இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையே கடந்த சில நாள்களாகக் கடுமையான மோதல் நிலவி வருகிறது. அதன் காரணமாக ஜெருசலேம் நகரில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கிழக்கு ஜெருசலேம் மாவட்டத்தில் பாலஸ்தீன மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆனால், யூதர்கள் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்குப் பல வருடங்களாகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாகவே இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. யூதர்களால் தாங்கள் வெளியேற்றப்படுவதை எதிர்த்துப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான பாலஸ்தீனர்கள் தொடர்ந்த வழக்கு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு மையப் புள்ளியாகக் கிழக்கு ஜெருசலேம் கருதப்படுகிறது. இந்த பகுதி யாருக்குச் சொந்தம் என்ற வாதமே இத்தனை வன்முறைகளுக்கும் மூல காரணமாகும். 1967-ம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போரில் கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது. ஆனால், பாலஸ்தீனர்கள் இன்றளவும் கிழக்கு ஜெருசலேம் நகரையே தங்கள் தலைநகரமாகக் கருதுகின்றனர். கடந்த சில மாதங்களாக இருதரப்பினரும் அமைதிக் காத்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் அதிகளவில் அரங்கேற தொடங்கியிருக்கின்றன. கிழக்கு ஜெருசலேம் நகரில் வருடந்தோறும் ரமலான் மாதத்தின் போது யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வெடிப்பது வழக்கம். ஏனென்றால், 1967-ம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இஸ்லாமியர்கள் அதிகப்படியாக வசிக்கும் பகுதிகளின் வழியாக யூதர்கள் கொடி அணிவகுப்பு நடத்துவார்கள்.

இஸ்ரேல் கொடி தின அணிவகுப்பு

அந்த வகையில் இந்தாண்டும் ரமலான் மாத இறுதியில் சொல்லி வைத்தது போல் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை அன்று ஜெருசலேம் நகரில் இஸ்ரேலிய காவல்துறையினர் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.

அல் அக்‌ஷா வழிபாட்டுத் தளத்தில் நடைபெற்ற மோதலில் இஸ்ரேலிய காவல்துறையினர் மீது பாலஸ்தீனர்கள் கற்கள் மற்றும் தீ பொருள்களை வீசிய தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். பதிலுக்கு, இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை வெடிகளை வீசி தடியடி நடத்தித் தாக்குதல் நடத்தினர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பதில் தாக்குதல் தொடுப்போம் என்று காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது. பாலஸ்தீனர்கள் தரப்பில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இஸ்ரேல் காவல்துறையினர் இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றதாகவும், அதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்ட போது இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று முன்தினம் பதில் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இஸ்ரேலிய ராணுவத்தினர் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பினரின் தலைமை அலுவலகத்தைக் குண்டுகளை ஏவி தரைமட்டமாக்கினர். ஆனால், முன்னதாகேவ கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேறி விட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஹமாஸ் அமைப்பினர் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்களின் மீது ஏவி பதில் தாக்குதல் தொடுத்தனர்.

ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகள் இஸ்ரேல் தலைநகர் டெல்-அவிவ் மற்றும் அதன் அண்டை நகரங்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் பலத்த பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. இருதரப்பினருக்கும் இடையே வெடித்துள்ள மோதலால் இஸ்ரேல் கலவர பூமியாக மாறியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.