இந்தியாவில் அண்மைய காலமாக தேசத்துரோக வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கொரோனா தொற்று தொடர்பான செய்திகளை வெளியிட்ட இரண்டு தெலுங்கு மொழி டிவி சேனல்கள் மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு. வழக்கமாக பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் படிப்பாளிகள் மாதிரியான தனிமனிதர்கள் மீது இந்த தேசத்துரோக வழக்கு பாய்ந்து வந்த நிலையில் ஆந்திரா டிவி சேனல்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. 

வழக்கு பதிவு செய்யப்பட்ட டிவி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசத்துரோக சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

image

தேசத்துரோக சட்டத்தின் வரலாறு!

காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் விட்டுச் சென்ற எச்சங்களில் ஒன்றுதான் இந்த தேசத்துரோக சட்டம். இந்த சட்டம் 19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே தேசத்துரோக சட்டத்தை கடந்த 1837 வாக்கில் முன்மொழிந்துள்ளார். இருப்பினும் சில பல காரணங்கங்களால் இந்த சட்டத்தை அப்போது நடைமுறைக்கு கொண்டு வராமல் இருந்துள்ளனர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். 

பின்னர் 1870இல் பிரிட்டிஷ் நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் பலமான காரணமும் இருந்தது. சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தடுக்க இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. 

அந்த சட்டம் அப்படியே வாழையடி வாழையாக வாழ்வாங்கு சுதந்திர இந்தியாவிலும் இந்திய தண்டனை சட்டத்தில் தொடர்ந்து வருகிறது. இடைப்பட்ட காலத்தில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

எதற்காக இந்த சட்டம் வரையறுக்கப்பட்டது?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைந்துள்ள அரசுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவது, அரசுக்கு எதிராக எழுதுவது, நாடகம் மற்றும் படம் அல்லது வேறு வகையில் தேசத்திற்கு எதிரான செயல்களை செய்வது மாதிரியானவை தேசத்துரோக குற்றத்தின் சட்டப்பிரிவில் வருகிறது. இந்த குற்றம் நிரூபணமானால் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தொடங்கி ஆயுள் தண்டனை வரை சிறையில் அடைபட்டு இருக்க வேண்டும்.

2015 – 2019 : அதிகரித்து வரும் தேசத்துரோக வழக்குகள்

 image

Source : NCRB

இதில் கடந்த 2019இல் மட்டும் 96 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016 உடன் ஒப்பிடும் போது வழக்கு பதிவு எண்ணிக்கை 160 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கால் செய்யப்பட்டு, தண்டனை பெற்றவர்கள் 3.3 சதவிகிதம் பேர் தான். 96 பேரில் 2 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். 

ஆதரவும்! எதிர்ப்பும்!

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக விமர்சனங்களை அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த விமர்சனம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் அதை தடுப்பதற்கான சட்டம் தான் இது என இந்த சட்டத்திற்கு ஆதரவான மனநிலையில் உள்ளவர்வகள் பொதுவாக சொல்கின்றனர். 

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ஆதிகால சட்டம் இது. அப்போது ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்தவர்களின் குரலை நெரிப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இது தேவையற்ற சட்டம். அதனால் இந்த சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்பாளர்களும் பல்வேறு தருணங்களில் தெரிவித்துள்ளனர். 

எந்தவொரு சட்டத்தையும் சரியாக பயன்படுத்தினால் அதில் எந்த சிக்கலும் இல்லை. சில சமயங்களில் அந்த சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதன் பின்விளைவுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனை கருத்தில் கொண்டுதான் ஆந்திர தொலைக்காட்சிகளின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ‘தேசத்துரோகம் என்றால் என்ன?’ என்பதை சரியாக வரையறுக்க வேண்டியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. 

தேசத்துரோக சட்ட விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

– எல்லுச்சாமி கார்த்திக்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.