மதுரையில் இருக்கும் கோயில்கள் அனைத்தையும் தரிசித்து முடிக்க வேண்டும் என்றால் அதை ஓரிரு நாள் சுற்றுலாவில் செய்யவே முடியாது. காரணம் மதுரையில் திரும்பிய திசையெங்கும் பழைமை வாய்ந்த கோயில்கள் ஏராளம். அவற்றில் எதையும் தவற விடவும் முடியாது. காரணம் அனைத்து ஆலயங்களும் மதுரையின் கலை, கலாசார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையன. ஆன்மிக ரீதியாகவும் முக்கியமான கோயில்களாகவும் பக்தர்களுக்கு வேண்டும் வரம்தரும் கோயில்களாகவும் அவை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட கோயில்கள்தான் தெற்கு கிருஷ்ணன் கோயில் மற்றும் வடக்குக் கிருஷ்ணன் கோயில்.

தெற்கு கிருஷ்ணன் கோயில், மதுரை

மதுரையின் மையம் மீனாட்சி அம்மன் கோயில் என்றால் அதற்குத் தெற்கே இருக்கும் கோயில் இது. ஆதலால் இதற்குத் தெற்கு கிருஷ்ணன் கோயில் என்ற பெயர் ஏற்பட்டது. கிருஷ்ணன் பெயரால் அந்தக் கோயில் குறிப்பிடப்பட்டாலும் இங்கு மூலவர் பிரசன்ன வேங்கடேச பெருமாள். இங்கு பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில் கொண்ட நிகழ்வு மிகவும் சுவாரஸ்யமானது.

இந்தக் கோயிலில் முதலில் கிருஷ்ணன்தான் பிரதான தெய்வமாக அருள்பாலித்தார். 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பூஜை செய்துவந்த அடியவர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் வைகை நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாகவும் தன்னை இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்.

அதன்படி அந்த பக்தர் மறுநாள் ஊர்மக்களோடு வைகைநதிக் கரைக்குச் சென்று பார்த்தார். மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் கருடன் ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வட்டமிட கருடனின் நிழல் விழும் இடத்தைத் தோண்டச் செய்தார்கள். அப்போது அங்கு பெருமாளின் திருவுருவம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதைப் பிரதிஷ்டை செய்தனர்.

சுயம்புவாய் பிரசன்னமான வேங்கடேசன் என்பதால் இந்த மூலவருக்குப் பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற திருப்பெயரே ஏற்பட்டது. இந்தப் பெருமாள் காண்பதற்கு சதுர் புஜங்களோடு திருப்பதி பெருமாள் போலவே காட்சி கொடுப்பார். அதனால் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தெற்கு கிருஷ்ணன் கோயில்

இங்கு ஆதி மூர்த்தியாக விளங்கியவர் நவநீத கிருஷ்ணன்தான் என்பதால் இப்போதும் அவருக்குதான் முதல் பூஜை. இங்கு நவநீத கிருஷ்ணன் நடனத் திருக்கோலத்தில் காட்சி கொடுப்பது மிகவும் விசேஷம். இந்தக் கிருஷ்ணனுக்கு அவல் பாயாசம் நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டால் கேட்ட வரம் கிடைக்கும். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அந்த வரம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.

கோயிலின் உள் நுழைந்ததும் சங்கு சக்கரத்தோடு அருள்பாலிக்கும் வைஷ்ணவ விக்னேஷ்வரரை தரிசனம் செய்யலாம். தாயார், சக்கரத்தாழ்வார், சீதா தேவி லட்சுமணர் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, பள்ளிகொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணர், லட்சுமி ஹயக்ரீவர், யோக நரசிம்மர், கருடர் ஆகியோரும் இங்கு சந்நிதி கொண்டு அருள்கிறார்கள்.

இங்கு கோயில்கொண்டிருக்கும் அனுமன் மிகவும் பிரமாண்ட திருமேனியராகக் காட்சிகொடுக்கிறார். நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல அஞ்சலி ஹஸ்தராகக் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டால் தீராத வினைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதுவரை இந்தக் கோயிலில் 127 பிரம்மோற்சவங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த உற்சவத்தின்போது பங்குனி மாதம் இத்தலப்பெருமாள், குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது.

தெற்கு கிருஷ்ணன் கோயில் அனுமன்

ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பிரதோஷ வேளையில் யோக நரசிம்மருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் இங்கு நடைபெறுகின்றன. அந்த வேளையில் நரசிம்மரிடம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகின்றனவாம். இந்த ஆலயம் சுற்றியிருக்கும் சௌராஷ்ட்ர இன மக்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் ஆலயமாகத் திகழ்கிறது.

வடக்குக் கிருஷ்ணன் கோயில்

மதுரை, வடக்குமாசி வீதியின் மையப் பகுதியில். சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இந்த நவநீத கிருஷ்ண ஸ்வாமி திருக்கோயில். இந்தக் கோயில் மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால், ‘வடக்கு கிருஷ்ணன் கோயில்’ என்றும் ஆதிகாலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், ‘கம்பத்தடி கிருஷ்ணன் கோயில்’ என்றும் அழைக்கிறார்கள் பக்தர்கள். திருமலை மன்னர் காலத்திலேயே இங்கு இந்தக் கோயில் மிகச்சிறியதாக இருந்தது என்றும் பிற்காலத்தில் அதாவது 1909-ம் ஆண்டு இந்தக் கோயில் கற்கட்டுமானமாக எழுப்பப்பட்டது என்றும் 1947-ம் ஆண்டு தற்போது இருக்கும் கோயிலாக உருவானது என்றும் சொல்கிறார்கள்.

நவநீத கிருஷ்ணன்

இந்தக் கோயில் மிகவும் எழிலுடன் முழுக்க முழுக்கக் கல்கட்டுமானமாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு இரண்டு திருக்கரங்களிலும் கிருஷ்ணன் வெண்ணை ஏந்தியிருக்கும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பாமா, ருக்மணி ஆகிய தேவியர் உடன் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.

குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று குழந்தைக்குச் சோறூட்டுவதாக வேண்டிக்கொண்டு அங்கு செல்ல இயலாதவர்கள், இந்த ஸ்ரீநவநீதகிருஷ்ணன் சந்நிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது ஐதிகம். புத்திரதோஷம் உள்ளவர்கள், இந்தக் கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து, அவருக்குக் கொலுசு அணிவிப்பதாகவும், கோயிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டால், குறிப்பிட்ட தோஷம் நீங்கும்; விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Also Read: வைகாசி விசாகம்: வில்லேந்திய வேலவன், கமண்டலம் ஏந்திய கந்தன், ஐந்துமுக அழகன்… 9 அற்புதத் தலங்கள்!

மாசிமாதம் நடைபெறும் உற்சவம் இங்கு விசேஷமாக நடைபெறும். அந்த விழாவின் போது உற்சவர், திருப்பாளை என்னும் யாதவர்கள் அதிகமாக வாழும் பகுதிக்கு எழுந்தருள்வார்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் 2-ம் நாள் உறியடி உற்சவம் நடைபெறும். மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, இங்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறும். அதேபோல் 9-ஆம் நாளன்று முளைப்பாரி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

நவநீத கிருஷ்ணன்

அன்று, ஆசியாவிலேயே மிக நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோயிலின் புஷ்பப் பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணன். இப்படி, 15 நாள்கள் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீநவநீத கிருஷ்ணனை வழிபட்டு வர, நலன்கள் யாவும் ஸித்திக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.