`17 வயசான எனக்கு விருப்பமில்லாம எங்க அம்மா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. தயவுசெஞ்சு எனக்கு உதவிசெஞ்சு காப்பாத்துங்க…’ என்று காவலன் செயலி மூலமாக இப்படியொரு புகார் ஈரோடு எஸ்.பி சசிமோகனுக்கு வந்துள்ளது. உடனே எஸ்.பி சசிமோகன் சம்பந்தப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கச்சொல்லி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரிடம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கனகராஜ் (26) என்பவர் பெண் கேட்டுச் சென்றுள்ளார்.

குழந்தை திருமணம் – Representational Image

`என் பொண்ணு இப்பதான் 11-வது முடிச்சி 12-வதுக்கு போறா; ஒரு டிகிரியாச்சும் படிக்க வைக்கணும்னு நினைக்கிறேன். நல்லா படிக்க வச்சு, ஒரு நல்ல இடத்துல என் பொண்ணை கட்டிக்கொடுக்கணும்னு நினைக்கிறேன். கூலிவேலை செய்ற உங்களுக்கு எப்படி கொடுக்குறது.’ எனப் பெண்ணின் தந்தை சொல்லியிருக்கிறார்.

பெண்ணின் தாயோ, `பையன் கூலி வேலை பார்த்தாலும், நல்ல லட்சணமா இருக்காரு. பொண்ணை கட்டிக்கொடுத்துட்டா ஒரு வேலை முடிஞ்சது’ என நினைத்துள்ளார். அதன்பிறகு கனகராஜ் பலமுறை பெண் கேட்டு விசாரிக்கவும், `எப்படியாச்சும் என் பொண்ணை சம்மதிக்க வச்சு, உங்களுக்கு கட்டி வைக்கிறேன்’ என பெண்ணின் தாய், கனகராஜிற்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இடையிடையே மகளிடமும் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த மே 14-ம் தேதி `வாம்மா கோயிலுக்கு போயிட்டு வரலாம்’ என சேலத்திலுள்ள பச்சியம்மன் கோயிலுக்கு மகளை அழைத்துச் சென்றுள்ளார். இவர்கள் செல்வதற்கு முன்னதாகவே திட்டமிட்டு அங்கு கனகராஜை வரவழைத்துள்ளார் சிறுமியின் தாயார். கோயிலுக்குச் சென்றதும், `நீ இப்போ கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் செத்துப் போயிருவேன்’ என அழுது பிளாக்மெயில் செய்திருக்கிறார்.

இதனையெல்லாம் பார்த்து குழம்பிப்போன சிறுமி வேறுவழியில்லாமல் கனகராஜ் தாலிகட்ட அனுமதித்துள்ளார். திருமணம் முடிந்ததும் மகளை கனகராஜூடன் தாய் அனுப்பி வைக்க, சிறுமியோ விருப்பமில்லாமல் கனகராஜ் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நேரத்தில் யாரோ, `காவலன் செயலி மூலமாக புகார் அனுப்பினால், உடனே போலீஸார் வீட்டிற்கு வந்து விசாரிப்பார்கள்’ எனச் சொல்லத்தான் புகார் ஈரோடு எஸ்.பிக்கு வந்திருக்கிறது.

குழந்தைத் திருமணம்

Also Read: `குழந்தை திருமணங்களில் இவர்களும் குற்றவாளிகள்தான்; எச்சரிக்கை!’ – மாவட்ட ஆட்சியர் அதிரடி

இதுகுறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “17 வயதேயான சிறுமிக்கு விருப்பமில்லாமல் பெற்ற தாயே கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார். சிறுமியின் தந்தையிடம் கூட திருமணமான விஷயத்தை மறைத்திருக்கின்றனர். `கோயிலுக்கு கூட்டிட்டு போன மக எங்க’ என கணவர் கேட்டபோது கூட, `எங்க அம்மா வீட்ல அவளை விட்டு வந்துருக்கேன்’ என சிறுமியின் தாயார் விஷயத்தை மறைத்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்த தாய் மற்றும் கனகராஜ் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்’ என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.