கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில், கடந்த 14மாதங்களில் முதல்முறையாக தினசரி கொரோனா பாதிப்பில் ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. இதேபோல பிரிட்டனில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எப்படி இது சாத்தியமானது என தெரிந்துகொள்வோம்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்த போது, அதனை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது பிரிட்டன்.

கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, 70% வேகமாக வைரஸ் தொற்றை பரப்புகிறது என அறிந்ததும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதால், முழு வீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். அதற்காக சிறப்பு டாஸ்க் போர்ஸையும் அமைத்தார்.

இதனிடையே தடுப்பூசி போடும் திட்டமும் நாடு முழுவதும் தீவிரமாக தொடங்கப்பட்டது. முழு ஊரடங்கிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும் வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்துவதை கட்டாயப்படுத்தினார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிட்டார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததற்கான பலனைத்தான் தற்போது பிரிட்டன் அனுபவித்து வருகிறது.

image

இங்கிலாந்தை பொறுத்தவரை சராசரியாக தற்போது இரண்டாயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு நபர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதேபோல வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. இதனால், படிப்படியாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் தியேட்டர்கள், உணவகங்கள் அனைத்தும் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வரும் காலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும் உருமாறிய கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் இயற்கை காற்றை சுவாசிக்கும் மக்களின் பட்டியலில் விரைவில் பிரிட்டனும் இணையவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.