2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்” என்றார். விமர்சனங்கள் வந்தன. அநேக மக்கள் வேறு வழியில்லாமல் அதை சகித்துக் கொண்டனர்.

மோடி

2017-18 நிதியாண்டின்போது 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுமார் 72 மில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி 2018-19-ம் நிதி ஆண்டின் அறிக்கையில் தெரிவித்தது. மதிப்பின் அடிப்படையில், 2017-18 நிதியாண்டில் ரூ.6,72,600 கோடி இருந்த இதன் மதிப்பு, 2018-19-ம் ஆண்டில் ரூ.6,58,200 ஆக குறைந்துள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் 2020-2021-ம் ஆண்டுக்கான வருடாந்தர நிதிநிலை அறிக்கையையிலும், ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை புழக்கத்திலிருந்து குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்த 3,363 மில்லியன் நோட்டுகளிலிருந்து, மார்ச் 2021-ம் ஆண்டு நிலவரப்படி 2,415 மில்லியன் நோட்டுகளாகக் குறைந்துள்ளன. அதாவது, மொத்தம் 912 மில்லியன் நோட்டுகள் குறைந்துள்ளன.

மதிப்பு அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம் ரூ. 5.48 லட்சம் கோடியாக இருந்த ரூ.2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021-ம் ஆண்டில் ரூ.4.9 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை மெல்ல மெல்ல திரும்பப் பெறுவது என்பதற்கான காரணத்தை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. மேலும், இந்த அறிக்கையில், 2019-2020-ம் நிதி ஆண்டைப் போலவே, கடந்த நிதியாண்டிலும் ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அச்சடிப்பு நிறுத்தம், புழக்கத்திலிருந்து ரூ.2,000 நோட்டுகள் குறைவது போன்ற காரணங்களால், ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. மக்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேட, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் பேசினோம்.

தாமஸ் ப்ராங்கோ

Also Read: ரூ.2,000 நோட்டுகள் செல்லாதா; புதிய ரூ.1,000 நோட்டு வெளியாகிறதா..? உண்மை என்ன?!

“மக்கள் பீதியடைய மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போது எஸ்.குருமூர்த்தி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசும்போது, `ரூ.2000 நோட்டை மீண்டும் கொஞ்ச நாள்களில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும்’ என்று கூறினார். அப்போதே மக்கள் மத்தியில் இதுகுறித்த சந்தேகப்பேச்சு தொடங்கிவிட்டது. தற்போது இவர் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அவர் நினைத்தால் அந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கலாம். எனவே, அந்த சந்தேகம் வலுப்பது இயல்புதான்.

இரண்டாவது, தற்போது ரூ.2000 நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏன் நிறுத்திவிட்டார்கள், இதைத் திரும்பப்பெற நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதற்கு இதுவும் காரணமாகிறது.

மூன்றாவதாக, இவர்கள் வெளியிட்ட ரூ.2000 நோட்டுக்களில் பெரும்பாலான நோட்டுக்கள் திரும்பவும் வங்கிக்கு வரவில்லை. அவற்றைப் பதுக்கியிருக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி கருதினால், மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டுவருவார்களோ என்ற அச்சம் உள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளாக

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்த எதுவும் பெரிதாக நடக்கவில்லை. எனவே, இம்முறை மீண்டும் முயற்சி செய்து சாதிக்க நினைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுகிறது. மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் மக்களிடையே கிளம்பியுள்ள பீதியைப் போக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, ரிசர்வ் வங்கி தரப்பிலும் இந்த ரூ.2000 நோட்டு பிரச்னை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் தரப்பட வேண்டும். இல்லை என்றால் பணப்புழக்கத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே போகும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.