தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க, அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது; இப்பணிகளில் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் நிகழாமல் தடுக்க, விவசாயிகள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என பசுமை விகடன் சார்பில் வலியுறுத்தியிருந்தோம். இதனை ஏற்று, அந்தந்த கிராமங்களில் உள்ள உழவர்களையும், அதிகாரிகளையும் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தூர்வாரும் பணி

ஆறு மற்றும் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டால்தான், விவசாயிகளின் விளைநிலங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் வந்து சேரும். வெற்றிகரமாக பயிர் சாகுபடி செய்ய முடியும். இதனால்தான் ஆண்டுதோறும் தமிழக அரசு தூர்வாரும் பணிக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால் இப்பணிகள் பெரும்பாலும் நேர்மையாக நடைபெறுவதில்லை. தூர்வாரும் பணி என்பது பெரும்பாலும் பணம் வாரும் பணியாக நடந்து முடிவதுதான் வழக்கம். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேராததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து கடந்த காலங்களில் பசுமை விகடனிலும், விகடன் இணையதளத்திலும் விவசாயிகளின் ஆதங்கங்களை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்துள்ளோம். இந்நிலையில்தான் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, இப்பணிகளை கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்தது. ஆனால் இதனால் மட்டுமே முறைகேடுகளையும் குறைபாடுகளை தடுத்துவிட முடியாது எனவும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகளை கொண்ட கண்கானிப்பு குழு அமைத்தால்தான், தூர்வாரும் பணி ஓரளவுக்காவது முறையாக நடைபெறும் என பசுமை விகடன் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கினோம். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் அனுப்பினோம். இந்நிலையில்தான் தூர்வாரும் பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள விவசாயிகளை உள்ளடக்கிய உழவர் குழு அமைக்க கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

இறையன்பு ஐ.ஏ.எஸ்

Also Read: `தூர்வாரும் பணிக்கு அதிகாரிகள் நியமனம் மட்டுமே போதாது!’ – முதல்வருக்கு விவசாயிகளின் சில ஆலோசனைகள்

இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தியிடம் நாம் பேசியபோது, “பசுமை விகடன் எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள். கண்டிப்பாக இது பலன் கொடுக்கும். தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்று, விவசாயிகள் முழுமையாக பலனடைய வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இப்பணிகளில் குறைப்பாடுகள் இருந்தால், அதைச் சரிசெய்து உடனடியாக மேம்படுத்த, தற்போது புதிதாக அமைக்கவுள்ள உழவர் குழு உறுதுணையாக இருக்கும். தூர்வாரும் பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உழவர் குழு அமைக்கப்படும். இக்குழுவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மூன்று பேர் இடம்பெறுவார்கள். பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும் இக்குழுவில் இடம்பெறுவார்கள். தங்கள் பகுதியில் நடைபெறும் தூர்வாரும் பணியை உழவர் குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும். பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இக்குழுவில் உள்ள விவசாயிகள், அதில் ஏதேனும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால், உடனடியாக அதை சரி செய்ய, கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்’’ என தெரிவித்தார்.

இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது. காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், “விவசாயிகளின் குரலாக பசுமை விகடன் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பசுமை விகடன் பாலமாக திகழ்ந்து விவசாயிகளுக்கு பல நன்மைகளை செய்துள்ளது. தூர்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, விவசாயிகள் அடங்கிய குழுவை அமைக்க பரிந்துரை செய்தமைக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். இதனை ஏற்று நடைமுறைப்படுத்தும் தமிழக அரசுக்கு விவசாயிகளின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இளங்கீரன் – சுகுமாறன்

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணை செயலாளர் சுகுமாறன், “உழவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைப்பது பாராட்டுக்குரியது. ஆனால் இக்குழுவில் விவசாயிகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளை நியமித்துவிடக்கூடாது. உண்மையான விவசாயிகள் நியமிக்கப்படவில்லையென்றால், இக்குழுவும் ஊழலுக்குதான் வழி வகுக்கும். பணி நடைபெறும் இடங்களில் உடனடியாக தகவல் பலகை வைக்கப்படுவதோடு, கண்காணிப்பு குழுவில் இடம்பெற்று விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை அதில் குறிப்பிட வேண்டும். தூர்வாரும் பணியில் ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால் அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகள் இக்குழுவினரை தொடர்புகொள்ள இது வசதியாக இருக்கும்’’ என ஆலோசனைகளைத் தெரிவித்தார்.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு உழவர்கள் சார்பில் நன்றி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.