கிறார்கள். பல அரசுப் பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனம் சரியாக நடைபெறுவதில்லை, போதுமான பாடத்தைக் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இல்லை என்ற ஒரு குறைபாடு இருக்கிறது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

image

அதேபோல், அரசுப் பள்ளிகளில் மிகத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். சிறந்த கட்டமைப்புகள் உள்ளன. தனியார்ப் பள்ளிகளைப் போல முழுமையான தரம் உயர்த்தப்பட்டு, அனைத்து பள்ளிகளையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பொதுப்பள்ளிகளாக அறிவிக்க வேண்டும்” என்றார் முருகையன்.

தனியார்ப் பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நந்தகுமார் கூறுகையில், “கல்விக் கட்டணம்தான் பிரச்னை என்பதை மறுக்க முடியாது. இந்த கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். நாங்கள் தரமான கல்வியைத் தரவேண்டும் என்ற லட்சியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர்களின் பணச்சுமையை தனியார்ப் பள்ளிகள் சேர்ந்து பகிர்ந்து கொள்ள முடிவெடுத்து பள்ளிக் கட்டணத்தை உயர்த்தவில்லை. எனவே பெற்றோர்கள் நம்பிக்கையோடு தனியார்ப் பள்ளிகளில் கல்வியைத் தொடரலாம்.

ஆசிரியர்களுக்கு சம்பளம் தரமுடியாததாலும், இதனால் நிர்வாகத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாலும் முழுமையான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வந்திருக்கும். ஒரு சில தனியார்ப் பள்ளிகள் உடனடியாக முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என் அறிவித்தது மிகவும் தவறு. இதனால்தான் பலர் அரசுப் பள்ளியைத் தேடிச் சென்றுள்ளனர். தனியார்ப் பள்ளிகள் செய்த தவறு அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

image

இருப்பதைக் கொடுங்கள், இருக்கும்போது கொடுங்கள், கொடுப்பதைக் கொடுங்கள் என்றுதான் நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டோம். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தித் தருவோம்” என்றார் நந்தகுமார்.

மேலும் தொடந்த அவர், “அரசால் கொடுக்க முடியாத செயல்களை நாங்கள் கொடுத்து வருகிறோம். எனவே அதற்கு ஒரு வாய்ப்பை அரசு உருவாக்கித் தர வேண்டும்” என்றார் நந்தகுமார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன?

  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, மடிக்கணினி வழங்கப்படுகின்றன
  • உண்டு உறைவிடப்பள்ளிகள் மூலம் உணவும், கல்வியும் இலவசமாக வழங்கப்படுகிறது
  • அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் 7.5% உள் ஒதுக்கீடு
  • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படுகின்றன
  • இலவச பேருந்து பயண அட்டை, உடற்பயிற்சி, விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படுகின்றன
  • மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளி உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.