கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை தொடர்ந்து முத்தமுடும் ஜோகோவிச் நேற்று நள்ளிரவில் பிரெஞ்சு ஓப்பன் கோப்பையையும் முத்தமிட்டார். இதுவரை ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையை ஒன்பது முறையும், விம்பிள்டன் கோப்பையை 5 முறையும், அமெரிக்க ஓப்பன் கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கிறார் நோவாக் ஜோகோவிச்.

செர்பிய நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான இவருக்கு பிரெஞ்சு ஓப்பனை இரண்டாம் முறை வெல்வது மட்டும் மிகக் கடினமாக இருந்தது. பிரெஞ்சு ஓப்பனை இரண்டாம் முறை வென்றுவிட்டால் நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும் இரண்டு முறை வென்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார் என்கிற எதிர்பார்ப்புகளுடனேயே தொடங்கியது 2021 பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ்.

பிரெஞ்சு ஓப்பன் என்றாலே அது தனக்கு மட்டும்தான் என சொந்தம் கொண்டாடி வந்த ரஃபேல் நடாலை அரையிறுதிப்போட்டியில் தோற்கடித்தவர், இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம் வீரர் ஸ்டெஃபானி சிட்சிபாஸுடன் மோதினார். யாரும் எதிர்பாராத ஆச்சர்யமாக முதல் இரண்டு செட்களையும் சிட்சிபாஸிடம் தோற்றார் ஜோகோவிச். நாடலுக்குப்பிறகு பிரெஞ்சு ஓப்பன் வென்ற இளம் வீரர் என்கிற சாதனையை சிட்சிபாஸ் படைக்கப் போகிறார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது செட்டில் மீண்டெழுந்தார் நோவாக் ஜோகோவிச்.

முதல் இரண்டு செட்களையும் 7-6, 6-2 என இழந்தவர் மூன்றாவது செட்டில் இருந்து அதிரடி ஆட்டம் ஆடினார். அடுத்த மூன்று செட்களையும் சிட்சிபாஸுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்காமல் ஆடி 6-3, 6-2, 6-4 என வென்று பிரெஞ்சு ஓப்பன் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச். சாம்ப்ராஸ், அகாஸி, ஃபெடரர், நடால் என யாரும் செய்யாத சாதனையாக இரண்டாவது முறையாக அனைத்து கிராண்ட் ஸ்லாம்களையும் வென்றவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஜோகோவிச். முதல் இரண்டு செட்களில் தோற்று, அடுத்து மூன்று செட்களையும் எளிதாக வென்று சிட்சிபாஸுக்கு வெற்றி ஆசைகாட்டி மோசம் செய்துவிட்டார் ஜோகோவிச்.

ஃபெடரர், நடால், ஜோகோவிச்… மூவரில் சிறந்த வீரர் யார்?

இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர், நடால், ஜோகோவிச் என இந்த மூவரில் யார் சிறந்த வீரர் என்கிற விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கிறது. பழைய கணக்கு வழக்குகளை தூசி தட்டி எடுத்தால் யார் சிறந்த வீரர் என்பதற்கான விடை கிடைத்துவிடும்.

ஜோகோவிச் மட்டுமே ஃபெடரர், நடால் என இருவரையும் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் உள்பட பல ஏடிபி டென்னிஸ் தொடர்களில் வீழ்த்தி இருக்கிறார். ஃபெடரருடன் மோதியிருக்கும் 50 போட்டிகளில் ஜோகோவிச்தான் அதிகப்படியாக 27 போட்டிகளில் வென்றிருக்கிறார். அதேப்போல் நடாலுடன் மோதியிருக்கும் 58 போட்டிகளில் 30 போட்டிகளில் ஜோகோவிச்சே வென்றிருக்கிறார்.

மூவருக்குமே ஃபேவரிட் கிராண்ட் ஸ்லாம்கள் உள்ளன. பிரெஞ்சு ஓப்பனை நடால் 13 முறை வென்றிருக்க, ஃபெடரர் விம்பிள்டனை 8 முறையும், ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பனை 9 முறையும் வென்றிருக்கிறார்கள்.

ஃபெடரர்

களி மண் கோர்ட்டைப் பொருத்தவரை நடால்தான் கில்லி என்றாலும், இவர்கள் இருவரும் களிமண் தரையில் மோதிய 27 போட்டிகளில் 8-ல் ஜோகோவிச் வென்றிருக்கிறார். பிரெஞ்சு ஓப்பனில் நடாலை அதிகமுறை வீழ்த்தியவர் என்கிற சாதனையும் ஜோகோவிச்சிடமே உள்ளது. இரண்டுமுறை வீழ்த்தியிருக்கிறார் ஜோக்கர்.

விம்பிள்டனில் ஃபெடரர்தான் ராஜா என்றாலும் விம்பிள்டனில் ஃபெடரரை அதிகமுறை தோற்கடித்தவர் ஜோகோவிச்தான். மூன்றுமுறை விம்பிள்டன் இறுதிப்போட்டிகளில் ஃபெடரரை வீழ்த்தி கோப்பை வென்றிருக்கிறார் ஜோகோவிச்.

5 செட்கள் வரை நீளும் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றிருப்பவரும் ஜோகோவிச்சே. 5 செட் வரை போன 45 போட்டிகளில் 35-ல் ஜோகோவிச் வென்றிருக்கிறார். இது நடால், ஃபெடரரைவிட அதிகம்.

புள்ளிவிவரங்கள் வைத்து மட்டுமே ஒரு வீரரை சிறந்த வீரர் என்று சொல்லிவிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், ஓப்பன் எராவில் சமகாலத்தில் ஃபெடரர், நடால் என இருபெரும் ஜாம்பவான்களை சந்தித்து இப்படி தொடர் சாதனைகள் படைத்தவர் யாரும் இல்லை.

ஜோகோவிச் – நடால்

ஃபெடரர் 40 வயதை நெருங்கி விட்டார். கரியரின் இறுதிகட்டத்தில் இருக்கிறார் என்பதால் ஃபெடரரை எளிதில் கடந்துவிடுவார் ஜோகோவிச். இனி போட்டி 34 வயது ஜோகோவிச்சுக்கும், 35 வயது நடாலுக்கும்தான். நடால், களிமண் தரையில் மட்டுமே கோலோச்சும் நிலையில், அனைத்துவிதமான மைதானங்களிலும் வெற்றிக்கொடி நாட்டும் ஜோகோவிச்சே ஓப்பன் எராவின் மிகச்சிறந்த வீரராக வரலாற்றில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.