>தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து சட்டமன்ற கட்சி குழு தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அனைத்து கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ் உள்பட சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் உரிய நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிப்பது, அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளை முற்றிலுமாக நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தி, வழிகாட்டிகளாக நடந்துகொள்வது, மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் அனைவரும் முழு மனதோடு ஈடுபடுவது என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் பல்வேறு தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் அளிக்க முன்வந்துள்ளதாக கூறினார். உற்பத்தி அதிகரித்தவுடன் கூடுதல் ரெம்டெசிவிர் மருந்து அனுப்புவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

>நாளை முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து கொரோனா ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் அறிவுரைகளை பொதுமக்களில் ஒரு சிலர் மீறி நடப்பதால் கொடிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

>சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்சில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆம்புலன்சில் காத்திருக்கும்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதேபோல மேலும் பல மருத்துவமனைகளில் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

>கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை நடைமுறை, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் தொடர்பாக தாமாக முன்வந்து ஏற்ற வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் யாருக்கும் அனுமதி மறுக்கவில்லை என்றும், பிற மருத்துவமனைகளிலிருந்து அனுமதிக்காக வந்து காத்திருந்த நிலையில் சிலர் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி கொள்முதலுக்கு சர்வதேச டெண்டர் விட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெம்டிசிவிர் விற்பனையை சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு கூடுதல் கவுண்ட்டர்களுடன் மாற்றியுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கில், தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், போர்க்கால நிலை போல கருதி, கொரோனா பாதித்தவர்களை ஆம்புலன்ஸ்களில் நிறுத்தி வைக்காமல் மருத்துவமனை வராண்டாகளில் ஸ்ட்ரெக்சர் மூலம் சிகிச்சை அளிக்க யோசனை தெரிவித்தனர். மூடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்தலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை இருப்பதையும், ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்தல்ல என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஓரளவு திருப்தி அடைவதாக தெரிவித்து வழக்கை மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

>தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 30 ஆயிரத்தை கடந்த நிலையில், சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் தொற்று வேகமாக அதிகரித்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப்பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 30 ஆயிரத்து 621 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 93 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 19 ஆயிரத்து 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 98 ஆயிரத்து 945 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது. இணைநோய் இல்லாத 68 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 991 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 835 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 173 பேரும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 331 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 251 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 79 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

>பி.எம் கேர் நிதியில் இருந்து 322 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு

தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் மருந்துகளின் இருப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சமுத்ரா சேது திட்டத்தின் கீழ் கத்தார் நாட்டில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டதாகவும், இந்திய விமானப்படை மற்றும் கடற்படை கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் 6 ஆயிரத்து 260 மெட்ரிக் டன் ஆக்சிஜன், 100 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>முழு ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அனைத்து கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர்கள் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணிகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதாக கூறினார். சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் கருவி இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறினார். இந்தக்கூட்டத்தில், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்எல்ஏ பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள், பாஜக உள்பட 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

>கொரோனா தடுப்பூசி, மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா பரவலால், மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் மேல்வரியால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மாநிலத்தின் கடன் வாங்கும் அளவை உற்பத்தி மதிப்பில் 3 சதவிகிதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

>தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 4.820 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் நாள் ஒன்றுக்கு 6 டன்னுக்கு குறையாமல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நோயாளிகளை காக்க தஞ்சாவூர் மற்றும் நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் வந்தது. தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வந்துள்ளது.

>கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளி 6-8 வாரங்களாக உள்ளது. நிஜ வாழ்வின் ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டித்து டாக்டர் என்.கே. அரோரா தலைமையிலான கோவிட் செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா செயற்குழுவின் பரிந்துரையை கடந்த 12 ஆம் தேதியன்று நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையிலானதேசிய நிபுணர் குழு ஏற்றுக் கொண்டது. இந்தப் பரிந்துரையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை.

>2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனைகள் மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள, கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து முதல் கட்ட ஆய்வக சோதனைகளை முடித்துள்ளது. இதையடுத்து 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்வதற்கும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதித்துள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 525 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு, 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் திருப்திகரமான முடிவு கிடைக்கும் பட்சத்தில் 2 முதல் 18 வயதானவர்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி கிடைக்கும். அடுத்து உருவாக உள்ள 3ஆவது அலை 20 வயதுக்கு கீழானவர்களை அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அப்பிரிவினருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன

>கர்நாடகாவில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் மறு உத்தரவு வரும் வரை இந்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. முன்பதிவு செய்தவர்களுக்கும், அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு செலுத்துவதற்கென மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்த தடுப்பூசிகள், இரண்டாவது டோஸூக்காக காத்திருக்கும் பயனர்களுக்கு பயன்படுத்தப்படும் என்று கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்ட்ராவிலும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு வாங்கப்பட்ட தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் ராஜேஷ் கூறியுள்ளார்.

>கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் எதிரொலியாக மதுரை ரெயில் நிலையத்தில் 31 கொரோனா வார்டு பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா 2 ஆம் அலையின் தீவிரத்தால், மாவட்ட அரசு- தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவருகின்றன. இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் 31 ரயில் பெட்டிகளை கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு ஏதுவான வார்டாக மாற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் 18 படுக்கைகள் வீதம் 31 பெட்டிகளை ரயில் நிலையத்தில் கொண்டுவந்து தயார் நிலையில் நிறுத்தி உள்ளனர். இவற்றில் மருத்துவ உபகரணங்கள் பொருத்த வசதியாக, 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்களும் உள்ளன. ஒரு பெட்டிக்கு 4 கழிவறைகள் , 2 குளியல் அறைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் கேட்கும் பட்சத்தில் இந்த ரயில் பெட்டிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

>பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள், உறவினர்களுக்கு 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் உத்தரவின் படி கொரானா பெருந்தொற்று நெருக்கடி நேரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோயில்களில் இருந்து உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் முதல் நாளில் பிரசித்தி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சார்பில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இரண்டாயிரம் உணவுப்பொட்டலங்களை கோயில் அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர். தினந்தோறும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தினம் தினம் ஒவ்வொரு வகையான சாதம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்ட நிலையில், அதனை ஏராளமான வெளி நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் பெற்றுக்கொண்டனர்.

>கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வசதியும் ஏற்படுத்தித்தரப்படும் என, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் தொழில் செய்ய விரும்பினால், அரசு உத்தரவாதத்துடன் கடன் உதவி பெற்றுத்தரப்படும் என்றும் சவுகான் கூறியுள்ளார்.

>கொரோனா காலத்தில் சித்த மருந்துவ சூரணங்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பைப் பயன்படுத்தி போலி மருந்துகளை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி சித்த மருத்துவ அதிகாரி காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவிற்கு சித்த மருந்துகளான தாளிசாதி சூரணம், கபசுர குடிநீர், அமுக்கரா சூரணம் உள்ளிட்ட மருந்துகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. அதே சமயம் வரவேற்பை பயன்படுத்தி சிலர் போலியான மருந்துகளை விற்பனை செய்வதால், மருந்து நிறுவன பெயர், உரிமத்தின் எண், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இல்லாத மருந்துகளை மக்கள் வாங்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மருந்து விற்பனைக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே விற்க வேண்டும், மீறி போலியான மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது, மருந்து கட்டுப்பாட்டு விதிமுறையின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

>நாடெங்கும் கொரோனா அதிகம் பாதித்துள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் முதல் கூட்டம் மே18 ஆம் தேதியும், இரண்டாம் கூட்டம் 20 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தில் 9 மாநிலங்களை சேர்ந்த 46 மாவட்ட ஆட்சியர்களும் இரண்டாம் கட்ட கூட்டத்தில் 10 மாநிலங்களை சேர்த்த 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்கவுள்ளனர். இதற்கிடையே கொரோனா பாதிப்பு மிகுந்த தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். பரிசோதனைகளையும் தடுப்பூசிகளையும் அதிகரிக்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.

>இந்தியாவில் 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம் தேசிய அளவில் குணமடைவோர் சதவிகிதம் 83.26 சதவிகிதமாக மேம்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 665 ஆக உள்ளது

24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து120 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 58 ஆயிரத்து 317 ஆக உள்ளது. 37 லட்சத்து 11 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவிகிதம் சற்று அதிகரித்து 83.26 சதவிகிதமாக உள்ளது.

>கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த சென்னை பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 52. சென்னை பல்லாவரம் உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் 1996 ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சேலத்தை சொந்த ஊராக கொண்ட இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிண்டி கிங் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈஸ்வரன் கொரோனாவுக்கான தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் போட்டிருந்ததாக கூறப்படுகிறது.

>கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில், கடந்த 14மாதங்களில் முதல்முறையாக தினசரி கொரோனா பாதிப்பில் ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. இதே போல பிரிட்டனில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எப்படி இது சாத்தியமானது தற்போது பார்க்கலாம்.

இங்கிலாந்து கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்த போது, அதனை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது பிரிட்டன்.

கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, 70% வேகமாக வைரஸ் தொற்றை பரப்புகிறது என அறிந்ததும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார். நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதால், முழு வீச்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். அதற்காக சிறப்பு டாஸ்க் போர்ஸையும் அமைத்தார். இதனிடையே தடுப்பூசி போடும் திட்டமும் , நாடு முழுவதும் தீவிரமாக தொடங்கப்பட்டது. முழு ஊரடங்கிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும் வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தனிமைபடுத்துவதை கட்டாயப்படுத்தினார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிட்டார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததற்கான பலனை தான் தற்போது பிரிட்டன் அனுபவித்து வருகிறது.

இங்கிலாந்தை பொறுத்தவரை சராசரியாக தற்போது இரண்டாயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரு நபர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இதே போல வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. இதனால், படிப்படியாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் தியேட்டர்கள், உணவகங்கள் அனைத்தும் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி வரும் காலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும் உருமாறிய கொரோனா பரவல் தொடர்ந்து இருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும் தான் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமல் இயற்கை காற்றை சுவாசிக்கும் மக்களின் பட்டியலில் விரைவில் பிரிட்டனும் இணையவுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.