தமிழக தேர்தலுக்கு முன்பாக ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பெட்டியில் வைத்துப் பூட்டிய மு.க.ஸ்டாலின், தான் முதல்வரானதும் இந்த மனுக்களுக்கு 100 நாள்களில் தீர்வளிப்பதாகத் தெரிவித்தார்.

Also Read: `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி எப்படி நடக்கிறது? – லைவ் ரிப்போர்ட்

அதன்படி தி,மு.க ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் புதிதாக, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துரை உருவாக்கப்பட்டு அதன் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட மனுக்களைக் கணினியில் பதிவேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஹாமிம்புரம் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவியான ஆகிலா என்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறுமி எழுதிய கடிதம்

அந்தக் கடிதத்தில், ”நான் வசிக்கும் ஹாமிம்புரம் பகுதியின் 1 முதல் 8 தெருக்களில் உள்ள கழிவுநீர் மற்றும் மனிதக் கழிவுகள் அனைத்தும் ஓடைகள் வழியாக கன்னிமார்குளத்தில் சென்று கலக்கிறது. அதனால் அந்தக் குளத்தின் அருகில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்தைச் சுவாசிப்பதுடன் கொடிய தொற்று நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதால் கழிவுகள் குளத்தில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலப்பாளையம் ஹாமிம்புரம் 3-வது தெருவைச் சேர்ந்த ஷாபி ரகுமத்துல்லாவின் மகளான ஆகிலா, தனது பகுதியில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டி முதல்வருக்குக் கடிதம் அனுப்பியது பற்றி கூறுகையில், “மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்களில் நீண்ட நாள்களாகவே கழிவுநீர் பிரச்னை இருக்கிறது.

சிறுமி ஆகிலா

இங்கு பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், போதிய வடிகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. அதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்காக இங்குள்ள மக்கள் பல தடவை போராட்டங்களை நடத்திய போதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வரிடம் புகார் அளித்தால் 100 நாள்களில் அதற்கு தீர்வு கிடைக்கும் என்று பேப்பரில் படித்தேன். அதனால் எங்கள் பகுதியில் உள்ள இந்தப் பிரச்னையும் சீக்கிரமே தீர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையில் முதல்வருக்கு கடிதமாக எழுதியிருக்கிறேன்” என்றார்.

குளத்தில் கழிவுநீர் கலக்கும் இடம்

எது நடந்தாலும் நமக்கென்ன என்று ஒதுங்கும் மக்கள் அதிகரித்துவரும் சூழலில், தனது தெருவைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக தனியொரு சிறுமியாக கடிதம் எழுதிய ஆகிலாவின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி மகிழ்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.