இரவு நேரங்களில் தினமும் ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மர்மமான முறையில் பறப்பது ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை மற்றும் போலீசார் திரட்டி உள்ள தகவல்களின்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் 9 ட்ரோன் விமானங்கள் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இந்த விமானங்களை இயக்குவது யார், என்ன காரணத்துக்காக இந்த ட்ரோன்கள் இயக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே உள்ளதால் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர்.

ஜம்மு நகரம், காஷ்மீரின் பல பகுதிகளில் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருதாஸ்பூர் போன்ற இடங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் இருப்பதால், மர்ம ட்ரோன்களின் நடவடிக்கை காரணமாக இந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆளில்லாத ட்ரோன் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்த நாட்டில் முகாமிட்டுள்ள தீவிரவாத அமைப்புகள் இயக்குகின்றன என உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. சனி – ஞாயிறு இரவில் ஜம்மு விமானப்படை தளத்தில் குண்டுகளை வீசியது தீவிரவாத அமைப்புகளால் இயக்கப்பட்ட ட்ரோன் விமானம் என்று ஆரம்பகட்ட தகவல் கிடைத்த நிலையிலே, தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து ரகசிய விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளன.

image

இதற்கிடையே, ஜம்மு மற்றும் கஷ்மீர் விமானப்படை தளங்களில் இத்தகைய சிறிய ட்ரோன் விமானங்களை கண்டறிய நவீன கருவிகள் மூலம் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஜம்மு விமானதள தாக்குதலுக்கு பிறகு இதுவரை இரண்டு முறை கஷ்மீர் பகுதியிலும் ஏழு முறை ஜம்மு பகுதியிலும் ஆளில்லாத சிறிய ட்ரோன் வகை விமானங்கள் காணப்பட்டதாக உளவு தறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் இத்தகைய ட்ரோன் விமானங்கள் சீன நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்றும், அங்கிருந்து பாகிஸ்தான் கொண்டு செல்லப்படும் இந்த கருவிகள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படுகின்றன என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே பலமுறை பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லைகளில் இதுபோன்ற ட்ரோன்கள் மூலம் ஆயுத கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது அவர்களில் சேகரித்த தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 

இத்தகைய ட்ரோன்களை இயக்குபவர்கள் ரிமோட் தொடர்பு மூலம் அவற்றை கையாள்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜாமர் கருவிகள் மூலம் இந்த ஆளில்லா விமானங்களை செயலிழக்க செய்வது போன்ற பல்வேறு முயற்சிகளில் தற்போது பாதுகாப்பு படையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய ட்ரோன் விமானங்களை கண்டால் அவற்றை வானத்தில் சுட்டு  வீழ்த்துவதற்கான கருவிகளையும் இறக்குமதி செய்வதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே டிஆர்டிஓ மூலம் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பமும் இத்தகைய ட்ரோன் விமானங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என பாதுகாப்பு படையினர் முடிவு செய்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு முகமை உடன் இணைந்து ராணுவம் விமானப்படை மற்றும் கப்பற்படையைச் சேர்ந்த வல்லுநர்களும் ட்ரோன் விமானங்களை தடுக்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக போலீஸ் மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் பல தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜிபிஎஸ் வரைபடங்கள் இத்தகைய ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கு இன்றியமையாதவை என்பதால், ஒருவேளை காஷ்மீர் பகுதியில் இயங்கும் தீவிரவாதிகள் இத்தகைய தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார்கள் என்பதும் தற்போது உன்னிப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

image

பல்வேறு முயற்சிகள் போர்க்கால விரைவிலே நடைபெற்று வந்தாலும், ட்ரோன் விமானங்களை தடுக்க சரியான பதில் நடவடிக்கைகள் சீக்கிரமாக செயல்படுத்தப்படும் வரை எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே தற்போதைய நிதர்சனம்.

– கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.