தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்த கையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். மேலும், தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை மற்றும் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலும் குழு ஒன்றை அமைத்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு இல்லை என்று கூறிய பின்னர் அது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அமைத்திருப்பது தமிழக அரசுக்கு அத்தேர்வு குறித்துத் தெளிவான பார்வை இல்லை என்பதையே காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் அதேவேளையில் வல்லுநர் குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தரமான விலக்கு பெறப்படும். அதை நோக்கித்தான் தமிழ்நாடு அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது என்று அரசுத் தரப்பிலும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் தேர்வு இருக்கா? இல்லையா? என்ற குழப்பமான மனநிலையில் மாணவர்கள் தவித்து வரும் சூழலில் அது தொடர்பாகத் தெளிவான உறுதியான அறிவிப்பு வெளிவர வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. விரைவில் நீட் தொடர்பாகத் தெளிவான அறிவிப்பு வெளிவர வேண்டும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: நீட் தேர்வு விவகாரத்தில் ‘ஸ்கோர்’ செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

நீட் தேர்வில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் “நீட் தேர்வை இந்த முறை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்வோம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னதா இல்லையா? அப்போது ஆட்சிக்கு வந்ததும் குழு அமைக்கிறோம் என்று சொன்னால் இதுவரை நீட் தொடர்பாகச் சொன்ன கருத்துகளில் அவர்களுக்கே தெளிவில்லை என்றும் குழப்பத்துடனேயே தான் கருத்து தெரிவித்து வந்துள்ளனர் என்றும் தானே புரிந்துகொள்ள முடியும். 2013-இல் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனு ரத்து செய்து நீட் தேர்வு நடத்துவதற்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஏன் தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்க்கிறோம் என அ.தி.மு.க அரசே விளக்கி பல்வேறு காலகட்டங்களில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்வதற்கு தி.மு.க அரசு குழு அமைத்ததன் நோக்கம் என்ன? நீட் தேர்வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்தி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும். அதுவரை இதுபோன்ற நாடகங்களை இவர்கள் நிறுத்திக் கொள்ளலாம்.

நாராயணன் திருப்பதி

உண்மையில் இவர்களுக்கு நீட் தேர்வில் எதிர்ப்பு இருந்தால் இதுவரை தொடரப்பட்ட வழக்கில் தங்களையும் ஒரு வழக்கு தாரராக இணைத்துக்கொண்டு கருத்துகளை வைத்திருக்க வேண்டும் இல்லையா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லையே? எங்களைப் பொறுத்தவரை தி.மு.க – காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்க்கிறோம் என தி.மு.க சொல்வதை நாடகம் என்றுதான் சொல்வோம்” என அரசு குழப்பமான மனநிலையில் இருக்கிறது என விமர்சித்ததோடு பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தார்.

எதிர்க்கட்சியினர் வைக்கும் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம் “ குழப்பமான மனநிலையில் இருப்பதால்தான் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருக்கிறது என்று எதிர்க்கட்சியினர் கருதினால் நீட் தேர்வு ஆராய அமைக்கப்பட்ட குழுவை ஆதரித்து அல்லவா அறிக்கை வெளியிட்டிருக்கிற வேண்டும். மாறாக விமர்சிக்கிறார்கள் என்றால் இந்தக் குழு அளிக்க உள்ள அறிக்கையின் மூலம் நீட் என்பது சமூக நீதிக்கு எதிரானது என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் எழுந்துள்ளது என்றுதானே அர்த்தமாகிறது. ஏன் குழு அமைக்கப்பட்டது என்று கூறுகிறேன். 2005-இல் தமிழ்நாட்டில் எந்த தொழிற்கல்விக்கும் நுழைவுத் தேர்வு இல்லை என ஜெயலலிதா சட்டம் இயற்றினார். அந்தச் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘நுழைவுத்தேர்வு இல்லை என இயற்றப்பட்ட சட்டத்தில் முறையான திட்ட ஒழுங்கும், காரண காரியமும் இல்லை’ எனக் கூறி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என அறிவித்துவிட்டது. 2006-இல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தலைவர் கருணாநிதி நுழைவுத் தேர்வு ரத்து குறித்து ஆராய முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தார்.தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேகரித்த தரவுகளின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகளால் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள்.

