மும்பையில் பருவமழை தொடங்கியுள்ளது. நான்கு நாட்கள் விடாது கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்று காலையிலிருந்தே மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. செவ்வாய்கிழமை இரவில் இருந்தே மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மத்திய ரயில்வேயில் ஹார்பர் லைன் மற்றும் மெயின் லைனில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ரயில்கள் ஆங்காங்கே அப்படியே பல மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீர்

மேற்கு ரயில்வேயில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. சயான் மற்றும் குர்லா இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. ரயில் தண்டவாளத்தையொட்டிய சாக்கடைகள் சரியாக தூர் வாரப்படாத காரணத்தால் சாக்கடையில் மழை நீர் செல்லமுடியாமல் அவை தண்டவாளத்தில் தேங்கியது. சுன்னாப்பட்டி ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் ஹார்பர் லைனில் ரயில்களை இயக்க முடியவில்லை. தானேயில் இருந்து கர்ஜத், கசராவிற்கு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டது. நின்று போன ரயில்களில் இருந்து மக்கள் இறங்கி தண்டவாளத்தின் வழியாக நடந்து செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதோடு வாகன ஓட்டிகளும் முக்கிய இடங்களில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் வாகனத்தை ஆங்காங்கே நிறுத்திவிட்டு நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை உட்பட நான்கு சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அதிகப்படியாக சென்றதால் அவை தற்காலிகமாக மூடப்பட்டது. மழை நீர் தேங்கும் பகுதிக்கு மக்கள் செல்லவேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. சயான் சர்க்கிள், கிங்சர்க்கிள், பரேல், தாராவி போன்ற பகுதிகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியது. வானிலை மையம் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரித்து இருப்பதாலும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாலும் மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே மழை நிலவரம் குறித்து மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் வைத்து மழை நீரை அகற்றினர். அலுவலகத்திற்கு சென்றவர்கள் பாதியில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.