`ஜெல்லி’ வகை மீன்கள் கடலில் ஆழமான இடங்களில் அதிகமாக வாழ்கின்றன. சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில், குறிப்பிட்ட சிலவகை இனங்கள் மட்டும் அதிக விஷத்தன்மை உடையவை. கடலில் மட்டுமே வாழும் எனக் கருதப்பட்டவை ஜெல்லி மீன்கள். ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற வேலூரைச் சேர்ந்த 4-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் இஷான், படகுசவாரியின் போது ஏரியில் கண்ட ஜெல்லி வகை மீன்களை லாவகமாக சேகரித்துள்ளார். அதனை தன் தந்தை கிஷோரின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள `தேசிய கரையோர மேலாண்மை மையம்’ மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் ஆய்வுக்காக கொடுத்துள்ளார்.

ஜெல்லி மீன்

ஆய்வில் அது ஒரு வகை ஜெல்லி மீன்தான் என உறுதி செய்தனர். கடல் நீரில் மட்டுமல்ல நன்னீரிலும்கூட இவ்வகை மீன்கள் அரிதாக காணப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியிலுள்ள கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக ஜெல்லி வகை மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியுள்ளன. பார்ப்பதற்கு வழவழப்பாக இருப்பதால், கடல் பாசி என நினைத்து மீனவர்கள் கையில் எடுத்துப் பார்த்துள்ளனர்.

கையில் எடுத்த அடுத்த சில நிமிடங்களில் கைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு மீனவருக்கு அதிகப்படியான அரிப்பால் கைகள் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். தற்போது அந்த மீனவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களிடம் பேசினோம். “மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்குறதுனால நாங்க யாருக்கும் மீன் பிடிக்கப் போகலை. படகுகள்ல உள்ள பழுதை சரி செய்யுறது, பெயிண்ட் அடிக்கிறது, மோட்டார் சர்வீஸ், வலைகளைப் பின்னுறதுன்னு பழுதுபார்ப்பு வேலைகளைப் பார்த்துக்கிட்டிருக்கோம்.

ஜெல்லி மீனால் மீனவர் ஒருவருக்கு கையில் ஏற்பட்ட கீறல்கள்

ரெண்டு நாளா நுங்கு மாதிரி வெள்ளையா வழவழப்பா தட்டை, உருண்டை வடிவத்துல நிறையாக் கரை ஒதுங்குச்சு. ஆழ்கடல்ல மீன் பிடிக்கப் போகும்போது இதே மாதிரி வலைகள்ல ஒன்னு ரெண்டு ஒட்டிக்கும். வலையை உதறுவோம். கீழே விழுந்துடும். ஆனா, கையாலத் தொட்டதில்ல. இப்போ, கரையிலயே நிறைய ஒதுங்கினதுனால ஒருவேளை, கடல் பாசியில ஒருவகையா இருக்குமோன்னு நினைச்சோம். அதுல ஒருத்தர், கையில எடுத்துப் பார்த்தார். சுள்ளுச் சுள்ளுன்னு அரிக்கிதுன்னு சொல்லிக் கீழே போட்டுட்டார்.

இன்னொருத்தருக்கு அடுத்த அஞ்சு நிமிசத்துல, முள்ளு கிழிச்ச மாதிரி கையெல்லாம் கோரைக் கோரையா ஆகி மயக்கமாயிட்டார். அதுக்கப்புறம்தான் அது ஜெல்லி மீன்கள்ல ஒரு வகைன்னு தெரிஞ்சுது. கரைகள்ல விரிச்சிருந்த மீன்பிடி வலைகள்ல சிக்கியிருந்த மீன்களை உதறி குழியில போட்டு மூடிட்டோம். அந்தப்பக்கம் யாரும் போகவேண்டாம்னு ஊருல சொல்லிட்டோம். `இந்த ஜெல்லி மீனைப் பார்த்தா யாரும் கையாலத் தொட வேண்டாம்’னு பக்கத்து மீனவ கிராமங்கள்லயும் தகவல் சொல்லிட்டோம். இந்த வகை மீன்களைப் பற்றி முன்பின் தெரியாதவர்களோ, குழந்தைகளோ தொட்டால் ஆபத்தாகிவிடும்.

வலையில் சிக்கிய ஜெல்லி மீன்கள்

எனவே, மீன்வளத்துறை சார்பில் இந்த மீன்கள் குறித்து கடற்கரைப் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து மீன்வள ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் பேசினோம். “ஜெல்லி மீன்களின் மேல் பகுதி குடை வடிவத்தில் இருக்கும். இதன் ஓரங்களில் உணர் கொம்புகள் உள்ளன. கைப்பிடி போல கீழ்நோக்கிச் செல்லும் வாய்த்தண்டும் உள்ளது. வாயின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஒரு கை வீதம் நான்கு முதல் எட்டு கைகள் வரை உள்ளன. இவற்றின் முழு உடலும் ஒளி ஊடுறுவும் விதத்தில் இருக்கும். இவற்றின் உடலில் 5% மட்டுமே திடப்பொருள். மீதமுள்ள 95% நீரால் ஆனது. இதனால்தான், வழவழப்பான ஜெல்லி போலக் காணப்படுகிறது. குடை போன்ற போன்ற பகுதியைச் சுருக்கி, நீரை உந்தித்தள்ளி அதன் மூலம் நீரில் நீந்துகின்றன.

இவை, கடலில் ஏதாவது சிறு மீனைக் கண்டால் இதன் உணர்கொம்புகளில் இருக்கும் நூல்களை வெளியே வீசி இரையைப் பிடித்து விடும். மீனவர்களின் வலைகளிலும் இந்த ஜெல்லி வகை மீன்கள் சிக்கும். வலையை உதறினாலே இவை தானாக கீழே விழுந்து நகர்ந்து கடலுக்குள் சென்றுவிடும். பார்ப்பதற்கு வழவழப்பான வெள்ளை நிற ஜெல்லி போல இருப்பதால் சில நேரங்களில் மீனவர்கள் கையால் எடுத்துப் பார்ப்பதுண்டு.

வலையில் சிக்கிய ஜெல்லி மீன்களை அப்புறப்படுத்தும் மீனவர்கள்

ஜெல்லி மீன் மீது கை பட்டாலே இதன் உணர்கொம்புகளில் உள்ள `நீடாபிளாஸ்ட் செல்’களால் கைகளில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு சொறி, சிரங்காகவும் மாறும். தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் ஏற்படுத்தும். சற்று பெரிய மீன்களாக இருந்தால், தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக உணர்கொம்புகளால் கொத்தி விடும். இதனால், ஊசி குத்தியதுபோலவோ, தேனீ கொட்டியது போலவோ இருக்கும். கொத்திய இடங்களில் பிளேடால் கிழித்ததுபோல காணப்படும். இந்த புண்கள் ஆற 5 நாட்கள் வரை ஆகலாம்” என்றனர்.

ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் இவ்வகை ஜெல்லி மீன்கள், யாஸ் புயலினால் கடற்கரையில் ஒதுங்கியிருக்கலாம் என்கிறார்கள் மீனவர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.