“அமைச்சர்கள் தங்கள் துறைகளில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் மூத்த அதிகாரிகளும் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

தலைமைசெயலாளர் வெ.இறையன்பு

தமிழக தலைமைச் செயலாளாராகத் தற்போது பொறுப்பேற்றுள்ள இறையன்பு அவர்களால் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “ நான் இப்போதிருக்கும் பொறுப்பின் காரணமாக பள்ளிக்கல்வி துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். ‘நான் எழுதிய நுால்களை எந்தகாரணம் கொண்டும், யார் அழுத்தம் கொடுத்தாலும் நான் தலைமை செயலாளராக பணியாற்றும் வரை வாங்கக்கூடாது’ என்று உத்தராவாகவே சொல்லியுள்ளேன்.

அதே போல் அரசு விழாக்களி்ல் அரசு அலுவலர்கள்யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நுால்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசளிக்க வேண்டாம். இவ்வேண்டுகோளை மீறி அரசு செலவில் என் புத்தகத்தை பரிசளித்தால்,அந்தத் தொகை சம்பந்தப்பட்டவரிடமிருந்து வசூல் செய்து அரசு வசம் ஒப்படைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

முதல்வர் ஒருபுறம் அமைச்சர்களுக்கு கடுமையான கடிவாளங்களை போட்டுவருகிறார். குறிப்பாக அமைச்சர்களின் எண்கள் பொதுமக்களும் அறிந்துகொள்ளட்டும் என சொன்னதே முதல்வர் தரப்பு தானாம். அதேபோல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டபோதே, அவர்களிடம் முதல்வர் “உங்களைநான் நம்புகிறேன். வெளிப்படையான ஒரு சிறந்த நிர்வாகம் வேண்டும். அமைச்சர்களின் அழுத்தங்கள் எதற்கு இடம்கொடுக்க வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால், அதிகாரிகள் சிலர் தலைமைச் செயலாளரை குஷிப்படுத்தும் நோக்கில் சில வேலைகளை செய்துள்ளார்கள். குறிப்பாக அவர் எழுதிய புத்தகத்தை வைத்து சில மூவ்கள் அரசுத்துறைகளில் நடந்துள்ளன. இதில் உஷாரான தலைமைச் செயலாளர் உடனடியாக இதற்கு ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் துறைவாரியாக செயலாளர்களாக உள்ள அதிகாரிகளுக்கும் முதல்வர் அலுவலகத்திலிருந்து சில உத்தரவுகள் போயுள்ளது. குறிப்பாக ‘அமைச்சர்கள் சொன்னார்கள் என்பதற்காக சட்டத்தை மீறி எந்த கோப்பிலும் கையெழுத்திட வேண்டாம். ஒருவேளை அமைச்சர்கள் தரப்பில் அழுத்தம் வந்தால் முதல்வர் அலுவலகத்தில் சொல்லுங்கள்’ என்று சொல்லியுள்ளார்கள்.

தமிழக அமைச்சரவை

இதற்கு முன்பெல்லாம் தி.மு.க ஆட்சயில் அமைச்சர்கள் அதிகாரம் கொடிக்கட்டி பறக்கும், ஆனால் இந்த முறை முதல்வர் கண்காணிப்பில் அதிகாரிகள் அதிகாரமே உச்சமாக உள்ளது என்கிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்களே “அதிகாரிகள் மூலம் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டுத்தான் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் நிலை உள்ளது” என்கிறாரகள். கிட்டத்தட்ட ஜெயலலிதா காலத்து பாணியில் அதிகாரிகளுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்விளைவுதான் தலைமை செயலாளர் தனியாக அறிக்கை விடக் காரணமும்.

“அனைவரும் ரெட் அலர்ட்டில் விழிப்புடனே இருந்தாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். விரைவில் துறைரீதியான அதிகாரிகள் மாற்றம் இருக்கப்போகிறது. அதற்குப்பிறகு, அரசு இயந்திரம் இன்னும் வேகம் எடுக்கும்” என்கிறார்கள் தலைமை செயலகத்தில் உள்ள அதிகாரிகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.