கொரோனா விரைவு செய்திகள்:- உச்சத்தில் தினசரி கொரோனா உயிரிழப்பு முதல் பழக்கடைக்கு அனுமதி வரை

1. கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக வழங்கப்படவிருக்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமையும் விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 2 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. முதல் தவணை விநியோகம் வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

2. தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் போது, உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஒருநாளைக்கு 850ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் IHME தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே தற்போது கொரோனா தொற்றின் வீரியத்திலிருந்து மக்களை காக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்களின் மாதிரிகளும் மே மையத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றே கூறுகிறது. எனவே மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

3. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் 3ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பாதித்தோர் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு கவலையை ஏற்படுத்துவதாகவும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பரவும் வேகம் 2 வாரமாக அதிகரித்திருப்பதாகவும் லவ் அகர்வால் கூறியிருக்கிறார்.

4. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சித்த மருத்துவ மையம் நிறுவப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கொரோனா சிகிச்சை மையத்தில், சித்த மருத்துவ மற்றும் ஆங்கில மருத்துவ வசதியுடன் கூடிய தலா 70 படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

5. தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொழில்வழிகாட்டி மைய அலுவலகத்தில் இந்த சேவை மையம் இயங்கும் என்றும் 9877107722, 9994339191, 9962993496 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், இதுவரை இல்லாத அளவாக உயிரிழப்பு 300-ஐ நெருங்கியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப்பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 25 பேர் உட்பட 29 ஆயிரத்து 272 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 14 லட்சத்து 38 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 2 சிறார்கள் 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே நாளில் 19 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 60 ஆயிரத்து 150 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 298 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது. இணைநோய் இல்லாத 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முன் எப்போதும் இல்லாத அளவாக சென்னையில் அதிகபட்சமாக ஒரேநாளில் 92 பேர் மரணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 466 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 650 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 419 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 204 பேரும், மதுரை மாவட்டத்தில் ஆயிரத்து 24 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 925 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

7. கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றி வரும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு தொடர்கிறது.

சென்னையைத் தொடர்ந்து திருச்சி, மதுரை என விற்பனை நிலையங்களை அதிகரித்தாலும், ரெம்டெசிவிர் தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சென்னைஊரடங்கு நேரத்திலும் அலைமோதும் மக்கள் கூட்டம். இரவு பகல் பாராமல் காத்திருக்கும் நிலை. சாலையிலேயே படுத்துறங்கும் அவலம். சென்னையைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களில் விற்பனை தொடங்கி 3 நாட்கள் கடந்தும், இதே நிலைதான் தொடர்கிறது.

பிற மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியதால் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் சற்று குறையத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக வரிசையில் காத்திருந்தவர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு, அந்த வரிசையின் அடிப்படையில், அவர்கள் கொண்டுவந்துள்ள ஆதார் எண்கள் குறித்துக் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு டோகன்கள் வழங்கப்பட்டு ரெம்டெசிவர் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன் கிழமை முதல் வரிசையில் காத்திருந்த நபர்கள், இன்றையதினம் மருந்துகளை வாங்கிச்செல்கின்றனர்.

விற்பனை நிலையங்கள் மட்டுமல்ல, மருந்து விநியோகமும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும், முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

8. மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்சிஜன் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் வேகமெடுத்திருப்பதால், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் நோயாளிகள் பலர் உயிரிழக்கும் சூழல் அதிகரித்துள்ளது என்றும், இதற்கு ஆக்சிஜன் நிறுவனங்கள் தனியார் வசம் இருப்பதே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, நாடு முழுவதும் மருத்துவ அவசரநிலையை பிரகடனம் செய்து, ஆக்சிஜன் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

9. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிய நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிசன் படுக்கைகள் நிரம்பியதால் கொரோனா நோயாளிகள் வெளியே காத்திருக்கும் அவலம் நிலவுகிறது.

கொரோனா மையத்தில் வாசலிலேயே படுத்திருக்கும் ஆண்கள். பெண்கள். மூச்சுத்திணறலால் மயங்கிய கணவரை மடியில் கிடத்திக் கொண்டிருக்கும் நீவி விடும் மனைவி, காய்ச்சல் வேகத்தில் உட்கார முடியாமல் படுத்திருக்கும் பெண்கள். இவர்கள் அனைவரும் கொரோனா பாதித்தவர்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 325 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டநிலையில், படுக்கை கிடைக்காமல் தவிக்கிறார்கள் இந்த நோயாளிகள்.

10. கோவை அரசு மருத்துவமனையில் முன் பதிவு செய்த பின்னரே ஆக்ஸிஜன் படுக்கைகள் ஒதுக்கப்படுவதால் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் வாகனங்களிலேயே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர தேவைக்காக வரும் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதிகள் இன்றி அவசர ஊர்தியிலேயே மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிருக்குப் போராடும் மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

11. தமிழகத்தை விட சற்று குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலத்திற்கு, தமிழகத்தை காட்டிலும் அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மே 7ஆம் தேதி நிலவரப்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு எத்தனை தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 7கோடியே 62லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு, மே 7ஆம் தேதி வரை 72லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை காட்டிலும் சற்று குறைந்த மக்கள் தொகைக் கொண்ட குஜராத்திற்கு, ஒரு கோடியே 39லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல 6கோடியே 66லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவிற்கு ஒரு கோடியே 6லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பியுள்ளனர். தமிழகத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைக் காட்டிலும் சற்றே அதிகமாக மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழகத்தைக் காட்டிலும் இரு மடங்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது, மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

12. கொரோனாவால் மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில், பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசிகள், உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு உள்ளிட்ட கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டும் நன்கொடை பயன்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். இணைய வழி அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமும் பணப் பரிமாற்றத்துக்கு வங்கிக் கணக்கு விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்குக்கும் நிவாரண நிதி அனுப்பக்கோரி கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக நேரடியாக முதலமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்படும் நன்கொடை மற்றும் செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

13. கடந்த மார்ச் முதல் வாரத்தில் சராசரியாக 3.42 விழுக்காடாக இருந்த தலைநகர் சென்னையின் தொற்றுப் பரவல் தற்போது 26.6 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

ஒரு நாளில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது அதில், எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதை அறிவதன் மூலம் தொற்று உறுதியாகும் விகிதம் கிடைக்கிறது. கடந்த மார்ச் 11 ஆம் தேதி 11,523 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. அப்போது இருந்த தொற்றுப்பரவல் விகிதம் 3.42 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஏப்ரலில் தொடர்ந்து அதிகரித்து தற்போது 26.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

சென்னையில் தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டால் அதில் 26 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகி வருகிறது என்பதை உணர்த்துகிறது இந்த தொற்றுப்பரவல் எண்ணிக்கை. பரிசோதனைகளின் எண்ணிக்கை குறையக்குறைய தொற்றுப்பரவல் விகிதம் அதிகரிக்கவே செய்யும்.

14. மாட்டுச்சாணத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டால் கொரோனா வராது என்ற மூட நம்பிக்கையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலர் மாட்டுச் சாணக் குளியல் எடுத்துவருகிறார்கள். இதனால், வேறுவித தொற்றுகள் வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

15. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.