தொலைக்காட்சி விவாதங்கள் அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்திருக்கின்றன. தினமும் மக்கள் தொலைக்காட்சிகளுக்கு முன்பாக அமரும் ப்ரைம் டைமில் ஏராளமான அரசியல் விவாதங்களும், சமூக பிரச்னைகள் சார்ந்த விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. செய்தி நிறுவனங்களின் விவாத நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கும் இந்த சூழலில், பாஜகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் நேற்றிலிருந்து தீயாய் பரவி அதுவே ஒரு மிகப்பெரிய விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறது.

நேற்று மாலை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் இனிமேல் பா.ஜ.க-வைச் சேர்ந்த யாரும் செய்தி நிறுவனங்களின் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கமலாலயத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், இல.கணேசன், வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், குஷ்பூ, கே.டி.ராகவன் மற்றும் கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதில், தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக சார்பாகப் பங்கேற்பவர்களுக்கு தங்கள் கருத்தைத் தெரிவிக்கப் போதியளவு நேரம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அப்படியே தெரிவிக்க முயன்றாலும் எதிர் தரப்பினர் பேச விடாமல் தடுத்து பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் விமர்சிப்பதாகவும் பா.ஜ.க சார்பில் விவாதங்களில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று வரும் வானதி சீனிவாசன், கே.டி ராகவன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கமலாலயம்

மேலும், விவாதங்களை முன்னெடுத்து நடத்தும் நெறியாளர்கள் நடுநிலையாகச் செயல்படாமல் பாரபட்சமாகச் செயல்பட்டு வருவதால் பா.ஜ.க சார்பில் இனி யாரும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாதென்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க நிர்வாகிகளின் கருத்துக்களையும், அதிருப்திகளையும் கேட்டறிந்து கட்சியின் மாநில மூத்த தலைவர்கள் தற்காலிகமாக பா.ஜ.க சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இன்று சில நாளிதழ்களும் இந்த விவகாரம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டிருந்தன. பா.ஜ.க-வின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ‘விவாத நிகழ்ச்சிகளுக்கு முழுக்குப்போட்ட பாஜகவினர் – நடந்தது என்ன..?’ என்ற தலைப்பில் இதைக் குறித்தே ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தும் அளவுக்கு விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. ஆனால், பாஜகவினர் யாரும் இது குறித்து தங்கள் ட்விட்டர் பக்கங்களிலோ, அறிக்கைகளிலோ குறிப்பிடவில்லை.

இந்நிலையில், பரவி வரும் வட்டார தகவலை உறுதிப் படுத்த பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவனைத் தொடர்பு கொண்டு கேட்டோம். “ஆமாம் நேற்று மாலை தலைமை அலுவலகத்தில் இது தொடர்பாகக் கூட்டம் நடந்தது. அதில் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.கவினர் ஒருதலைபட்சமாக நடத்தப்படுவது குறித்தும், நெறியாளர்கள் நடுநிலை தவறி விவாதங்களில் நடந்துகொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவாதங்களில் எங்கள் தரப்பு வாதங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதனால், தற்காலிகமாக பா.ஜ.க-வினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஆலோசித்து முடிவெடுத்திருக்கிறோம். கட்சியில் சில விஷயங்களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.