தமிழகத்தில் நாளை முதல் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் எவையெல்லாம் இயங்கும் எனப் பார்க்கலாம்.

மே 10 முதல் மே 24 வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில், தனித்து இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், கூரியர் சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதோடு, மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆய்வகங்கள், அவசர மற்றும் அமரர் ஊர்தி சேவை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்கள், பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் விளை பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு உரம், விதை, பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12மணிவரை இயங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரங்களில் ஸ்விக்கி, ஸோமோட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஊரடங்கு காலத்தில் அம்மா உணகவங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

காய்கறி, பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணிவரையும் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரையும் செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு சேவை வழங்குவோர் அடையாள அட்டை, ஆவணங்களுடன் சென்றுவர அனுமதி வழங்கப்படும் என்றும் நீதித்துறை, நீதிமன்றங்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் செயல்பட தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையின்றி செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதி வழங்கும் நடைமுறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது, சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்திற்கு தொழிலாளர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவர் என்றும் பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஊரடங்கு காலத்தில் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீட்டு நிறுவன சேவைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.