இன்று அட்சயதிருதியை. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையே அட்சய திரிதியை என்று போற்றப்படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது திரௌபதி சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரத்தைப் பெற்ற நாள் அட்சய திரிதியை என்று சொல்லப்படுகிறது. ‘சயம்’ என்றால் அழிதல். ‘அட்சயம்’ என்றால் அழியாதது அல்லது குறையாதது என்று பொருள். எது அழியாமல் பல்கிப் பெருகுகிறதோ அதுவே அட்சயம் எனப்படும்.

வெற்றிலை

இந்த நாளில் வாங்கும் எதுவும் வாழ்வில் குறைவில்லாது நிறைந்திருக்கும் என்பது ஐதிகம். அதனால்தான் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாகப் பார்க்கப்படுகிறது. காரணம் மகாலட்சுமி தங்கத்தில் வாசம் செய்வதாக ஐதிகம். ஆனால், தங்கத்தில் மட்டுமல்ல… மேலும் பல்வேறு பொருள்களில் அன்னையின் சாந்நித்தியம் நிறைந்து விளங்கிறது. அட்சய திருதியை நாளில் அந்தப் பொருள்களையும் வாங்குவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் சாந்நித்தியத்தை நம் வீட்டுக்கு அழைக்கலாம்.

வெற்றிலையின் மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜபமாலை, வலம்புரி சங்கு. மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், காய்ச்சிய பால், நெய், கல் உப்பு என 108 பொருள்களை மகாலட்சுமியின் சாந்நித்யம் நிறைந்த பொருள்கள் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே முக்கியத்துவமும் வாய்ந்தவை. அன்னையை வழிபடும்போது இந்தப் பொருள்களைக்கொண்டு வழிபடுவது என்பது மேலும் பல நன்மைகளை நமக்கு அளிக்கும்.

இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் கடைகளுக்குச் சென்று தங்கம் முதலியன வாங்க முடியவில்லை என்பதால் வருந்தத் தேவையில்லை. வீட்டின் அருகில் இருக்கும் கடைகளில் மேற்சொன்ன பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்கினாலே அது மங்கலத்தைப் பெருக்குவதாக அமையும்.

மேலும் இந்த நாள்களில் செய்யும் தானத்தின் புண்ணிய பலன் பல்கிப் பெருகும் என்கின்றன சாஸ்திரங்கள். அட்சய திருதியை நாளில் தானம் செய்த திருடன் ஒருவன் அரச வாழ்வு பெற்றான் என்கின்றன ஞானநூல்கள். எனவே அட்சய திரிதியை என்பது நம்முடைய நற்செயல்களால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை, நற்செயல்களை அதிகப்படுத்தும் நாள் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு அட்சய திருதியை சித்திரை கடைசி நாளான இன்று நிகழ்கிறது. சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றிருக்கும் இந்த நாளில் தவறாமல் சூரியனை வழிபடுவோம். ஆதித்ய ஹிருதய பாராயணம் செய்வோம். சூரியனின் அருள் இருந்தால் ஆரோக்கியம் நிறைந்திருக்கும். செல்வ வளமும் சேரும். எனவே இந்த நாளில் அன்னை மகாலட்சுமியை வழிபடுவதோடு சூரிய பகவானுக்குரிய துதிகளையும் சொல்லிப் போற்றினால் இந்த நாள் மிகவும் பயனுள்ளதாக மாறும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.