கோவில்பட்டியில் `பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ என எழுதிவைத்டுவிட்டு கடையில் வாழைப்பழ தார்களை தொங்க விட்டு பழக்கடைக்காரர் ஒருவர்  பசியாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருப்பதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக, எத்தனையோ பேர் வேலை இன்றியும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள். சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள், சாலையோர வியாபாரிகள் என பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. சாலையோரங்களில் தங்குபவர்களும், சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரிபவர்களும் ஒரு வேளை உணவுக்காக திண்டாடி வருகின்றனர். இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மனிதநேயம் மிக்க செயல் ஒன்று அரங்கேறியுள்ளது.

image

கோவில்பட்டி கடலையூர் சாலை சந்திப்பு பஸ் ஸ்டாப் அருகே பழக்கடை வைத்திருக்கும் முத்துப்பாண்டி என்பவர் தனது பூட்டிய கடை முன்பு தினமும் வாழைப்பழ தார்களை தொங்க விடுவதோடு அதற்கு மேல், ஒரு சிலேட்டில், ‘பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்’ பழம் இலவசம் வீணாக்க வேண்டாம் என எழுதியுள்ளார்.

இதையடுத்து, அந்த வழியாகச் செல்பவர்கள் இதை பார்த்து வியப்படைந்தனர். அவ்வழியாக செல்பவர்கள், பாதசாரிகள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் அந்த வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்டுச் சென்றனர். மேலும் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இருப்பதால் அங்கு வருபவர்களில் உணவு கிடைக்காமல் தவிப்பவர்களும் இந்த பழங்களை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர்.

image

தினமும் 4 முதல் 5 வாழைத்தார்களை வைத்துச்செல்லும் முத்துப்பாண்டி, எவ்வித விளம்பரத்தையும் விரும்பாமல் தினமும் தனது பணியை செய்து வருகிறார். ஊரடங்கில் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு, ஏதோ நம்மால் முடிந்த உதவியை செய்யலாம் என்று நினைத்து, இப்படிப்பட்ட ஒரு உன்னத செயலில் ஈடுபட்ட பழக்கடை உரிமையாளருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

– மணிசங்கர் (கோவில்பட்டி நிருபர்)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.