தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நிறைவேற்றப்படாது, தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும், ஊரடங்கு காலத்தில் இரண்டு தவணையாக ரூபாய் 4,000 நிவாரண நிதி வழங்கப்படும், பெண்களுக்குப் பேருந்துகளில் இலவசம், ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு முன்வரும் நிறுவனங்களுக்கு மானியம் எனப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் மட்டுமல்ல அமைச்சர்களும் துறை சார்ந்த செயலாளர்களும் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகின்றனர். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பு நடவடிக்கையைப் போலவே கல்வி சார்ந்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைக் கவனமாக எடுக்க வேண்டிய சூழலில் தமிழக அரசு இருக்கிறது. கடந்த ஓராண்டாக எந்த வகுப்புகளும் நடைபெறாமல் ஜீரோ கல்வியாண்டாகக் கழிந்த நிலையில் தற்போது 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து விவாதங்கள் ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருக்கின்றன. “தேர்வு நடக்கும்” என்றும் “இல்லை அதை ரத்து செய்ய வேண்டும்” என்ற குழப்பங்களும் ஆங்காங்கே எழுந்துகொண்டிருக்கின்றன.

அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே கொரோனா பரவல் குறைந்த பிறகு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். இது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

Also Read: ப்ளஸ் டூ தேர்வு நடத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்… என்ன காரணம்?

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் பொதுத்தேர்வுகள் குறித்த பேச்சுகள் அவசியம்தானா? தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டுமா அல்லது ரத்து செய்ய வேண்டுமா? அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்…

“தேர்வு நடக்குமா, நடக்காதா, எல்லோரும் தேர்வில் தேர்ச்சி என்று அறிவிப்பார்களாக என்ற குழப்பங்கள் ஏற்படாமல், அதைத் தவிர்க்கவும் முற்றுப்புள்ளி வைக்கவும் தான் கட்டாயம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அரசு கண்டிப்பாகத் தேர்வு நடத்தும் என்பதைத்தான் நாம் தற்போது புரிந்து கொள்ள முடிகிறது. மேல்நிலைப் பள்ளிக்கல்வி என்பது கல்லூரிச் சேர்க்கைக்கான தகுதி. அதற்குத் தேர்வு நடத்தாமல் பொதுவாக அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்று அறிவித்துவிட்டால் எதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தமிழகம் தவிர இன்னப் பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் எதனடிப்படையில் இவர்களுக்கான வாய்ப்புகள் அமையும். அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுமா? அப்படியென்றால் அது மாணவர்களுக்கு இன்னும் கூடுதல் சுமையாகத்தானே அமையும். 11-ஆம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். ஒரு கல்வியாண்டே நடைபெறவில்லை. ஆனால், பாடநூல்கள் வீட்டிற்கே கொடுத்தனுப்பி ஆன்லைன் மூலமோ இடையில் ஒருசில வாரங்களோ வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படியிருக்கும்போது மாணவர்கள் எந்த அளவிற்குப் பாடத்தைப் படித்துப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. எனவே அந்தப் பாடங்களை எந்தளவிற்குப் படித்துப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய தேர்வுக்கு முன் 15 நாட்கள் தொடர் வகுப்புகள் நடத்த வேண்டும். அந்த அடிப்படையில் இப்போதைக்குத் தேர்வு நடத்த முடியாது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

அனைவருக்கும் சமவாய்ப்பற்ற ஆன்லைன் வழியிலும் தேர்வுகள் நடத்தமுடியாது. இன்னும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை தொலைத்தொடர்போ இணைய இணைப்போ முறைப்படி கிடைப்பதில்லை. இணைய வழியில் தேர்வு நடத்துவதும் சாத்தியமில்லை. நோய்த்தொற்று அபாயம் குறைந்திருக்கிறது. தேர்வு நடத்தலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்த பின்னர் தான் நேரடித்தேர்வுகளை அரசு நடத்த முடியும்” என விளக்கினார்.

மேலும், “சுகாதாரத்துறை அறிவித்த பின்னர் தேர்வு நடத்த வேண்டும் என்றால் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது தேர்வு அட்டவணையை அரசு வெளியிட வேண்டும். தேர்தல் நடத்துவதற்கு முன்பாக 15 நாட்கள் வகுப்புகள் சமூக இடைவெளியுடன் நடத்த வேண்டும். அதன்பிறகு தேர்வு எழுதவைப்பதுதான் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல சூழலில் தேர்வு எழுதும் வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் கல்லூரியில் சேர்க்கை நடத்துவதோ கல்லூரிக்கான கல்வி ஆண்டோ தள்ளிப்போகாதா என்ற கேள்வி எழுவது இயல்பது. ஒரு பேரிடர் காலத்தில், ஒரு வைரஸ் உருமாறி பல்வேறு அலைகளாகத் தொற்று மேலும் தொடரும் என்று மருத்துவர்கள் கூறிவரும் வேளையில் கல்வியா உயிரா என்ற கேள்வி எழுகிறது இல்லையா? மாணவர், குடும்பம், சமூக உளவியல் எல்லாம் சேர்ந்தது. இது நிர்வாக ரீதியிலான ஏற்பாடு இல்லை. கல்வியியல் சார்ந்தது. இரண்டு மூன்று கல்வியாண்டு நிச்சயமாகத் தள்ளிப்போகத்தான் செய்யும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளை இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குத் தள்ளி ஆரம்பிக்க வேண்டிய சூழல்தான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து மனித சமூகம் பல்வேறு சிக்கல்களை, பேரிடர்களை மனித சமூகம் கடந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துத்தான் வருகிறது.

மரத்தடி வகுப்புகள்

தொழில்நுட்பம் வளரும் போது அதற்குரிய சவால்களும் அதிகரிக்கத்தான் செய்யும். அவற்றை எதிர்கொண்டுதான் மனிதச் சமூகம் முன்னேறி வந்திருக்கிறது. இன்றைய காலத்தில் நமக்கு இருக்கும் சவாலாகத்தான் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் துணை கொண்டு இந்த நோய்த்தொற்றை எதிர்கொண்டு அதன்பின்னர் தான் தேர்வு நடத்த வேண்டும். ஊரடங்கு முடிந்த பின்னர்தான் கொரோனா எந்த அளவு குறைந்துள்ளது என்பது தெரியும். அதன்பின் ஒருமாதம் கழித்துத்தான் தேர்வு குறித்து யோசிக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.