கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவும், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய சூழலில் மருத்துவரும், தெலங்கானா, புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்.

தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களை நிர்வகிக்கும் பெண் ஆளுநராக இருக்கிற பயணம் எப்படி இருக்கிறது?

இந்த பயணம் சவாலாகத்தான் இருக்கிறது. புதுச்சேரியில் மாநில அரசு கலைந்தபோது, ஒரு துணைநிலை ஆளுநராக மாநிலத்தை நிர்வகித்த அனுபவம் வேறு. ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் ஆளுநராகவும், துணைநிலை ஆளுநராகவும் நோய்த்தொற்றை குறைத்ததுடன், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தியும் இருக்கிறேன். மருத்துவர் என்பதால் மட்டுமே இதை சாதிக்க முடிந்ததாக நான் நினைக்கிறேன்.

கொரோனா தொற்று அதிகமானதால் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட சமயத்தில் ‘உயிர்க்காற்று’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். அதுபற்றி கூறுங்கள்…

பலரும் தங்கள் சேமிப்புகளை தாமாக முன்வந்து கொடுத்தனர். அவர்களின் சேமிப்பு வீணாகாமல் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணியபோதுதான் இந்த திட்டம் தோன்றியது. ‘உயிர்க்காற்று’ என்ற பெயரை நானும் சுகாதாரத்துறை செயலாளரும் ஆலோசித்து வைத்தோம். இந்த பெயர்தான் எங்களுக்கு தற்போது பெயர்வாங்கி தந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஒருவேளை மூன்றாம் அலை வந்தாலும் அதை சமாளிக்க முடியும்.

கொரோனா மூன்றாம் அலை சாத்தியமா?

கொரோனா மூன்றாம் அலை பரவுவது நம் கையில்தான் இருக்கிறது. நாம் எல்லோரும் அலையலையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலையை தடுக்கலாம்.

புதுச்சேரியில் 100% தடுப்பூசி என்பதையே இலக்காக கொண்டுள்ளீர்கள். இதற்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

துணைநிலை ஆளுநராக பதவியேற்ற ஒரு மணிநேரத்திலேயே நான் தடுப்பூசி போடும் முகாமிற்குத்தான் சென்றேன். காரணம், அந்த தினத்தன்று காலை மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 10000 தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு புதுச்சேரி கடைசி இடத்தில் இருப்பதை பார்த்தேன். தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய நிகழ்ச்சிகளை நடத்தினோம். தற்போது 31%க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதே ஓரளவு வெற்றியாகத்தான் எண்ணுகிறேன்.

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் அங்கு ஏற்படும் அரசியல் அதிர்வலைகளும், அதன் பாதிப்புகளும் சற்று அதிகமாகவே இருக்கிறது. தற்போது புதிய அரசு உடனான உங்களது இணக்கம் எப்படியிருக்கிறது?

எல்லா அரசுடனும் எனது இணக்கம் சரியாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு தெலங்கானாவில் மாநில கட்சிதான் ஆட்சிசெய்கிறது. ஆனால் அங்கு நான் மிகவும் இணக்கமாவும் இல்லை; அதேசமயம் சச்சரவுகளும் இல்லை. ஒரு ஆளுநராக முதலமைச்சருடன் சரியான முறையில் நடந்துகொள்வதே எனது பழக்கம்; கோப்புகளை தாமதப்படுத்துவது எனது பழக்கம் இல்லை. புதுச்சேரியில் முந்தைய துணைநிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் பெரிய போரே நடந்திருந்ததை அங்கு அடுக்கி வைத்திருந்த கோப்புகளை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

என்னை பொருத்தவரைக்கும் ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் தனித்தனி வரையறைகள் இருக்கிறது. அவை அனைத்துமே மக்கள் நலனுக்காக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.