சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (34). இவர் ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் பிரியன் (2) என்ற மகனும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த லோகநாதன், வருமானமின்றி குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்திருக்கிறார். அதனால், கூலி வேலைக்கு சென்று வந்தார்.

முதல் தகவல் அறிக்கை

இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி பிற்பகலில் பனை மரத்தில் நுங்கு வெட்ட லோகநாதன் ஏறியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகநாதன், மரத்திலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

லோகநாதனின் சகோதரர் குமார் என்பவர் சோழவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கொரோனாவால் கல்லூரிகள் மூடியுள்ள நிலையில் கிடைத்த வேலைகளை லோகநாதன் செய்துவந்தார். லோகநாதனின் மனைவி சாந்தி, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அதனால் அவர் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தனியாக இருந்த லோகாநாதன், அலமாதி, கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையிலிருக்கும் பனைமரத்தில் ஏறி நுங்கை வெட்டியிருக்கிறார். அப்போது அவர் கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவரின் சடலத்தை பிரேத பரிசேதனைக்குப்பிறகு ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சடலம்

Also Read: மாஸ்க் அணிவது கொரோனா பாதிப்பை மேலும் மோசமாக்குமா? – பரவும் வாட்ஸ்அப் தகவல்; உண்மை என்ன?

பேராசிரியராக வேலைப்பார்த்த லோகநாதன், வருமானமின்றி தவித்த காரணத்தால் பனை மரத்தில் ஏறி நுங்கை வெட்டியபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அலமாதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆதரவின்றி தவிக்கும் லோகநாதனின் மனைவியான கர்ப்பிணி சாந்திக்கும் அவரின் மகன் பிரியனுக்கும் அரசு உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலமாதி கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.