அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை அலசுவோம். 

அணி சேர்க்கையில் தவறா? :

இந்த போட்டியில் இந்திய அணி ஆடும் லெவனில் தேர்வு செய்த வீரர்களின் அணி சேர்க்கையில் சில தவறுகள் இருப்பதாக முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து சொல்லி வருகின்றனர். குறிப்பாக இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜாவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இளம் வீரர் முகமது சிராஜை விளையாட செய்திருக்கலாம் எனவும் கருத்துகள் வருகின்றன. ஆனால் ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் அரங்கின் ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் முதல் நிலை வீரர். அதனால் அவரை அணியில் சேர்த்தது சரியான முடிவு என்ற குரல்களும் எழுகின்றன. 

image

ஆடும் லெவனில் மாற்றம் செய்திருக்க வேண்டுமா? என ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் கோலியிடம் கேட்டதற்கு “இல்லவே இல்லை. இந்த பதினோரு வீரர்கள் கூட்டணி சரியான அணி. உலகம் முழுவதும் பல்வேறு ஆடுகளங்களில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அணி இது. பேட்டிங்கில் டெப்த் வேண்டும் என்பதற்காக 8 பேட்ஸ்மேன்களுடன் விளையாடினோம்” என சொல்லி மறுத்திருந்தார். 

வானிலை காரணமா? :

நிச்சயமாக இந்தியாவின் தோல்விக்கு வானிலையும் ஒரு காரணம் என சொல்லலாம். “டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டி நடைபெறும் சூழ்நிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறுதிப் போட்டி நடைபெறும் நாட்களில் வெயில் இருந்தால் இந்திய அணியின் வலுவான பவுலிங் கூட்டணிக்கு அந்த சூழல் உதவலாம். இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதுவே வானிலை கொஞ்சம் மந்தமாக இருந்தால் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்தியா விளையாடும் என கருதுகிறேன்” என்று போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே சொல்லி இருந்தார் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங். ஆனால் நடந்தது முற்றிலும் அதற்கு நேர் எதிரானது. மழை பொழிவு இந்தியாவின் சாம்பியன் கனவை களைத்து விட்டது. 

பேட்டிங்கில் என்ன தவறு? :

இந்தியாவின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை வலுவாகவே இருந்தது. கேப்டன் கோலி சொன்னதை போல ரோகித், கில், புஜாரா, கோலி, ரகானே, பண்ட், ஜடேஜா, அஷ்வின் என 8 பேட்ஸ்மேன்கள். அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக இருந்தது. இருந்தாலும் அதில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவே இல்லை என்பது இந்தியாவுக்கு ரன் சேர்க்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தும் அதை சரியான வழியில் கொண்டு செல்ல அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மாதிரியான அணிகளின் பந்து வீச்சை சமாளிக்க முடிந்த இந்திய பேட்ஸ்மேன்களால் நியூசிலாந்தின் பவுலிங் அட்டாக்கை சமாளிக்க முடியவில்லை. கோலி, ரகானே, பண்ட் என மூவரும் நன்றாக செட்டிலாகிய பின்னர் விளையாடாமல் போனது ஏமாற்றமே. 

image

கேப்டன் கோலி மீது தவறா? :

கடந்த 2014 முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார் கோலி. இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 36 போட்டிகள் வெற்றியிலும், 10 போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. 15 போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. 59.01 சதவிகிதம் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ள கேப்டன் அவர். இந்திய அணியை அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ள கேப்டனும் கூட. அதிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற்ற 2019 – 2021 வரையிலான நேரத்தில் ஆறு டெஸ்ட் தொடர்களில் 5 தொடர்களை இந்தியா கைபற்றியுள்ளது. அது தவிர ஒரு வீரராக சிறப்பான பங்களிப்பையும் கோலி கொடுத்துள்ளார். அதனால் இதில் அவரை குறை சொல்ல எதுவும் இல்லை.

இருந்தாலும் அணி சேர்க்கை என்பது கேப்டன் மட்டுமல்லாது பயிற்சியாளர்களும் இணைந்து எடுக்கின்ற முடிவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்ற அணியில் அடுத்ததாக கேப்டன் பதவி கொடுக்க வேண்டுமென்றால் அது ஒரு இளம் வீரராக இருக்க வேண்டும். ஏனெனில் கோலியை தவிர்த்து அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதில்லை. அதனால் அவர்களிடம் இப்போது கேப்டன் பொறுப்பை கூடுதலாக கொடுப்பது அவர்களது ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  

அடுத்து என்ன செய்ய வேண்டும்? :

இந்தியா அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதில் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களை தவறாமல் சேர்க்க வேண்டும். அதே போல பேட்ஸ்மேன்களையும் பரிசோதனை அடிப்படையில் மாற்ற வேண்டி உள்ளது. மயங்க், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அதே போல வேகப்பந்து வீச்சாளர்களான சிராஜ் மற்றும் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அப்படி செய்தால் இந்தியா தோல்விக்கு இந்த தொடரிலியே விடை கொடுத்து விடும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.