புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நகர்ப்புற சுகாதார மையம் செஞ்சி சாலை மற்றும் எஸ்.வி படேல் சாலையில் செயல்பட்டு வருகிறது. 1954-ம் ஆண்டு முதல் 67 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த மையத்தின் கட்டிடம் பழுதானதையடுத்து ரூ.5 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மூன்று மாடிகளுடன் கூடிய இந்த கட்டிட திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். புதிய மருத்துவ மையத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “கொரோனா தொற்று ஆரம்பித்தது முதல் நான் முகக்கவசம் அணிவதில்லை. தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை.

முதல்வர் ரங்கசாமி

எப்போதும் போலவே இருந்தேன். அதனால் காரணமாகத்தான் முதல்வராக பொறுப்பேற்கும் போது கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டேன். பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினேன். கொரோனா தொற்று வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். இப்போது கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது மிக அவசியமான ஒன்று. ஏனென்றால் அந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளாததால்தான் நான் பாதிக்கப்பட்டேன்.

தடுப்பூசி போட்டிருந்தால் எனக்கு தொற்று ஏற்பட்டிருக்காது. தடுப்பூசியை போட்டு முகக்கவசத்தையும் அணிந்திருந்தால் எனக்கு தொற்று வந்திருக்காது. இவற்றை செய்யாததால்தான் நான் பாதிப்புக்குள்ளானேன். யாரோ ஒருவர் பரப்பும் வதந்தியை நம்பி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர மறுப்பது தவறானது. தடுப்பூசி போடவில்லை என்றால் பெரிய சிரமம் ஏற்படும். இரண்டு தடுப்பூசி டோஸ்களை நான் எடுத்துக்கொள்ளாததால் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையின்போது எனக்கு 100 ஊசிகள் போட்டார்கள். இரண்டு ஊசிகளையும் போட்டிருந்தால் எனக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காது.

Also Read: புதுச்சேரி: `முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா பாசிட்டிவ்!’ – தொடர் காய்ச்சலால் சென்னையில் சிகிச்சை

நோயின் தன்மையையும், தீவிரத்தையும் உணராமல் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வதால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். மருத்துவர்கள் கூறுவது போல் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தொற்று பரவலை தடுக்க முடியும். எதிர்காலத்தில் மூன்றாவது அலைவருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.