1980களில் நடப்பதாக இக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. தென்கொரிய, அமெரிக்க கலப்பு குடும்பம் ஜாக்கோப்பினுடையது. கொரியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் தொலை தூர கிராமமொன்றில் தன் மனைவி மற்றும் மகன், மகளுடன் குடிபெயர்கிறார் நாயகன் ஜாக்கோப். 80களின் கொரிய யுத்தத்தின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட சில கொரிய குடும்பங்கள் அக்கிராமத்தில் ஆங்காங்கே சிதறி குடிபெயர்ந்து வாழ்கின்றன. ஜாக்கோப்பிற்கு ஒரு பெரிய விவசாய நிலத்தை உருவாக்கி விளைவித்து அதன் மூலம் பொருளீட்ட வேண்டும் என்று ஆசை. ஜாகோப்பின் மனைவி மோனிகாவிற்கு அதில் உடன்பாடில்லை. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இந்த சண்டையை அடிக்கடி பார்த்து பயப்படுவதால் இவர்களது மகன் டேவிட்டிற்கு இருதய நோய் உருவாகிவிடுகிறது. எந்த பின்புல ஆதரவும் இல்லாமல் தன் விவசாயக் கனவை துரத்தும் ஜாக்கோபின் விளை நிலம் துளிர்த்ததா அவரது வாழ்வு மலர்ந்ததா என்பது மீதி கதை.

image

அதே நேரம் இதனை ஒரு குடும்ப ட்ராமாவாக மட்டுமே சுருக்கி விடவில்லை இயக்குநர் ‘லீ ஐசக் ச்சூங்’. கொரிய – அமெரிக்க அரசியலை வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியே அவர் பேசிச் செல்கிறார். பல இடங்களில் அமெரிக்கர்களை முட்டாள்கள் என நேரடியாகவே விமர்சிக்கிறார் இயக்குநர். அதற்காக நாயகன் ஜாக்கோப்பின் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். மூட நம்பிக்கைகள் இல்லாத அவன் தனது தன்னம்பிக்கை மற்றும் முயற்சியினையே பெரிதாக நம்புகிறான். அக்கிராமத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் கடவுள் பெயரால் செய்யும் மூட செயல்களை நேரடியாக கிண்டல் செய்கிறான் ஜாக்கோப். இப்படியாக சொந்த நிலத்திலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட ஒரு குடியானவனின் வாழ்வை, அவனது மனஓட்டத்தை அழுத்தமாகப் பேசுகிறது மினாரி எனும் இந்த கொரிய சினிமா.

ஜாக்கோப்பின் மகன் டேவிட்டாக நடித்திருக்கும் சிறுவன் படத்தின் பெரும் பலம். ‘ஆலன் எஸ் கிம்’ எனும் அச்சிறுவன்தான் டேவிட்டாக நடித்திருக்கிறார். தன் தாய் தந்தை சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியாகட்டும், தனது பாட்டியிடம் குறும்பு செய்யும் காட்சியாகட்டும், அப்பகுதியில் இருக்கும் அமெரிக்க சிறுவர்களுடனான அவனது நட்பாகட்டும், அவனது புன்னகையாகட்டும் அனைத்தும் இனிப்பு. மினாரி இலைகளில் தவழ்ந்து செல்லும் காற்றைப் போல ‘ஆலன் எஸ் கிம்’ இக்கதைக்கு தனது இதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

image

நாயகன் ஜாக்கோப்பாக நடித்திருப்பவர் ஸ்டீவன் இயூன். இவரது மனைவி மோனிகாவாக நடித்திருக்கிறார் ‘ஹான் ஈ ரீ’. இருவரும் நல்ல தேர்வு. இவ்விருவருக்கும் இடையிலான உரையாடல் பகுதியை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் “நாம கல்யாணம் பண்ணிக்கும் போது என்ன பேசிக்கிட்டோம்., ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கனும்னு தானே இப்போ அதுதான் நடக்குதா…?” என வெறுமை பொங்க உரையாடுகிறார்கள் இருவரும். ஜாகோப் சொல்கிறார் “பணம் சம்பாதிச்சு நாம சந்தோசமா இருக்கலாம்” இதற்கு அவரது மனவியிடமிருந்து “அப்போ நாம ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்க போறதில்லை, இந்த பணம் தான் நம்மள பாத்துக்கப் போகுதா…?” என்ற பதில் வந்து விழுகிறது. இப்படியாக ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிட்டுச் சொல்ல ஏதோ ஒன்று இப்படத்தில் இருக்கிறது.

image

சரி அதென்ன மினாரி என்கிறீர்களா…? மினாரி என்பது கொரியாவில் விளையும் ஒரு வகை தாவரம். நீர்நிலையில் படரும் அந்தத் தாவரத்தின் விதைகளை கொரியாவில் இருந்து தன் மகள், பேரன் பேத்திகளுடன் வாழ வரும் மூதாட்டி சூன்ஜா எடுத்து வருகிறார். டேவிட் மற்றும் அவனது அக்கா அன்னேயின் பாட்டி சூன்ஜா. இக்கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யூன் யூ ஜங். அவள் ஒரு கவிதை போல இந்த சினிமாவில் வந்து போகிறாள். இந்தக் கவிதையின் நடிப்பிற்காக ஆஸ்கர் விருதும் கிடைத்தது. கொரியாவின் மினாரி செடிகளை ஐக்கிய அமெரிக்க கிராமத்தின் நிலத்தில் ஒரு நீர்நிலை அருகில் வளரச்செய்யும் பாட்டி தனது பேரன் டேவிட்டிடம் சொல்கிறாள் “மினாரி மினாரி மினாரி, இந்த மினாரி எல்லா நிலத்திலும் விளையும், எல்லா மக்களின் பசியை போக்கும், உற்சாகத்தை தரும், தாகத்தை தீர்க்கும்., – மினாரி மினாரி மினாரி” என்கிறாள். அந்த மினாரியைப் போலத்தான் புலம் பெயர்ந்து வந்த ஜாக்கோப்பின் குடும்பம் புதிய நிலத்தில் தன் வேர்களை பதிக்கப் போராடியது….!

image

கடந்த ஆண்டு உருவாகி திரைக்கு வந்த இப்படம், இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது. ஆஸ்கர் விருது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளை இப்படம் வாங்கிக் குவித்திருக்கிறது.

மினாரி மினாரி மினாரி – இருநாட்டு அரசியலை, புலம்பெயர் குடும்பங்களின் வலியை, போராடும் இளைஞனின் மன ஓட்டத்தை இன்னும் பல்வேறு விசயங்களை அழுத்தமாகப் பேசியிருக்கிறது இந்த மினாரி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.