கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் இதேநேரத்தில், முகோர்மைகோஸிஸ் (Mucormycosis) என்ற மற்றொரு நோயும் பரவலாக பேசுபொருளாகியுள்ளது. இது கொரோனாவுக்கான பக்கவிளைவுகளுள் ஒன்றாக இருப்பதால், இதுசார்ந்த பயமும் சந்தேகங்களும் பலருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கான பதில்களை நமக்கு சொல்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம்.

முகோர்மைகோஸிஸ் என்பது என்ன, இது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி, அவர் தரும் தகவல்கள்:

“இது, கொரோனாவுக்கான பக்கவிளைவுகளில் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இது எல்லா கொரோனா நோயாளிக்கும் ஏற்படாது. மிகத்தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இறுதிகட்ட நிலையில் சிகிச்சை எடுத்து குணமடைவோருக்கு இப்படியான பக்கவிளைவு ஏற்படலாம். அவர்களிலும்கூட, மிகச்சிலருக்குத்தான் இது ஏற்படும். ஆகவே மக்கள் இதுபற்றி பயப்படுவதை தவிர்க்க வேண்டும்.

image

இது எப்படி ஏற்படுகிறது என்று பார்க்கும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உடல்சார்ந்த சிக்கலோடு, கொரோனா மீதான அலட்சிய பார்வை காரணமாக, இறுதி கட்டத்தில் சிகிச்சை எடுக்க ஒருவர் முன் வரும்போது காலம் தாழ்த்திய காரணத்தால் அவருடைய நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அவருக்கு உச்சபட்சமாக நுரையீரல் அலர்ஜி ஏற்படும். அந்த அலர்ஜியிலிருந்து அவர்க்களை காக்க, அவர்களுக்கு அதிகப்படியான ஸ்ட்ரீயாடு மருந்துகள் தரப்படும். பொதுவாகவே ஸ்ட்ரீயாடுக்கென சில பக்கவிளைவுகள் உண்டு. உதாரணத்துக்கு ரத்த அழுத்தம் – சர்க்கரை அளவு சீரற்று இருப்பது போன்றவை ஏற்படும். அப்படியான ஸ்ட்ரீயாடை அளவுக்கதிகமான தரும்போது இந்த பக்கவிளைவுகள் மிகமிக அதிகமாகும். சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்கெனவே கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், பாதிப்பு மிக மோசமாகிவிடுகிறது. இதிலேயே ஏற்கெனவே வாழ்வியல் நோய்கள், இணை நோய்கள் இருந்தால், பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும். இப்படியான சூழலில் நுரையீரலை தாக்கும் கருப்பு புஞ்சைகள், முகோர்மைகோஸிஸ் எனப்படும் அதிதீவிர ஃபங்கஸ் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த அளவுக்கு மோசமான பாதிப்பென்பது, 100ல் ஒருவருக்கு ஏற்படும். இது ஏற்பட்டு குணமாகும் நபருக்கு, கண் சார்ந்த பிரச்னைகள், தோல் நோய்கள் வரலாம். இந்த நோயில், இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. முன்பே சொன்னதுபோல, ஸ்ட்ரீயாடின் பக்கவிளைவுகள் – கொரோனா தாக்கம் அதீதமாக இருப்பது போன்ற காரணத்தால், உடல் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துவிடும். அதனால் இறப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

image

இப்போதைக்கு மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமாக உள்ளது. மகாராஷ்ட்ராவில், இந்நோயினால் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது. இது மறைமுகமாக, அங்கு பாதிப்பு நிறைய பேருக்கு தீவிரமாக இருக்கிறது என்று நாம் புரிந்துக் கொள்ளலாம். இது மருத்துவ கட்டமைப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு போன்றவை குறைவாக இருக்கிறதென்றே நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்தளவுக்கு முதல் நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறோமோ அந்தளவுக்கு அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படாது.

சாதாரண மற்றும் லேசான கொரோனா பாதிப்பு இருப்பவர்களுக்கும் ஒரு சில பக்கவிளைவுகள் சில நாட்களுக்கு இருக்கும். உதாரணத்துக்கு ஆக்சிஜன் குறைவது, ரத்த சர்க்கரை அளவு சீரற்று இருப்பது போன்றவை இருக்கும். தொற்று இல்லையென தெரிந்தவுடன், மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்திலிருந்து அவர்களை காக்க பக்கவிளைவுகள் இருந்தாலும் அவர்களை வீட்டுத்தனிமையில் இருக்க சொல்லி அனுப்புவது இப்போதைக்கு வழக்கத்தில் இருக்கிறது. இப்படி வீட்டுக்கு செல்பவர்கள், தங்களை முறையாக கவனித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் ஆக்சிஜன் தேவை அமைத்துக்கொள்வது, அதை பரிசோதிக்கும் வழிகளை ஏற்படுத்திக் கொள்வது, நேரத்துக்கு உணவு உட்கொள்வது, சரியாக மாத்திரை சாப்பிடுவது என்றிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஆபத்தை அதிகரித்துக்கொண்டால், சிக்கல்தான்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு இணைந்து செயல்படும் கொரோனா நோயாளிகளுக்கு இப்படியான ஆபத்துகள் ஏற்படாது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.