கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பையே அறியாமல் அமைதியாக இருந்த கிராமங்களில்கூட தற்போது மரண ஓலங்கள் கேட்கத் தொடங்கியிருப்பதால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

முனைஞ்சிபட்டி கிராமம்

நெல்லை மாவட்டம் முனைஞ்சிபட்டி அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளரான ஞான மரியசெல்வி என்பவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார். அவரது மறைவு ஒரு குடும்பத்தையே நிலைகுலைய வைத்துள்ளது. மூன்று சிறுவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நெஞ்சை உலுக்கும் அந்தச் சோகச் சம்பவம் இது தான்..

நெல்லையிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள துத்திகுளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாணிக்கராஜ் என்ற லாரி ஓட்டுநருக்கும் ஞான மரியசெல்வி என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமண ஆல்பம்

இந்த தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றிய ஜெபமாணிக்கராஜ், வேலை விஷயமாக பாரம் ஏற்றிய லாரியில் ஆந்திராவுக்குச் சென்றபோது அங்கு நடந்த சாலை விபத்தில் 2016-ம் ஆண்டு உயிரிழந்தார்.

கணவனை இழந்த துக்கம் ஒருபக்கம், கைக்குழந்தைகள் மறுபக்கம் என வறுமையில் வாடிய ஞான மரியசெல்வி, கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றினார். ஜெயமாணிக்கராஜின் தாய் அன்ன புஷ்பம் என்பவர் ஹோட்டலில் பாத்திரம் தேய்த்துக் கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொடுத்து உதவிசெய்து வந்தார்.

பாட்டி அன்ன புஷ்பத்துடன் சிறுவர்கள்

தற்போது 9 வயதான் ஸ்டீபன் ராஜ், தர்மராஜ் என்ற இரட்டையர்கள் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்கள். செல்வின் என்ற 6 வயது மகன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கணவனை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் திணறிய ஞானமரியசெல்விக்கு, கைம்பெண் என்ற அடிப்படையில் மூன்று வருடங்களுக்கு முன்பு அங்கன்வாடி பணியாளராக வேலை கிடைத்தது.

அங்கன்வாடி பணியாளராகக் கிடைத்த வேலையின் மூலம் நிம்மதியாக மூன்று குழந்தைகளையும் அவர் படிக்க வைத்து வந்தார். தன்னுடைய கணவன் இல்லாத சூழலில் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் ஞான மரியசெல்வி சொல்லி வந்திருக்கிறார்.

Also Read: `சைக்கிள் வாங்க சிறுகச் சிறுக சேர்த்த பணம்..!’ -கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவனின் மனிதாபிமானம்

குழந்தைகளின் படிப்பில் அதிக அக்கறை எடுத்துவந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது. நாட்டு மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில வருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்த நிலையில் தற்போது தங்களைப் பராமரித்த தாயும் உயிரிழந்திருப்பதால் மூன்று சிறுவர்களும் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள்

சிறுவர்கள் மூவருமே அறியாத வயது கொண்டவர்கள் என்பதால் பெற்றோரை இழந்த சோகத்தைக் கூட உணராமல் விளையாடிக் கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சம். சிறுவர்கள் மூவரும் தற்போது பாட்டி அன்ன புஷ்பம் பராமரிப்பில் இருக்கிறார்கள்.

இது பற்றி அன்ன புஷ்பம் கூறுகையில், “எனக்கு தினமும் கிடைக்கும் 200 ரூபாய் சம்பளத்தை வைத்து ஏதுமறியாப் பருவத்தில் இருக்கும் இந்தச் சிறுவர்களின் கல்விக்கும் உணவுக்கும் எப்படி செலவு செய்யப் போகிறேன். இவர்களை எப்படி வளர்க்கப் போகிறேன் என்பதே புரியவில்லை.

கண்ணீர் வடிக்கும் பாட்டி அன்ன புஷ்பம்

மூன்று பேருமே நல்லா படிப்பாங்க. அவங்களை நல்லப் படிக்க வைக்கணும்னு அடிக்கடி சொல்லிக்கிட்டிருந்தவளை அநியாயமா கொரோனா கொண்டுட்டுப் போயிருச்சு. இந்தச் சிறுவர்களின் படிப்புக்கு அரசுதான் உதவி செய்யணும். அவர்களின் எதிர்காலத்துக்கு நல்ல மனசு கொண்டவங்க கொஞ்சம் உதவி செய்தால் தான் மூணு பேரையும் கரை சேர்க்க முடியும்” என்று சொல்லி கதறினார்.

இதனிடையே, ஆதரவற்ற மூன்று சிறுவர்கள் குறித்துக் கேள்விப்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, உடனடியாக துத்திகுளம் கிராமத்துக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரான ரமேஷை அனுப்பி வைத்தார். அவர் குழந்தைகளின் பாட்டி மற்றும் கிராமத்தினரிடம் சிறுவர்களின் நிலைமை பற்றி கேட்டறிந்தார்.

சிறுவர்களின் ஓட்டு வீடு

இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் ரமேஷிடம் கேட்டதற்கு, ”ஆட்சியரின் அறிவுறைப்படி இங்கு வந்து விசாரித்திருக்கிறேன். இந்தச் சிறுவர்களின் நிலைமை குறித்து ஆட்சியருக்குத் தெரியப்படுத்துவேன். சிறுவர்கள் கல்வியைத் தொடர அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.