மத்திய பல்கலைக்கழகங்களில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு (CUCET) நடத்த இருப்பது பெரும் விவாதமாக மாறியுள்ளது. தமிழகத்தில் ‘நீட்’ எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களும் உணரும் வகையில் இது அமைந்துள்ளது. இந்தத் தேர்வின் பிண்ணனி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதுவரை தங்கள் மதிப்பெண்களை மட்டுமே அளவுகோலாகப் பயன்படுத்தி டெல்லி பல்கலைக்கழகம் உட்பட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து வந்தனர். இந்த வருடமும் இதே நடைமுறையை பின்பற்றி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர கனவு கண்டிருந்த நிலையில், 41 மத்திய பல்கலைக்கழகங்கள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓர் அறிவிப்பு வெளியானது. அது, இந்த 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இனி 12-ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், மாறாக பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்பதுதான். இதுவரை 14 புதிய மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே இந்தத் தேர்வு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.

மேலும், மத்திய பல்கலைக்கழகங்களின் இந்த பொது நுழைவுத் தேர்வை (CUCET) நடத்துவதற்கான திட்டம் உடனடியாக இறுதி செய்யப்பட்டு, இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்த நிமிடம் வரை இந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்களின் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUCET) தேதி குறித்து தேசிய தேர்வுகள் துறை இதுவரை இறுதி செய்யவில்லை.

image

இதற்கிடையே, ஏற்கெனவே நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளால் மருத்துவ கனவை துறந்து மத்திய பல்கலைக்கழகங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திரும்பியிருந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு இடி போல் அமைந்துள்ளது. இதையடுத்து பொதுவான நுழைவுத் தேர்வு திட்டத்தை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்வி அமைச்சகம் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பணக்கார பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு சாதகமாக அமையலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்வானது ‘மல்டிப்பிள் சாய்ஸ்’ முறையில், மொழிப்பாடம், பொது விழிப்புணர்வு, கணித திறன் மற்றும் ஆப்டிடியூட் டெஸ்ட் அத்துடன் மாணவர்களின் விருப்ப பாடங்களில் டொமைன் அறிவை சோதிக்கும் வகையில் கேள்விகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் உள்ள சிக்கல், நுழைவுத் தேர்வு பாடதிட்டத்த்ல் சேர்க்கப்பட்டுள்ள ஆப்டிடியூட் பகுதி, 10 +2-இல் ஒருவர் கற்றுக்கொண்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபடும் வகையில் அமைக்கப்படுமாம். இதனால் பலர் அதைக் கையாள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இதுபோன்ற குறைபாடுகளை முன்னிறுத்தி, டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மேலும், “அறிவியல் மாணவர்கள் பொது அறிவு பிரிவுக்கு தயாராவதில் சிக்கல்கள் உள்ளன. இதேபோல் கலை மற்றும் வர்த்தக பாட மாணவர்களுக்கு லாஜிக்கல் ரீசனிங் உள்ளிட்ட பகுதிகளை படிக்க சிரமம் இருக்கலாம். எனவே, அவர்களுக்கு தேர்வுக்கு தயாராக கூடுதல் நேரம் தேவைப்படலாம். அதேநேரம், ஏற்கெனவே தொழில்முறை பட்டப்படிப்புகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பு முதல் இதுபோன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருவதால் அவர்களுக்கு இந்தத் தேர்வுகள் சாதகமாக இருக்கலாம். அதுமட்டுமில்லை, இந்த கொரோனா சமயத்தில் திடீரென பயிற்சி வகுப்புகளில் சேரும் அளவுக்கு பலரிடம் பணம் இருப்பதும் சிரமமே” என்றும் தங்கள் கடிதத்தில் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு, 14 புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நான்கு மாநில பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கு மட்டுமே CUCET நுழைவுத் தேர்வு பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், கல்வி அமைச்சகம் நாட்டின் மிகவும் பழைய மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய கல்வி கொள்கை பரிந்துரைகளுக்கு இணங்க CUCET தேர்வை விரிவாக்க அறிவுறுத்தியது. அதன்படி, இந்தப் பொது நுழைவுத் தேர்வு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையும் இந்த நுழைவுத் தேர்வு விவகாரத்தில் புதிய அவசரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாமை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி நம்ரதா கலிதா வடகிழக்கு மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தனது கடிதம் மூலம் விவரித்துள்ளார். அதில், “CUCET-க்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, எந்த முறையும் இல்லை, பாடத்திட்டமும் இல்லை, பயிற்சிக்கு முந்தைய ஆண்டு கேள்விகளும் இல்லை. இது NEP-2020 இன் கீழ் முன்மொழியப்பட்டாலும், அதை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஒருபோதும் அதிகாரபூர்வ அறிவிப்பை வழங்கவில்லை.

Common entrance exam at UG level will help EWS students - Times of India

ஒரு தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு தயாராக தற்போதைய சூழ்நிலையில் போதுமான காலங்கள் தேவை. CUCET ஒரு நல்ல முயற்சி, ஆனால் இதைப் பற்றி முன்னதாக அறிவிக்காமல் இதுபோன்ற சூழலில் கொரோனா பரவி வரும் ஆண்டில், திடீரென்று நடத்துவது சரியல்ல. மற்றொரு பரீட்சைகளை நடத்துவது எங்கள் அமர்வை மேலும் தாமதப்படுத்தும் மற்றும் எங்கள் முழு ஆண்டையும் வீணடிக்கும். கல்வி அமைச்சகம் இந்த விவகாரத்தில் எங்களை கவலைகளை கேட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே நீட் உள்ளிட்ட தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் வேளையில், இந்தத் தேர்வும் அவர்களை மனஉளைச்சலுக்குள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததில் முன்னோடியாக இருந்த தமிழகம், இத்தகைய தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளின் பாதிப்பை நாடு முழுவதும் உணரும் வகையிலேயே இந்த CUCET நுழைவுத் தேர்வு அமைந்திருக்கிறது என்பதும் கல்வியாளர்களின் பார்வையாக இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.