தமிழகத்துக்குப் புதிய சட்டமன்றம்!

இந்த விவகாரத்தில் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள நாம் சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை இந்திய ராணுவத்துக்குச் சொந்தமானது. இந்த இடத்தில் எந்த ஒரு மாறுதல் செய்ய வேண்டுமென்றாலும் ராணுவத்தின் அனுமதி பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள முடியும். 2001-2006 காலகட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்துக்குப் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடிவு செய்திருந்தது. அப்போது, ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றி அங்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. பின்னர் கல்லூரியை மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

ஜெயலலிதா – கருணாநிதி

அதன் பின்னர், கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அங்கு தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அந்த இடத்தில் பூமி பூஜையும் போடப்பட்டது. 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே அந்த இடம் மீண்டும் கல்லூரியிடமே ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு, ஓமந்தூரார் தோட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணியைத் தொடங்கியது. கிட்டத்தட்ட 550-க் கோடிக்கும் அதிகமான செலவில் பிரமாண்டமான கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் திறந்துவைத்தார்.

பின்னர் பழைய தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்துத் துறைகளும் மெல்ல மெல்ல புதிய சட்டமன்ற மாளிகைக்கு மாற்றப்பட்டன. 2010-ம் ஆண்டு புதிய சட்டமன்றத்தில் கடைசி நிதிநிலை கூட்டுத்தொடர் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் பழைய சட்டமன்றத்தில் நடைபெறும் என்று கூறி உரையை முடித்தார். அதற்கு பதிலளித்த கருணாநிதி தேர்தல் முடிவடைந்து அடுத்த கூட்டத்தொடர் இந்தப் புதிய சட்டமன்றத்தில்தான் நடைபெறும் என்று பதிலளித்தார்.

தலைமைச் செயலகம்

2011-ம் ஆண்டு புதிய அ.தி.மு.க புதிய அரசாகப் பொறுப்பேற்றதும், புதிய தலைமைச் செயலக கட்டடம் சட்டசபைக்கு ஏதுவாக இல்லை என்று கூறி, அங்கிருந்து அனைத்துத் துறைகளையும் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுமாறு அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். மேலும், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி விசாரணை ஆணையமும் அமைத்தார் ஜெயலலிதா.

சட்டமன்றம் டு மருத்துவமனை!

முன்னதாக, `ஜார்ஜ் கோட்டையிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்திருக்கிறது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையிலிருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான், புதிய சட்டமன்றம் கட்டும் பணியைத் தொடங்கினார். இதே ஜெயலலிதாதான் புதிதாகச் சட்டமன்றம் கட்டப்பட்டிருக்கும் நிலையிலும், நாமக்கல் கவிஞர் மாளிகையைப் புனரமைக்கப் போகிறோம் என்பது விதண்டாவாதம் செய்கிறார்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் எந்தப் பயன்படும் இல்லாமல் பூட்டியே கிடந்தது. இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு புதிய தலைமைச் செயலகத்திலிருந்த ஓமந்தூரார் வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டு, ஓமந்தூரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். அருகிலிருந்த இடத்தில் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியும் கட்டப்பட்டது. அதனருகில் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் கட்டப்பட்டது. தற்போது ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்புச் சிகிச்சை வளாகமாக மக்கள் பயன்பாட்டுக்கு இருக்கிறது. அதேபோல ஓமந்தூரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும், பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களோடு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உலகத்தரத்தில் உயரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மீண்டும் கிளம்பும் விவகாரம்:

கடந்த 2020-ம் ஆண்டு முதல் அலையின்போது 140-கோடிக்கும் அதிகமான செலவில் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்திலுள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அரசு கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு, உடனடிப் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மருத்துவமனை ஓமந்தூரார் மருத்துவமனைக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது. தற்போது 750-க்கும் அதிகமான படுக்கை வசதிகளோடு முழுக்க முழுக்க கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

கிங் இன்ஸ்டிட்யூட்

தற்போது ஆட்சி மாறியதும், திமுக சார்பில் கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதும், புதிய தலைமைச் செயலகத்திலுள்ள மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கான முயற்சியை தி.மு.க அரசு மேற்கொள்கிறது என்று சர்ச்சைகள் கிளம்பின. ஓமந்தூரார் மருத்துவமனையை இடமாற்றம் செய்யக் கூடாது என்று அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

மாற்ற வாய்ப்புள்ளதா?

இது குறித்து சுகாதாரத்துறையிலுள்ள ஓர் உயரதிகாரியிடம் பேசினோம், “ஓமந்தூரார் மருத்துவமனை அமைந்துள்ள கட்டடம் ஒரு மருத்துவமனைக்கு உகந்த கட்ட்டம் இல்லை என்பதே உண்மை. இந்தக் கட்டடம் முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஏற்றது. இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் இந்த மருத்துவமனை மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயர்ந்த தரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பல்வேறு உயரிய உபகரணங்கள் இந்த மருத்துவமனையில் உள்ளன. இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கவர்கள் பயனடைவார்கள். அதேசமயத்தில் பராமரிப்பு செலவுகளும் அதிகம் ஆகிறது. தற்போதைய நிலையில் இந்த மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து அரசு சார்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை” என்று கூறினார்.

இது குறித்து திமுக தரப்பில் சிலரிடம் பேசியபோது, “ஒரு கடுமையான நோய்த் தொற்று சமயத்தில் ஒரு மருத்துவமனையை மாற்றுவது என்பது சரியாக இருக்காது. அந்த மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். உண்மையில், தற்போது அப்படி ஓர் எண்ணம் இல்லை. உரிய அறிவிப்பைத் தலைமை வெளியிடும்” என்று கூறினர்.

இது தொடர்பாக அரசுத் தரப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஓமந்தூரார் மருத்துவமனையைப் பொறுத்தவரை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இந்த இரண்டின் நிர்வாகமும் வேறு வேறு. ஒருவேளை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மட்டும் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்துக்கு மாற்றினாலும், அதை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பாதிக்காத வண்ணம் மாற்ற இயலும். மேலும், இப்போது இருக்கும் இந்தக் கட்டடத்தைவிட மருத்துவமனைக்கு ஏதுவான இடத்துக்கு மாற்றினால், மருத்துவமனை இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. எந்த முடிவு என்றாலும் அதை அரசுத் தரப்புதான் உறுதியாகக் கூற முடியும்” என்று கூறினர்.

அரசுத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வராத வரை, இந்தச் செய்திகளெல்லாம் யூகங்களாக மட்டுமே இருக்கும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.