தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரம் கிழக்கு 7-வது தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் 4 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில், ராஜமுருகன் என்பவர், தன் மனைவி மீனாட்சி, மகள் பரமேஸ்வரி, மகன் சுந்தர் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜமுருகன், மரவேலை செய்து வருகிறார். மகள், பரமேஸ்வரி பி.இ முடித்துவிட்டு தனியார் வாட்டர் ஹீட்டர் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். மகன், சுந்தர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

உயிரிழந்த பரமேஸ்வரி

இவர்கள் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரையின் உள்பகுதியின் சிமெண்ட் பூச்சு பிழந்து இரும்புக்கம்பிகள் தெரியும் அளவிற்கு சேதமடைந்திருக்கிறது. இந்த நிலையில், இரவில் நான்கு பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூரையின் உள்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது தம்பி சுந்தர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த பரமேஸ்வரியின் அப்பா ராஜமுருகன் பேசும்போது, “நான் மரவேலைக்குப் போகிற கூலித் தொழிலாளி. நம்மபட்ட கஷ்டம், பிள்ளைகள் படக்கூடாதுன்னுதான் ரெண்டு பிள்ளைகளையும் படிக்க வச்சேன். எனக்கு சில நேரம் வேலை இருக்கும். பல நேரங்கள்ல வேலை இருக்காது. குடும்பமும் வறுமையிலதான் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இப்போ ஆறு மாசமாத்தான் என் மகள் வேலைக்குப் போய்கிட்டு இருந்தா.

பரமேஸ்வரியின் தந்தை ராஜமுருகன்

ஓரளவு கஷ்டம் குறைஞ்சுட்டு. இந்த காம்பவுண்ட்ல உள்ள எல்லா வீட்டுலயும் மேற்கூரையின் உள்பகுதி சேதமடைஞ்சுதான் இருக்கு. வீட்டு ஓனர்ட்ட மேற்கூரையை சரி செஞ்சுத்தாங்கய்யான்னு பல தடவை சொன்னோம். ’அடுத்த மாசம் சரி செஞ்சுருவோம்’னு ஒவ்வொரு மாசமும் சொல்லிக்கிட்டுதான் இருக்கார். வாடகையை மட்டும் கரெக்ட்டா வாங்கிடுவார். கடைசி வரைக்கும் மேற்கூரையை சரி செஞ்சே தரலை.

நடு ராத்தியில ’டம..டம’ன்னு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு. பதறியடுச்சு எந்திருச்சுப் பார்த்தா என் மகள் மேல நாலஞ்சு சிமெண்ட் கட்டிகள் கிடந்துச்சு. அதை தூக்கிப் போட்டுட்டுப் பார்த்தப்போ, மூச்சுப் பேச்சில்லாம என் மகள் ரத்தவெள்ளத்துல கிடந்தாய்யா. அதைப் பார்த்ததுமே என் உயிரே போயிடுச்சு. டி.என்பி.எஸ்.சி பரீட்சைக்கு தினமும் என் மகள் படிச்சுக்கிட்டு இருப்பா. ’காலையில சீக்கிரம் எழுப்புங்கப்பா… படிக்கணும்’னு சொல்லிட்டுப் படுத்தா. இப்படி படுக்கையிலயே உயிர் பிரியும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலையே ஆண்டவா… மேற்கூரையை மட்டும் சரி செஞ்சுக் கொடுத்திருந்தா என் செல்ல மகள் என்னை விட்டுப் போயிருக்க மாட்டா” என்றார் ஆற்ற முடியா துயரத்துடன்.

இடிந்து விழுந்த மேற்கூரையை ஆய்வு செய்த எஸ்.பி., ஜெயகுமார்

இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை எஸ்.பி ஜெயக்குமார், டி.எஸ்.பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.