சென்னையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் Ambisome Liposomal Amphotericin என்ற மருந்தை அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
கொரோனா வைரஸ் நோயைத் தொடர்ந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் ஆங்காங்கே பரவி பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதுபோல் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தையும் கள்ளச் சந்தை மூலம் சிலர் அதிக லாபம் பெற எண்ணி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர், மருந்து கட்டுப்பாட்டுத்துறையினர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
image
குறிப்பாக கள்ளச் சந்தை விற்பனையாளர்களை பிடிக்க சமூக வலைதளங்கள் மூலம் மருந்து தேவைப்படுபவர்கள்போல் செய்தி வெளியிட்டு, அவர்களை தொடர்பு கொள்ளும் கள்ளச் சந்தை விற்பனையாளர்களின் தொடர்பை வைத்து அவர்களை பொறிவைத்து பிடித்து கைது நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
 
அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகம் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் Ambisome Liposomal Amphotericin என்ற மருந்தை கள்ளச் சந்தை மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யவிருப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படையினர் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி முரளி கிருஷ்ணனுடன் சம்பவ இடத்திற்குச் சென்று மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
image
 
அப்போது கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தை விற்க முயன்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவ்விரு பெண்களும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த உம்மு குல்சம் (26), கானாத்தூரைச் சேர்ந்த பௌசானா (32) என்பதும், அவ்விரு பெண்களின் நண்பர்களான விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (21), மற்றும் செங்கல்பட்டைச் சேர்ந்த விவேக் (25) என்பதும் தெரியவந்தது.
 
மேலும், அவர்கள் பெங்களூருவில் இருந்து கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் Ambisome Liposomal Amphotericin மருந்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து கள்ளச் சந்தை மூலம் சென்னையில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவர்களிடம் இருந்து 8 Ambisome Liposomal Amphotericin மருந்துக் குப்பிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.