கான்ஸ்டைன் ரவீந்திரன்

குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்தும் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போதும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது “அரசின் கொள்கை முடிவு, மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தீர ஆராய்ந்தே அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது. நுழைவுத் தேர்வு ரத்து செல்லுபடியாகும் எனத் தீர்ப்பு வழங்கியது” என முன்னர் நுழைவுத்தேர்வுக்குத் தடை பெற்றதை விளக்கினார்.

Also Read: ப்ளஸ் டூ தேர்வுகள் ரத்து; புதிய கல்விக் கொள்கைக்கு வாசலைத் திறந்துவிடுமா?

“உச்சநீதிமன்றமும் தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து இயற்றிய சட்டம் செல்லுபடியாகும் எனத் தீர்ப்பு வழங்கியதோடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறியது. தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை இப்படித்தான் தி.மு.க அரசு ரத்து செய்தது. 2010-ஆம் ஆண்டில் இந்த தீர்ப்புகளைக் கோடிட்டுக் காட்டித்தான் நீட் தேர்வைத் தமிழகத்திற்கு நுழையாமல் தடுத்து நிறுத்தினோம். ஜெயலலிதா இருந்த வரை கூடவே தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய முடியவில்லை.

நீட் தேர்வு அச்சத்தில் மரணம்

2016-க்குப்பின் தமிழகத்திற்கு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க-வின் பினாமி அரசான எடப்பாடி, ஓபிஎஸ் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு அனுப்பிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அப்போது இருந்த அ.தி.மு.க அரசு நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை ஆராய்ந்து உடனடியாக சரி செய்து மீண்டும் ஒரு தீர்மானம் அனுப்பியிருக்க வேண்டுமா இல்லையா? ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை” என்றார்.

மேலும், “நீட் தேர்வு வேண்டாம் எனத் தவிர்க்க முடியாத அளவுக்கு நம்முடைய தீர்மானத்தை ஒன்றிய அரசிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ‘நாங்கள் நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்தபோதும் அதைத் தமிழகத்தில் நடத்தி எங்களின் தளிர்கள் 13 பேரின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறீர்கள்’ என்று நாம் சொன்னால் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எனவே, நீதிபதி தலைமையில் நீட் தேர்வின் பாதகங்கள் குறித்து ஆராய வல்லுநர் குழு அமைத்திருக்கிறோம். நிச்சயம் தமிழகத்தில் நீட் தேர்வால் நடந்த அநீதிகளை அவர்கள் தெளிவாக அறிக்கையாகத் தாக்கல் செய்வார்கள். அப்படி அவர்கள் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என அழுத்தம் திருத்தமாக ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தி தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு பெறுவோம். இதனை எதிர்த்து தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் தமிழக பா.ஜ.க-வினர் நீதிமன்றம் சென்றால் கூட தமிழக அரசு கண்ணை மூடிக்கொண்டு நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அவர்கள் ஆய்வு செய்து தரவுகளின் அடிப்படையில்தான் நீட் தேர்வு வேண்டாம் எனச் சொல்கிறார்கள்” என தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது போல நீட் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பார்கள்.

” ‘நீட்’ தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்!” – கட்-ஆப் டாப்பர்ஸ் மாணவிகளின் கோரிக்கை

எந்த இடையூறும் இன்றி நீட் தேர்விலிருந்து பா.ஜ.க அரசே தமிழகத்திற்கு விலக்கு என்ற அறிவிப்பை வெளியிட வைப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சட்ட அறிவும், சமுதாய அறிவும் இருப்பவர்களுக்கு இது புரியும். சிலருக்கு அதுபுரியாது. ஆனால், அவர்களை பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை” என விமர்சனங்களுக்கு விளக்கமாகப் பதிலளித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.