தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளதால், இதனைக் கட்டுப்படுத்த மே 24-ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்வதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தற்போது அறுவடைக்கு வந்து, விற்பனைக்குத் தயாராக உள்ள காய்கறிகள், பழங்கள், வாழை இலை, மலர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக விற்பனை செய்தாக வேண்டும்.

Tamilnadu CM MK Stalin

இவை விரைவில் அழுகக்கூடிய விளைபொருள்கள். இவற்றை விற்பனை செய்யக்கூடிய மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை கடைகள், காய்கறிச் சந்தைகள், சாலையோர கடைகள், முழு ஊரடங்கின் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு இயங்காது. இதனால் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள், வாழை இலை, மலர்கள் உள்ளிட்டவற்றை எங்கு விற்பது எனத் தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

காய்கறிகள் விநியோகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள்மூலம், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே நேரடியாகச் சென்று காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை விற்பனை செய்ய, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைக்குழு அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம் எனவும் அனைத்து மாவட்டங்களுக்கும் தொடர்பு எண்களை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்களைத் தொடர்பு கொண்ட விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், “நான் அறுவடை செஞ்சிருக்குற வாழைத் தார்களை விற்பனை செய்றதுக்காக, தஞ்சாவூருக்குரிய அலுவலரைத் தொடர்புகொண்டேன். குளிர்பதனக் கிடங்கில் வைக்கணுமானு அவர் கேட்டார். பொருளாதார நெருக்கடியில இருக்கேன். `உடனடியாகப் பணம் தேவை. என்னோட வாழைத்தார்களை வித்துக்கொடுப்பீங்களா?’னு கேட்டேன். அவர் இன்னொரு அலுவலரோட நம்பரைக் கொடுத்து, அவரைத் தொடர்புகொண்டால், அவர் உங்களுக்கு இ-பாஸ் கொடுப்பார். நீங்க எங்க வேணும்னாலும் உங்களோட வாழைத்தார்களை கொண்டுப் போயி வித்துக்கலாம்’னு சொன்னார். போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தால் மட்டும் போதுமா? மார்க்கெட் கிடையாது. மொத்த விற்பனை நிலையங்களும் இயங்காது. பழக்கடைகளும் இயங்காது. நான் யார்கிட்ட கொண்டு போயி, என்னோட வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியும்?’’ என விரக்தியோடு கேள்வி எழுப்புகிறார்.

இதேபோல கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தக்காளியை விற்பனை செய்வதற்காக, வேளாண் வணிகம் அலுவலர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி விவசாயிகள் சிலர், “எந்த வட்டாரம்னு கேட்டு, அந்த வட்டாரத்தோட வேளாண் அலுவலரோட தொடர்பு எண் கொடுத்தாங்க. அவங்ககிட்ட பேசினதும், `சாகுபடி பண்ணக்கூடிய நிலத்தோட சிட்டா அடங்கல் கொண்டு வந்தால், இ-பாஸ் கொடுப்போம். நீங்களே உங்களோட தக்காளியை விற்பனை செஞ்சிக்கிலாம். உங்ககிட்ட வண்டி வசதி இல்லைனா, மினி டெம்போ வண்டியும் ரெடி பண்ணி தருவோம்’னு சொன்னாங்க. இது எங்களுக்குச் சாத்தியமே இல்லை. தோட்டக்கலைத்துறையே எங்களோட விளைபொருள்களை கொள்முதல் செஞ்சிக்கணும். இல்லைன்னா, வியாபாரிகளை எங்களோட நேரடியாகத் தொடர்பு கொள்ள வைக்கணும். தமிழக அரசு உடனடியாக, இதுக்கு தெளிவாகத் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கணும். இதுக்கு உடனடியாக ஏற்பாடு செய்யலைனா, எங்களோட விளைபொருள்கள் யாருக்கும் பயன்படாமல், குப்பைக்குத்தான் போகும். எங்களோட உழைப்பும் முதலீடும் விரயமாகுறதோட, எங்களோட ஜீவனமே கேள்விக்குறியாகிடும்’’ எனக் கலங்குகிறார்கள் விவசாயிகள்.

தக்காளி

கொடைக்கானல் பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த அசோகன், “கொடைக்கானல் மலையில் விளையக்கூடிய அவரை, பீன்ஸ், கேரட், செளசெள, வாழை, பிளம்ஸ் மற்றும் பூண்டு போன்ற விளைபொருள்களை எங்கு, எப்படி விற்பனை செய்வது என்ற தெளிவான வழிமுறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் கையைப் பிசைந்துகொண்டுள்ளனர். எனவே அரசு, விற்பனைக்கான தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும்” என்கிறார்.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, விளைபொருள் விநியோக சங்கிலியில் எந்த ஒரு துண்டிப்பும் ஏற்படவில்லை. ஊரடங்கின் ஆரம்ப நிலையில் சிறு சிறு சங்கடங்கள் இருந்தாலும் கூட, விவசாயிகள் தங்களது விளைபொருள்களைத் தங்கு தடையின்றி விற்பனை செய்தார்கள். ஆனால் தற்போது விவசாயிகள், செய்வதறியாது தவித்து நிற்கிறார்கள். `எடப்பாடி ஆட்சியே பரவாயில்லை’ என்ற முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Minister M.R.K.Paneer selvam

விளைபொருள்கள் விற்பனை தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய, வேளாண் விற்பனைப் பிரிவு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 16,000-க்கும் மேற்பட்ட நடமாடும் கடைகளும், குறிப்பாக சென்னை மாநகரில் மட்டும் 1610 நடமாடும் விற்பனை கடைகள் மூலமும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி மொத்த விற்பனை நிலையங்களிலிருந்து அரசு இவற்றைக் கொள்முதல் செய்யும். விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை விற்பனை செய்ய அந்தந்த மாவட்டங்களின் வேளாண் விற்பனை அலுவலரைத் தொடர்புகொள்ளலாம். விவசாயிகளுக்கு இதில் ஏந்த ஒரு சிரமமும் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

தொடர்பு எல்லைக்கு வெளியே அரசாங்கம்!

இந்த விஷயத்தில் அரசாங்க அதிகாரிகளின் அக்கறை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு ஒரு சோறு பதம், அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண்தான். ஊரடங்கு காலத்தில் (மே 24 முதல் 31 வரை) அனைத்துக்கடைகளும் அடைக்கப்படும். பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்கள் தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் தமிழகம் முழுக்க விற்பனை செய்யப்படும். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு 044-22253884 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று அறிவிப்புக் கொடுத்துள்ளனர். இந்த எண்ணைத் தொடர்புகொண்டால், `நீங்கள் தொடர்புகொள்ளும் எண் தற்காலிகமாக தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை’ என்கிற பதில்தான் கிடைக்கிறது. இந்தத் துறையின் இணையதளத்திலும் இதே எண்ணைத்தான் கொடுத்துள்ளனர். அதாவது, பல காலமாகவே அரசாங்கமும் அதிகாரிகளும் எந்த அளவுக்குத் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார்கள் என்பதைத்தான் இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்புகொள்ள முடியாத உதவி எண்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.