கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டதை அறிந்து, ஒரு கிராமமே அவருக்கு உதவிய சம்பவம், ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பாஸ்கர் ராவ். 38 வயதான இவரின் மனைவி பாக்கியலட்சுமியும் மருத்துவர்தான். பாக்யலட்சுமி குண்டூர் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இந்தக் கொரோனா காலகட்டத்தில் தம்பதியினர் இருவரும் கரஞ்சேடு கிராமத்திலேயே தங்கியிருந்து, அப்பகுதி மக்களுக்கு கொரோனா சிகிச்சையும், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தனர்.

இதற்கிடையேதான் தம்பதியினர் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 24-ல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக ‘தி நியூஸ் மினிட்‘ தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கொரோனா தொற்றுக்கு கணவன் – மனைவி இருவரும் சிகிச்சை எடுத்து வந்தனர். இதில் மருத்துவர் பாக்யலட்சுமி தொற்றில் இருந்து குணமாகிவிட்டார். ஆனால், மருத்துவர் பாஸ்கர் ராவ் நிலைமை கவலைக்குள்ளானது. குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மூச்சுத் திணறலும் ஏற்பட்டதால், ஆக்சிஜன் உதவி மூலம் சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து மே 3 ஆம் தேதி, பாஸ்கர் ராவின் நிலை மோசமடைந்ததால், விஜயவாடாவில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பாஸ்கர் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்துவிட்டது’ என்று கூறப்பட்டிருந்தது.

அவருடைய சிகிச்சைக்கு ஆகும் செலவாக சுமார் ரூ.1.5 முதல் 2 கோடி ஆகுமென மருத்துவமனை தரப்பில் சொல்லியுள்ளனர். அவ்வளவு பெரிய தொகையை கேட்ட மருத்துவர் பாக்யலட்சுமி, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், கணவனின் உயிரை காக்க தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பணம் திரட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

image

இதற்கிடையே, மே 9 ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள சோமாஜிகுடாவின் யசோதா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் மருத்துவர் பாஸ்கர். அங்கு அவரை வென்டிலேட்டர் ஆதரவில் வைக்க வேண்டியிருந்துள்ளது. மறுநாளே ஹைதராபாத் கச்சிபல்லி மருத்துவமனையில் கணவரை சேர்த்தார் பாக்யலட்சுமி. அங்கு அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவை என்றும், இதற்காக சுமார் ரூ.2 கோடி வரை செலவு ஆகும் என்றும் பாஸ்கருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை செய்தால் மட்டுமே மருத்துவர் பாஸ்கர் ராவ் உயிர் பிழைப்பார் என திட்டவட்டமாக அவர்கள் கூறிவிட்டதால், பாக்யலட்சுமி தன்னால் முடிந்த வழிகளில் பணத்தை திரட்டியிருக்கிறார்.

இந்தத் தகவலை கேள்விப்பட்ட கரஞ்சேடு கிராம மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் பாஸ்கரின் நிலை அறிந்து, அவருக்கு உதவுவதற்காக ஒன்று கூடியுள்ளனர். அதன்படி, கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தொகையை கொடுத்துள்ளனர். சிலர் தங்கள் மாத சம்பளத்தை கொடுக்க, பலர் தங்களின் சேமிப்பு பணத்தை மருத்துவரின் உயிர் காக்க கொடுத்தனர். இப்படியாக ரூ.20 லட்சம் அளவுக்கு நிதி திரட்டிய அவர்கள் அதனை பாக்யலட்சுமியிடம் ஒப்படைத்தது அவரை நெகிழ்வைத்தனர்.

கிராம மக்களின் செயலும், பாக்யலட்சுமியின் நிதி திரட்டல் குறித்தும் கேள்விப்பட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மருத்துவர் பாஸ்கரின் சிகிச்சைக்கு ஆகும் செலவை ஆந்திர அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பலர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் பாஸ்கர் ராவ்வின் உயிரை தற்போது கிராம மக்கள் உட்பட பலர் ஒன்றுசேர்ந்து காப்பாற்றியிருப்பது நெகிழவைக்கும் செயலாக மாறியிருக்கிறது.

தகவல் உறுதுணை: தி நியூஸ் மினிட்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.